சனி, 13 பிப்ரவரி, 2010

கல்யாண ஆல்பம் பார்க்கலாமா?



ம்ம்,.. எல்லாத்தையும் எடுத்து வெச்சாச்சு. அம்மாவிற்கு என ஒன்று, அப்பாவிற்கு, மனைவி, குழந்தை, தம்பி என அனைவருக்கும் கேட்டு விரும்பி சாக்லெட், பிஸ்கட், காபிதூள், ஷூ என எல்லாத்தையும் எடுத்து வெச்சாச்சு. குடும்பத்தை பார்த்து 8 மாதமாய் ஆகிவிட்டதில்லையா.

என் மகன் முன்னை மாதிரி இல்லை. என்னை "web cam" மூலம் நன் கு அடையாளம் கண்டு கொண்டுவிட்டான். மற்ற குழந்தைகள் அவர்கள் தன் தந்தையுடன் போகும் அழகைப் பார்க்கும் போது, பாவம் குழந்தை உள்ளுக்குள்ளேயே பொருமுகிறது.அவன் வயது சிறுவர்களிடம் "அப்பா நாளைக்கு வந்திருவாங்க, நானும் பைக்குள போவேனே" என்று விளக்கம் வேறு. இப்போது தினமும் கேட்கிறானாம் "அப்பா நாளைக்கு வந்திருவாங்கல்ல?? சில நேரங்களில் தனித்து இருக்கும் போது என்ன மொழப்பு என தோணும். வீட்டுக்கடன் கண்முன்னே வந்து நிற்கும் போது எல்லாம் போய்விடும்.



குழந்தை ரெண்டு மாதம் இங்கே கத்தாரில்தான் இருந்தான். வீட்டுக்காரம்மா பரிட்சை இருக்குன்னு சென்னை போய்ட்டாங்க,.. அதனால மறு படியும் வனவாசம். சில நேரங்களில் கணிப்பொறியில் உள்ள அவன் வீடியோக்களை பார்த்து ரசிப்பது உண்டு. சில நேரங்களில் அதையும் தாண்டி தனிமை வாட்டும். பீரோவை திறந்து அவன் மடித்து வைத்த துணிகளை கலைத்துப்போட்டு மறுபடியும் அடுக்குவேன். அப்பனுக்கே உள்ள இந்த தனிமை வேதனை நினைத்துப் பார்ப்பது கடினம். அதைவிட மனைவியைவிட்டு பிரிந்து இருக்கிற சோகம். அதை எழுத்தில் கொண்டுவருகிற அளவிற்கு எனக்கு திறமை இல்லை. காலை விமான நிலையத்திற்கு வருகிறேன் என சொல்லி இருக்கிறாள். கண்டிப்பாக மகனையும் தூக்கிக் கொண்டு வருவாள். பார்க்கலாம், எப்படி தாவி வருகிறான் என்று. என் மனைவி கூட போன வருடத்திற்கு நான் வாங்கி தந்த ரோஸ் நிற சல்வார் போட்டு வருகிறேன் என சொல்லி இருக்காள். அவளையும் பார்க்க வேண்டும். உடம்பு ரொம்ப இளைத்துவிட்டதாக மாமியார் சொன்னார்கள். என்னை பார்க்காமல் இருக்கிற காரணமாய் கூட இருக்கலாம் (காமெடிதான் ஆனால் ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம்) .

ம்ம்ம்ம்,. எப்படியோ ஓடிவிட்டது ஒரு வருடம். ஆனால் இப்படி குடும்பத்தைவிட்டு பிரிந்தது இல்லை. எப்படிதான் அமெரிக்கா போகிற நண்பர்கள் மூணு வருடம், நாலு வருடம் இப்படி கழித்து வருகிறார்கள் என தெரியவில்லை. கொடுமையடா சாமி. வெளி நாட்டு வாழ்க்கை சுகமானது இல்லை. சுமையானது.

