பின்னூட்டங்கள் கல் மாதிரி. ஒரு பதிவரை சிலையாகவும் வைக்கும், இல்லையென்றால் அவரை வெறுப்பேற்ற அவர்மீது வீசி எறியப்படும் சிறுகல்லாகவும் பயன்படும். ஆரோக்கியமான விவாதத்தில் பங்கு பெறுகிற பின்னூட்டங்கள் பல நேரங்களில் பதிவை தூக்கி சாப்பிடுகின்றன. ஒரு வண்டிக்கு எப்படி பெட்ரோலோ அது மாதிரி பின்னூட்டங்கள் ஒரு பதிவிற்கு. இன்னும் பல பதிவர்கள் ஹிட்டை பற்றி கவலைப்படாமல் வாரம் 3 பதிவெழுதும் ரகசியம், யாரோ ஒரு புண்ணியவான் அவன்(ர்) பொன்னான நேரத்தை அவர்களின் பதிவுகளில் செலவிட்டு அவர்களின் பார்வையை பின்னூட்டமாய் விட்டு செல்வதால்தான்.

ஆனால் ஆரோக்கியமற்ற பின்னூட்டங்கள்?? இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் சண்டைகள் வருவதற்கு காரணம் ஒன்று தேவையில்லாத பின்னூட்டமாக இருக்கிறது, இல்லை பதிவரின் ஈகோவாக இருக்கிறது. தவறெனத் தெரிந்தும் "ஆம் நான் சொன்னது தப்புதான், நான் எழுதியது தப்புதான்" என ஒப்புக்கொள்பவர்கள் கம்மிதான். சில பின்னூட்டங்கள் பல பதிவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதுவே பெண்கள் எனும்போது அந்த கோபம் அவர்கள் குழந்தைகளையும் தாக்கும் வாய்ப்பிருக்கிறது. சில பதிவர்கள் வேலை செய்யமுடியாமல் வீட்டிற்கு வந்து பின்னூட்டத்திற்கு பதில் சொன்ன கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது. முன்பு போல் அன்னானிகள் இப்போது பங்கெடுப்பதில்லை. ஆனால் வித்தியாசமான பெயரில் முகவரியில்லாமல் இப்போது அவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். எதற்காக முகம் காட்ட பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. பின்னூட்ட சண்டைகளால் துரதிர்ஷடவசமாக நல்ல பதிவர்கள் பதிவுலத்தை விட்டே சென்று இருக்கிறார்கள்.

சிலர் கண்டிப்பாக எல்லா பின்னூட்டங்களுக்கும் (அவை 100 இருந்தாலும்) பதில் சொல்வர். ஸ்மைலிக்கு கூட " நன்றி பாஸ்கர்" என பதில் சொல்வது ஆச்சர்யம்தான். ஆனால் நன்றி வேண்டி யாரும் பின்னூட்டம் இடுவதில்லை. என்னைப் பொறுத்தவரை பதில் சொல்லப்படா பொறுப்பான பின்னூட்டங்கள் அவமானமே. இன்றைக்கு பதிவுலகம் இருக்கும் ஸ்டைலிற்கு இது வேலைக்கு ஆகாது எனத்தெரியும். இருந்தாலும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னூட்டம் கண்டிப்பாக இட்டு செல்ல வேண்டும் என பெரும்பாலான பதிவர்கள் நேரிடையாக கேட்பதுண்டு. என் சக தோழர் பதிவில் மிரட்டியே வைத்திருப்பார்.
“ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!”
“உங்கள் மனதில்பட்ட கருத்துக்களை யார்மனமும் புண்படாமல் சொல்லி ஊக்கப்படுத்தும் அன்புநெஞ்சங்களுக்கு நன்றி!”
"வந்தீங்க, படிச்சீங்க
சும்மா பாத்துட்டு போகாதீங்க
புடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க
புடிக்கலைனாலும் எழுதுங்க "
இப்படி அழகு அழகாய் நிறைய,..
வடை எனக்கு
கலக்கிட்டீங்க
அருமையான பதிவு
நச் பதிவு
உள்ளேன் ஐயா
நல்லாயிருக்கு
வாங்க தல
பட்டைய கிளப்பிட்டீங்க
படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்
இல்லையென்றால் வார இறுதி நாட்களிலோ (??) இல்லை அலுவலகத்தில் நீங்கள் அவசர அவசரமாக டைப் அடிக்கும்போதோ கீழே கண்டவாறு கீபோர்டு சொதப்பி விட்டு விடும்,. சாக்கிரதை
படை எனக்கு
கலங்கிட்டீங்க தல
அறுவையான பதிவு
நொச் பதிவு
உள்ளேன் ஆயா
நாலாயிருக்கு
வீங்க தல
பாடைல கிளம்பிட்டீங்க
குடிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்
இந்த மாதிரி மாத்தி எழுதினா என்னவாகிறது?? கதையே கந்தலாகிவிடும் இல்ல? அப்புறம் என்ன? பதிவுலக சண்டைதான்.