திங்கள், 1 ஜூன், 2009

இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு


அப்பாடா, ஒரு வழியாக ஊருக்கு கிளம்ப போகிறோம். சென்னையிலிருந்து துபாய் வந்து 6 மாதமாகி விட்டது. பெற்றோரைப் பார்க்க முடியவில்லை, மனைவியை பார்க்க முடியவில்லை. அதைவிட என் அருமைக்குழந்தையை பார்க்க முடியவில்லை. என்ன செய்ய வீட்டுக்கடன் இருக்கே,. இந்தியாவில் இருந்தால் 20 வருஷம், இங்கேன்னா ஒரே வருஷம். ஓட்டிதானே ஆக வேண்டி இருக்கு,..

பெட்டியை எடுத்து வச்சாச்சு.அப்பாவிற்கு வாங்கிய சுகர் மெசின்னயும், மனைவிக்கு இங்கே வாங்கிய அந்த 24 கேரட் நகையை எடுத்து வச்சாச்சு. மகனிற்குதான் கொஞ்சம் தேடி அலைந்து அந்த அசல் போலவே இருக்கும் அந்த ஏரோபிளெனை வாங்கினேன். நான் சென்னையில் இருந்து கிளம்பும்போது ஏர்போர்ட்டில் அவன் அழவே இல்லை. அவன் வானத்தில் பறந்து போகும் அந்த ப்ளைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே சிரிப்புதான். வீட்டிற்கு அவர்கள் என்னை வழி அனுப்பி சென்றபின் என்னைக் காணாமல் இரவு பூரா அவன் அழுது கொண்டே இருந்திருக்கிறான். இப்போது என்னை மறந்தேவிட்டதாக என் மனைவி சொல்லுகிறாள்.

நான் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். காரணம் அவன் என்னை விட்டே பிரியமாட்டான். நான் சென்னையில் office கிளம்பும்போது அவன் தூங்கி கொண்டிருப்பான். நான் சத்தமில்லாமல் ஓடிவிடுவேன். மாலை நான் வந்ததும் என் மீது தாவி ஏறுவான். அப்பா, அப்பா என நொடிக்கொரு முறை சொல்லுவான். நான் கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது என் தொடை மடியில் உட்கார்ந்து கொள்வான். கண்டிப்பாக அது என் வலது தொடையாக இருக்கும். உடனே என் மனைவி கத்துவாள். "டேய் அவரை சாப்பிடவிடேண்டா".

காலையில் சென்னையில் இறங்கியவுடன் பார்த்துக் கொள்கிறேன், என்னை எப்படி மறந்து இருப்பான் என்று. நான் போனவுடன் கையை தூக்குவேன்,.. "அப்பா" என்று ஓடி வருகிறானா, இல்லையா என்பதையும் பார்த்து விடுகிறேன். அவன் வந்தவுடன் அவன் வயிற்றில் கடிக்கவேண்டும், அவனிற்கு வலிக்காத மாதிரி.

அப்பாடா ஒரு வழியாக ப்ளைட்டில் வந்து உட்கார்ந்தாச்சு. விமான பணிப்பெண் பார்த்து சிரித்தாள். உதட்டில் அழகான புன்னகை இருந்தது. அவள் கண்களில் என் கருமை நிறத்திற்கு வெள்ளையர்கள் தரும் மரியாதை நன்றாக ஒட்டிக்கொண்டிருந்தது. நான் முன்னால் இருந்த புத்தகத்தின் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

"ட்ங்க் ட்ங்க்,.."

நிசப்தம். அப்பாடா ப்ளைட் கிளம்பிருச்சு போல இருக்கு,..

"ட்ங்க் ட்ங்க்,."

மீண்டும் நிசப்தம், "டேய் ப்ளைட்டை கிளப்புறேன்னு சொல்லுங்கடா,".. மனதிற்குள் நான்.

"ட்ங்க் ட்ங்க்,."

"சார்,."

இதென்ன குமாரின் குரல்,..அவனும் ஊருக்கு வர்ரான்னா,.. திரும்பினேன்.

"ஓ மை காட்"

குமார் என்னை பார்த்து சிரித்தான்,..
.
"சார்,. ரொம்ப நேரமாய் காலிங் பெல்லை அடிச்சிட்டுருக்கேன், வண்டியில் ஜாகிரும், இஸ்மாயிலும் உட்கார்ந்திட்டுருக்காங்க,.."

"சாரி குமார் தூங்கிட்டேன், அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்"

பாத்ரூம் ஸவரை போட்டேன். அதற்கு முன்னாலேயே தாரை தாரையாக வந்துகொண்டிருந்தது என் கண்களில் இருந்து கண்ணீர். ஸவரின் சத்ததில் என் அழுகை வெளியில் கேட்டிருக்க நியாயமில்லை.