ஒரு வழியாய் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு விமானத்திற்குள் வந்தாச்சு. விமானத்தில் ஊருக்கு போகிறோம் என நினைத்து உட்கார்ந்திருக்கிற இந்த சுகத்தை வர்ணிக்கமுடியாது.எப்படா ஊர் வந்து சேரும் என இருக்கிறது. விமான பணிப்பெண் விகாரமாய் தெரிகிறாள்,

"விஸ்கி வேணுமா சார்?"

" வேணாம்"


ஸ்கீரினில் ஓடுகிற படம் ஜவ்வாய் இழுக்கிறது.

சீட்டில் உட்காரமுடியவில்லை. பக்கத்திலிருக்கிறவன் செம குறட்டை. ஏற்கனவே எனக்கு ஊருக்கு போற சந்தோசத்துல தூக்கம் வரல, இதுல இவன் வேற,..

ஒரு வழியாய் பத்திரமாய் தரை இறங்கியாச்சு. ஒவ்வொரு முறை விமானம் ஏறும் போதும் இன்ஸூரன்ஸ் பற்றி நினைப்பது வெளி நாட்டு இந்தியர்களுக்கே உரிய வழக்கம். அதில் நானும் விதி விலக்கல்ல,. ஏறும் போதும் இறங்கும் போதும் இன்ஸூரன்ஸ் நினைப்புகள் தவிர்க்க முடியவில்லை. அபச குணம்தான்,. இருந்தாலும் தவிர்க்க முடியாத நினைப்புகள் இவை.

காலை 5 மணி. முதலில் போனால்தான் முதலிலேயே சோதனைகளை முடித்துவிட்டு வரமுடியும். கொஞ்சம் லேட்டாக்கினால் அவ்வளவுதான் கூட்டம் உள்ளே புகுந்துவிடும், அடித்து பிடித்து முடித்துவிட்டேன்.

பாவம், எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து வந்திருப்பார்கள் எனத்தெரியவில்லை. காத்திருப்பார்கள், வெளியே வந்தேன். காணவில்லை. வேறு எங்காவது தேடிக் கொண்டு இருப்பார்களா என தெரியவில்லை. எங்கும் காணோம். போன் பண்ணினால் switch off. இவள் எப்பவுமே இப்படிதான் பேட்டரி சார்ஜ் பண்ணவே மாட்டாள்.

வீட்டிற்கு போன் பண்ணினேன்.

"என்னங்க, வந்திட்டுங்கிளா,.. சாரிங்க, தூங்கிட்டேன்"
"@#%$%$%$ ^%&#^%&"
"தூங்கிட்டேன் சொல்றேன்ல"
"@#%$%$ $%$!%$ %!%$!%4 @#%$%$%$ ^%&#^%&"
டொக்,.. போன் வைக்கப்பட்டு இருந்தது.
கோபம் தலைக்கேறியது.

ஆட்டோவைப் பிடிச்சு உட்கார்ந்தாச்சு. சென்னை காத்து சில்லென்றுதான் இருந்தது. ஆனால் மனசுதான் சூடாக இருந்தது. போய் வச்சிக்குறேன். ரொம்பதான் பண்றா,.. பார்க்கலாம். சண்டைலாம் போடக்கூடாதுன்னுதான் இருந்தேன். என்ன பண்றது. ஒரு வருடத்திற்கு முன்பே பிளான் பண்ணியது. எப்படிதான் தூக்கமோ??

ஆட்டோ கேட்டில் நின்னது. மகனும், அத்தையும் நின்று கொண்டிருந்தார்கள். மகன் என்னைப்பார்த்ததும் தாவி வருவான் என நினைத்தேன். வர வில்லை.
"ப்பா, அம்மா அழுகுறாங்க"
ஸ்ஸ்ஸ்,. கிளம்பியாச்சுடா,.. அது எப்படிதான் இப்படி சொல்லிவச்ச மாதிரி அழுகுறாளோ தெரியல, சாவித்திரியெல்லாம் பிச்சை வாங்கணும்..என் லேப்டாப் பையை தூக்க என் மகன் உள்ளே தூக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். நான் உள்ளே வந்துவிட்டுருந்தேன்.

அழுது முகம் வீங்கியிருந்தது. (அதெப்படிதான் அடிக்காமலேயே வீங்குதோ தெரியல,அதென்னமோ தெரியலை மனைவி அழுகும் போதுதான் சிரிப்பு வந்து தொலைக்கிறது).

" இப்போ எதுக்கு அழுகுற?"
"#@$#% $#%$!# %$#!% $#%$1"
" சரிவிடு, தெரியாம திட்டிட்டேன்"
"@~#$# $%!%$ %^@% !$^!%^ ^%#&#^"
" விடுன்றேன்ல"
"$#!%$#% $#%!^^% %@^%^"
"சரி, ஓகே, நம்ம கல்யாணம் ஆல்பம் பாத்து ரொம்ப நாளாச்சு, பார்க்காலாமா? ?"
",......"

ம்ம்ம்,.. அதெப்படிதான் இந்த பெண்களுக்கு சடாரென சிரிப்பு வருதுன்னே தெரியல,..

சண்டைகள் காதலை நெருக்கமாக்கின்றன.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்,.. (எல்லாரும் எதையாச்சும் காதலிக்கிறாங்கல்ல, அதுக்குதான் எல்லாத்துக்கும்)

நாளைக்கு நாட்டிற்கு கிளம்புகிறேன். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் லீவுங்க,.. அதனால யாரும் பின்னுட்டம் போடலையேன்னு கோச்சுக்காதிங்க (ஒரு மாசத்திற்கு பதிவுத்துறை தப்பிச்சதுப்பா),..


.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

பொறியியலில் எதற்காக தமிழ் மொழி? (முடிவு பகுதி)

தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாமா?

இது போன பதிவின் தொடர்ச்சி. (நானும் நாளைன்னு போட்டு நாலு நாளாச்சு, நேரமே அமையவில்லை)

பொதுவாக படிப்பது என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது. அதே போல ஒவ்வொருவரும் படிக்கும் முறையும் நோக்கமும் வேறுபடும். மார்க்கை குறிவைக்கும் இனம் ஒன்று. அறிவை குறிவைக்கும் இனம் ஒன்று. மார்க்கை குறி வைத்துப்படிக்கும் எந்த படிப்பும் தண்டமே.


தமிழில் படிப்பதால் என்ன நட்டம்???

இது வரை நாம் மொழியை பற்றி மட்டுமே அலசினோம். பொறியியல் பற்றி பேசவே இல்லை. எந்த தொழிலும் அதன் பயனாளி மிக முக்கியம். காரணம் அவர்தான் வாடிக்கையாளர். அவர்தான் நம் முதலாளி. பொதுவாக இணைய தளம் உதவியால் இன்றைக்கு பொறியியல் துறை எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது. பயனாளி எந்த நாட்டில் வேண்டானாலும் இருக்கலாம். ஆதலால் எல்லாவற்றிற்கும் தெரிந்த மொழி இருக்க வேண்டியது மிக அவசியம்.

நான் ஆங்கிலத்தில் படித்ததால் நம்மால் எந்த நாட்டிற்கும் சுலபமாக செல்ல முடிகிறது, வேலை செய்ய முடிகிறது. வெள்ளைக்காரனுடன் தொழில் நுட்பம் சம்பந்தமாக விவாதிக்க முடிகிறது. அடுத்தவனுக்கு சமமாக நம்மை உயர்த்த முடிகிறது. நான் உனக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை என நிரூபிக்க முடிகிறது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பொதுவாக துவக்கம் கொஞ்சம் தடுமாறும். பொறியியல் துறைக்கு என்னதான் திறமையானவராக இருந்தாலும் தன் திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்பேச்சும் அவசியம். என்னதான் திறமையானவராக இருந்தாலும் தன் திறமையை விவாதிக்க, நிரூபிக்க தெளிவான பேச்சும் அவசியம். பேச்சு மொழியை சிறிய வயதிலேயே கொண்டு வருவது எளிது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு பொது விவாதங்களில் பங்கேற்கும் போது அன்னிய மொழியில் சடாரென பேச வராது. இது ஒரு முக்கியமான காரணி.



அடுத்து வேலை வாய்ப்பு. பொறியியலைவிடுங்கள். தமிழ் MA B.ED படித்து முடித்த எத்தனை பேர் சும்மா இருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த அளவிற்கு வேலை வாய்ப்பிருக்கிறது? அவர்கள் இத்தனை வருடம் படித்த படிப்பிற்கு பலன் என்ன? அரசாங்க வேலை மட்டுமே ஒரே வழி. சரி,. நாளையே பதவிக்கு வருகிற ஒரு கிறுப்பிடித்த அரசாங்கம் எல்லாருக்கும் பொதுத்தேர்வு என வைத்தால் பத்து வருடம் முன் படித்தவர் எப்படி செலக்ட் ஆவார்? இப்படி நிறைய பாதகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

கண்டிப்பாக இன்றைக்கு தமிழில் பொறியியல் படித்தாலும் இதே நிலைதான். நாம் அரசாங்கம் தரும் வேலையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். civil, mechanical, telecommunication போன்ற துறைகளுக்கு பிரச்சனை இல்லை. உள் நாட்டு பொறியியல் ஓரளவு ஈடு செய்யும். ஆனால் கணிப்பொறி, IT, petrochemical, bio technology போன்ற துறைகளில் உலக அளவிலான வியாபாரம் நடக்கிறது. முழுக்க முழுக்க தனியாரால் மட்டுமே நடத்தப்படும் இந்த பொறியியல் துறைகள் எப்படி ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே பேசும் மொழியை வைத்து உலக அளவில் போட்டி போட முடியும். இது மிக கடினமான ஒன்று.

இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்படியல்ல.

பிறகு எப்படி??? இப்போது அடுத்த கேள்வி எழுகிறது. தாய் மொழியில் படிக்கிற நாடுகள் எப்படி முழுமையாக பவனி வருகின்றன? இந்த கேள்வி இந்த பதிவின் முழு அர்த்தத்தையும் சொல்லும். நன்றாக கவனித்தீர்கள் என்றால் ரஸ்யா, ஜப்பான்,கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அவர்களின் நாட்டின் மொழியில்தான் படிக்கின்றனர். அவர்கள் எப்படி முதல் நிலையில் தத்தம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்?

காரணம் மிக எளிமையானது.

அவர்களின் முழு தொடர்புகளும் தங்கள் தாய் மொழியிலேயே இருக்கும். மற்ற மொழிகளின் ஆதிக்கம் ஏனோதானாவென்றுதான் இருக்கும். அவர்களுக்கு இதர மொழிகள் இரண்டாம் மொழியாக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் நாட்டில் அது மூன்றாம் தர மொழியே ஆகும். படிப்பு, சிந்தனை, செயல், ஆராய்ச்சி என அனைத்திலும் தங்கள் மொழியையே பயன்படுத்துவதால் கடினமான துறைகளை கூட அவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள் செயல்படுகிறார்கள். சரி விடுங்கள். நிறைய பேருக்கு இது ஒப்புகொள்ள முடியாது.

நம் நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டின் தலை சிறந்த கண்டுபிடிப்புகளாய் எதை சொல்லுவீர்கள்?
செஸ் (கி.மு 230-500), துருப்பிடிக்காத இரும்பு (கி.பி 400), சுழி (ஆமாங்க ஜீரோ), பின்னம் (decimals), நுண்கணிதம் (calculus) , differential equation (aryapattar), எதிர்மறை எண்கள் (negative numbers), பை எண்கள் pi number (22/7) , முடிவில்லாத் தொடர்கள் (infinite series), முக்கோண தொகை (trignometric functions),

இப்படி நிறைய, அதில் எதை சொல்லுவீர்கள்?. ஆனால் நன்றாக கவனிக்க. அனைத்தும் தங்கள் தாய் மொழியிலேயே கண்டுபிடிக்கப்பட்டவை. அதுதான் முக்கியம். நான் போன பதிவில் சொன்ன CTRL C CTRL V காரணமும் அதுதான். மேல சொன்ன நாடுகள் தங்கள் துறையில் தனித்துவத்துடன் விளங்க காரணம் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே.அதனால் தாய்மொழியில் படித்தால் முன்னேற முடியாது என்பதற்கு தவறு என நிரூபிக்க மேலே சொன்ன நாடுகள் ஒரு சிறந்த உதாரணம்.


அதற்கான காரணம் என்ன? தங்கள் நாட்டில் இரண்டாம் மொழி இருந்தாலும் தம்தம் தாய் மொழியில்தான் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், உருவாக்குகிறார்கள். உருவாக்குதல் என்றால் எப்படி? சீனா ஒரு வேளிநாட்டிற்கு ஒரு project பண்ணுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து நிலையிலும் சீன மொழியே இருக்கும். வாடிக்கையாளருக்கு அனுப்பும் முன் மென்பொருளை பயன்படுத்தி அனைத்து பக்கங்களும் மொழி மாற்றம் செய்யப்படும். ஆனால் இங்கே அப்படியல்ல.

தாய் மொழியில் அனைத்தும் சிறப்பாய் அமைய அரசாங்கமும் ஒத்துழைப்பு மிக அவசியம். மக்களுக்கு தாய் மொழியில் படித்தாலும் வேலை கிடைக்கும் என நம்பிக்கை வர வைக்க வேண்டும். சீனாவில் எல்லா நிறுனங்களுக்கும் உற்பத்தி அலுவலகம் உள்ளது. அவர்களின் உட்தொடர்பு மொழி அவர்களின் சீன மொழிதான். சீனா மொழி தெரியாதவர்களிடம் வரும் போதுதான் ஆங்கிலம் வருகிறது. ஆனால் நாம்??? அலுவலகத்தில் இருவருக்கும் தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடல். ஏன் என இருவருமே யோசித்ததில்லை? காரணம் என்ன? தொழில் நுட்பங்களை ஆங்கிலத்தில் படிப்பதால பேசும் போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதுதான் வசதியாக இருக்கிறது. பிரச்சனை தமிழிடம் இல்லை. நம்மிடம்தான்.

எனவே தமிழ்மொழியில் பொறியியல் படித்தால் வேலைக்கு ஆகாது என்ற வாதத்தையெல்லாம் என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. 2000 வருடத்திற்கு முன்பே தனக்கென ஒரு சிறப்பான இலக்கணத்தை கொண்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் தமிழிற்கு அதற்கு தகுதி இல்லை என்பதெல்லாம் ஏற்க முடியாது. மேலும் அதை இன்னும் பிரகாசிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அதை அஸ்மித்துவிடாமல் வைக்கும் பொறுப்பு நம் தலை முறைக்கு உண்டு.

இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறோம். இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு பத்து தலைமுறைகளில் தமிழில் படிப்பது என்பதே இருக்காது. எது எப்போது அவசியமில்லையோ அது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியப்படும். இது மொழிக்கு மட்டுமல்ல. உலகில் எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும். கண்டிப்பாக இது தமிழிற்கு நல்லதில்லை.




2500 வருடங்களுக்கு மேல் இருக்கும் தமிழ் மொழிக்கு நம் தலைமுறையிலிருந்துதான் ஆபத்து துவங்குகிறது. அரசாங்கம் முழித்துக்கொண்டு விட்டது,. நாம்? இன்னும் இல்லையே? காரணம் நிகழ் காலத்தில் புறக்கணிப்படுகின்ற மொழிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை நாம் இன்னும் உணரவில்லை.



.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பொறியியலில் எதற்காக தமிழ் மொழி???

இரண்டு நாளைக்கு முன் நம் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் தமிழ் வழியில் கொண்டுவருவதற்கான ஆவண செய்யப்படும் என சொன்னார். அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதற்கான ஒரு அலசல்.

நான் முழுக்க முழுக்க தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தவன். பிறகு முற்றிலும் மாறுபட்ட சூழ்னிலையில் அண்ணா பல்கலைகழகத்தில் வேதிப்பொறியியல் படித்துவிட்டு இப்போது எங்கோ குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

கண்டிப்பாக நான் படித்த போது இருந்த சூழ்னிலை இப்போது இல்லை. நான் படித்த போது மொத்தமே 18 பொறியியல் கல்லூரிகள்தான். அதில் 8 அரசு கல்லூரிகள். அதில் ஒரு சீட் வாங்குவதற்குள் போதுமடா சாமி என ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியல்ல. 12ஆவது பாஸானால் போதும். என்ன துறை வேண்டுமானால் வாங்கி கொள்ளலாம். (என்ன கொடுமையடா சாமி??, பொறியியல் அந்த அளவிற்கு கேவலமாய் போச்சு). நான் படிக்கும் போதே தமிழ் வழியில் படித்தால் மதிப்பெண் விழாது. இப்போதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஏன் தமிழில் கற்க வேண்டும்.??



நான் பொறியல் முடித்தவுடன் சுமார் ஒரு வருடம் காஞ்சிபுரத்தில் கல்லூரி விரிவாளராய் பணி புரிந்தேன். உண்மையில் மிக சந்தோசமான நாட்கள் அவை (யாருக்குன்னு கேள்வி கேட்க கூடாது). உலகில் மன திருப்தியான தொழில் எதுவென்றால் அது ஆசிரியத்தொழில் என்றே நான் சொல்வேன்.

பொதுவாக தமிழ் வழி படித்து கல்லூரி வரும் மாணவர்களுக்கு மொழி மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும். காரணம் பொதுவாக தமிழ் வழி படித்து வரும் மாணவர்கள் மனப்பாடம் செய்வதில்லை. ஓரளவு பொருளறிந்து படிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஆனால் ஆங்கில வழி வரும்போது முழுமையான பொருளை அவர்களால் அடைய முடியாது. ஒரு வேளை அகராதி வைத்துப்படித்தால் ஓரளவு பொருள் புரிந்து படிப்பர். ஆனால் அதை ஒரு வாக்கியமாக எழுதி முடிப்பதற்குள் பரிட்சை நேரம் மூணு மணி நேரம் ஓடிவிடும். தேர்வு முடிவுகள் வரும் போது ஒன்னு தவறி இருப்போம் இல்லை ஜஸ்ட் பாஸ் பண்ணி இருப்போம். ஓரளவு புரிந்து இனி எல்லா தேர்விலும் நன்றாக நம்மால் மதிப்பெண் வாங்க முடியும் என நம்பிக்கை வரும் போது நாலு வருடம் ஓடி இருக்கும். அப்போது கையில் 60% மார்க் இருக்கும். எவன் வேலைக்கு நம்மை எடுப்பான்??

தமிழ் வழிக் கல்வியின் பொதுவான பிரச்சனை இதுதான். நான் விரிவுரையாளராக இருந்த சமயத்தில் இதை மிக கவனத்தில் எடுத்துக் கொண்டேன். நான் அனுபவித்ததை என் மாணவர்கள் அனுபவிக்ககூடாது என்ற ஒரே எண்ணம்தான்.

என் முறை இதுதான். போனவுடன் பழைய வகுப்பிலிருந்து 5 நிமிடம் கேள்வி (பலன்: பசங்களுக்கு தூக்கம் போய்விடும்). பிறகு தமிழில்தான் ஆரம்பிப்பேன். சீரான இடைவெளியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் வந்து கொண்டே இருக்கும். எனவே மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்வார்கள். புத்தகத்தை பிரிக்கும் போது கண்டிப்பாக பயம் இருக்காது. படிக்க ஆர்வமாகவும் இருக்கும்.இந்த முறை மிக பலனளித்தது. மிக கடினமான பாடங்களில் கூட மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தார்கள். சுற்று வ்ட்டாரங்களில் இருந்து மாணவர்கள் என் மாணவர்களின் நோட்ஸை வாங்கி சென்று படித்தார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும்??

ஆம் விஷயம் இதுதான்.

புரிந்து செய்கிற எந்த காரியமுமே வெற்றிதான். இந்த புரிதலுக்கு தடையாக இருப்பது மொழி.அந்த தடைக்கல்லை உடைக்கதான் இப்போது தமிழ் வழிக்கல்வி பாடக்கல்வியாக வழிமொழியப்பட்டு உள்ளது. முதலில் இதன் வசதிகளை பார்க்கலாம்.

1. பொருளறிந்து படிப்பதால் பாடங்கள் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்.(பிதாகரஸ் பார்முலாவும், அல்ஜீப்ராவும் நன்றாக இன்னும் நியாபகம் இருக்கிறது). எங்கோ எப்போது இது பலனளிக்கும். சிக்கலான சூழ்னிலையை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை கண்டிப்பாக ஆங்கில மாணவர்களிடம் இருந்து வேறுபடும். பெரும்பாலான சிக்கல்களுக்கு ஆங்கில வழி மாணவர்களைவிட உங்கள் பதில்கள் நேரடியான, பொருத்தமான விடை அளிக்கும். இதேதான் வேலையிலும். இதனால் நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு கடினமாக இருக்காது. நீங்கள் தொழிலையும் காதலிப்பீர்கள். அடுத்து என்ன செய்யணும் என்பதற்கான பதில் உங்களிடம் இருக்கும்.

2. எப்போது உங்கள் தொழில் உங்களுக்கு சுலபமாக இருக்கிறதோ, கொஞ்ச நாளில் போரடித்துவிடும். அடுத்து என்ன பண்ணலாம்? என்ற கேள்வி தொக்கி நிற்கும். எப்போது நீங்கள் உங்களிடம் கேள்வி கேட்க ஆரம்பிக்கீர்களோ, அப்போதே நீங்கள் வெல்ல ஆரம்பிக்கிறீர் என அர்த்தம்.

3.பொதுவாக தன் தாய் மொழியில் சொல்லிக் கொடுக்கிற நாடுகள் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டவையாக இருக்கும். எந்த ஒரு நாட்டிற்கும் அந்நிய செலவாணி ஒரு முக்கியமான துறை.

ஜப்பான் - எலெக்ட்ரானிக்ஸ்
ஜெர்மனி - ஆட்டோமொபைல் தொழில் நுட்பம், உயர் நிலை ஆராய்ச்சிகள்
கொரியா - கட்டுமானம்,
சீனா - எல்லாவற்றிலும்
ரஸ்யா - ராணுவத்தொழில் நுட்பங்கள்,
இப்படி நிறைய நாடுகள்,..

நம் நாட்டை எடுத்துக் கொண்டால் இப்போதைக்கு IT, BPO, KPO, offsourceing போன்றவை. இவற்றால் நாட்டிற்கு என்ன பலன்?? பணம் வருகிறது என்ற ஒன்றைத்தவிர. ஆனால் எப்போதெல்லாம் மேலே சொன்ன துறைகள் அடி வாங்குதோ நமக்கும் அடி வாங்கும். அதாவது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த நாட்டினை நம்பி இருக்கிறோம். எந்த ஒரு நாட்டிற்கும் இது ஆபத்தானாது. உங்களுக்கென ஒரு தனித்தன்மை இருப்பது பலமே. ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் சின்னது என்றாலும் அந்த நாட்டிற்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. ஐரோப்பா நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தொழில் நுட்பம் சிறப்பாக இருக்கும்.அதுதான் அவைகளின் பலமே. நாமும் நமக்கென ஒரு தொழில் தனித்துவத்தை உருவாக்காத வரையில் வல்லரசு கனவுதான்,..

தனித்துவம் எப்போது வரும்? நாம் என்ன செய்கிறோம் என்பதை புரிந்து செய்யும்போது,..





4. தாய் மொழியில் துவக்கத்தில் படித்தவர்கள் மிக சிறந்த அறிஞர்களாக இருப்பதைக் கண்டிருக்கலாம்.

அறிஞர் என சொல்லிவிட்டு அண்ணாவைப் பற்றி சொல்லாவிட்டால் எப்படி?

அண்ணா ஒரு முறை அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது ஒரு நக்கலான வெள்ளைக்காரன் பின் வரும் கேள்வியைக் கேட்டான் (நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் சொல்கிறேன்)


"Can you construct a sentence in English by using because three times in it?"

அண்ணா மின்னலாய் உடனடியாக பதில் சொன்னார்,.

"No sentence ends in because, because, because is a conjunction"

அவர் மட்டுமல்ல,..

ராமானுஜர், C V ராமன், சந்திரசேகர், M.S சுவாமி நாதன், அப்துல்கலாம், இப்படி நிறைய பேர்,..

ஆனால் இன்று ?????????????????????

CTRL C & CTRL V

நாளை முடிக்கிறேன்,..


.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான் ரசித்தது அப்படியே உங்களுக்கு,..

ஊதா மேற்கத்திய நாகரிகம், சிவப்பு நம் நாகரிகம்,..



குழந்தைகள் தனித்து நிற்க பழக்கப்படுத்தப்படுவர்.
எல்லாவற்றிலும் பெரியோர்களின் தலையீடு,.. தன் துணையை தேடுவதில் கூட

பாஸ் தங்களில் ஒருவர்
பாஸ்தான் எல்லாவற்றிற்கும் கடவுள் மாதிரி


வாழ்க்கையின் கடைசி காலங்கள் தனியாக
வாழ்க்கையின் கடைசி காலங்கள் பேரனுடன் (அது கூட சில நேரங்களில் உங்களின் சேமிப்பிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)


கார் ஓட்டுபவர் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுவார்
சைக்கிள் ஓட்டுபவர் கார் ஓட்ட ஆசைப்படுவார்


மூணு வேளையில் ஒரு வேளை நல்ல சாப்பாடு, மற்ற நேரங்களில் நொறுக்ஸ்
மூணு வேளையும் மூக்கு முட்ட நல்ல சாப்பாடு

சிக்கலை தீர்க்க எந்த வழியும் கையாளப்படும்
சிக்கலை தீர்க்க ஒரே வழியே கையாளப்படும், அது தவிர்ப்பதற்கான வழி. NO ரிஸ்க்.


ஹோட்டல் அமைதியாக ரம்மியமாக இருக்கும்
நம்மவரின் குரல் ஹோட்டல் முழுக்க கேட்கும்,.. ஹோட்டலே எனக்கு சொந்தம் மாதிரி



பார்ட்டியில் அவரவர் நண்பர்களுடன் உரையாடுபவர்
பார்ட்டியில் அனைவரும் ஒருத்தர் உரையாடுவதை கேட்பர். அவர்தான் CEO

எல்லாவற்றிலும் க்யூ
க்யூவா? அப்படின்னா??


வியாபார தொடர்புகள் அதனை சார்ந்த நபர்களுடன் மட்டும்
எல்லாவிதத்திலும் தொடர்பை இழுத்து வெற்றி பெறுவது


சரியான நேரத்தில் இருப்பர்
சரியான நேரத்தில் வரக்கூடும்


சுய நலம்,.. தன்னைப்பற்றி மட்டுமே சிந்தனை
எல்லோரையும் அரவணைத்து தானும் உயரும் பக்குவம்


எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்துவர்
ஒரு பெரிய சுத்து சுத்தி, கடைசியில் ஒரு வழியில் முடிவடையும்

.