சனி, 30 மே, 2009

எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது.

ஒரே மாதிரியான பதிவுகளை படித்து போரடித்துவிட்டதால் நம் பேனாவை தூக்கியே ஆகவேண்டிய சூழ்னிலை ஏற்பட்டு விட்டது. மற்ற பதிவர்கள் தங்கள் மொக்கையை நிறுத்தும்வரை இந்த மொக்கை தொடரும். (அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துரேனு நாயகன் கமல் மாதிரியெல்லம் நான் சொல்லலைங்க,..)

 • 747 ரக விமானத்தல் முதன் முதலில் உருவாக்கிய போது 75000 வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் உட்கார்ந்து இருக்கும்போது நமக்கும் வெளிப்பகுதிக்கு உள்ள குறைந்தபட்ச தொலைவு 7.5 செ.மீ. (நம் மூளை நமக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் உள்ள தொலைவையே யோசிக்கிறது).
 • டைட்டானிக் கப்பலை தயாரிக்க 7 மில்லியன் டாலர் ஆனது. ஆனால் அதையே படமாய் எடுக்க 200 மில்லியன் டாலர் ஆனது.( சும்மாவா?? 717 மில்லியன்ல லாபம் பார்த்தானுங்க,..).
 • ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலதுபுறம் இருக்கும், பெண்கள் சட்டையில் இடதுபுறம் இருக்கவேண்டும். ( அர்த்தனாரீஸ்வரிடம் இருந்து உருவான கான்சப்ட்டா??)
 • தலையை திருப்பாமலே பின்னால் பார்க்கும் வடிவமைப்பை முயலும்,கிளியும் கொண்டிருக்கின்றன. (நல்ல வேளை. நமக்கு இல்லை. சும்மாவே சைட்ல வர்ர பிகரை பாத்துட்டு, நடந்து போறவன் காலுக்குள்ள வண்டிய பார்க் பண்றானுங்க,..).
 • இதயம் பம்ப் செய்யும் ரத்தம் 30 அடிதூரத்திற்கு செல்லும். (மன்னிக்கவும்,.. எனக்கு இதயத்தின் discharge pressure மட்டுமே தெரியும்).
 • மூளையில் 80% நீரால் ஆனது, கைரேகை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று தெரிந்ததே. நாக்கின் ரேகையும் அப்படியே. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை (தண்ணி நிறைய குடிச்சா மூளை வளருமாங்க????).
 • உங்களின் முகரும் சக்தி பத்து வயதாக இருக்கும்போது உச்சத்தில் இருக்கும். (அதனாலதான் அம்மாவின் சாப்பாடு சூப்பர்னு சொல்றோமோ? ச்ச,.. தப்பு தங்கமணிகளிடம் இல்லங்க,.. நம்மிட்டதான் இருக்கு)
 • அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் தொகையைவிட நம் வாயில் இருக்கும் பாக்டீரியா எண்ணிக்கை அதிகம். (வாயில இருக்கற பாக்டீரியா O.K. மனசுல்ல இருக்கிறது???.)
 • 300 எலும்புகளுடன் பிறக்கும் நாம் வளர்ந்த பின் 206 எலும்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறோம். நம் தொடை எலும்புகள் காங்க்ரீட்டை விட வலிமையானவை. (அதனாலதான் பயந்தங்கொள்ளிகளை தொடை நடுங்கின்னு சொல்றோம்மோ???)
 • எலி வாந்தி எடுக்காது. யானை ஜம்ப் பண்ணாது. (அதனால்தான் எலி எல்லாத்தையும் தைரியமாய் தின்னுதோ??).
 • யானை 4.5 கி.மீ. தொலைவில் உள்ள தண்ணீரையும் கண்டுபிடித்துவிடும். (ம்ம்க்க்கும்,.. எனக்கு 4500 கிமீ தொலைவில் இருக்கிற client தண்ணி காட்டுரான்,.. ஒண்ணும் தெரியல்ல,..).
 • சுறாமீன்கள் ஒரு வருடத்தில் 6000 பற்களை இழக்கின்றன. ஆனால் பற்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து விடுகின்றன. (டெய்லி கொத்து கொத்தாய் முடி கொட்டுகிறது,.. எங்கே வளர்கிறது??? நிலத்தின் பரப்பு சுருங்குவது போல முடியின் பரப்பும் சுருங்கி கண்டே போகிறது,..கொஞ்ச நாளில் நிலவை உன் முகத்தில் பார்த்தேன்னு பாடிய அதே காதலி, சூரியனை உன் தலையில் பார்த்தேன்னு பாட ஆரம்பித்து விடுவாள்),..

சுவாரஸ்யங்கள் தொடரும்,..

திங்கள், 11 மே, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கப்படாதவள்

அம்மா இன்று அன்னையர் தினம். எத்தனையோ இதே மே 10, வந்தாலும் இது அன்னையருக்கான தினம் என இப்பொதுதானே தெரிகிறது. மற்றபடி உங்களின் பிறந்த நாள் மட்டுமே முக்கியமானதாக இருந்தது. நீங்கள் எனக்கு பள்ளிக்கு கூட்டிச்செல்லும் போதோ, என்னுடன் பிறந்த 5 பேரையும் டாக்டராகவும், பொறியாளராகவும் ஆக்கிய போதோ, நான் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்த போதோ வராத மதிப்பு, என் மனைவி பிரசவ வலியில் துடிக்கும் போதுதானே வருகிறது. நான் ஒரு குழந்தையை வளர்க்கவே இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் ஆறு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்ப்ட்டு இருப்பீர்கள்? எந்த குழந்தைக்கும் தனி பிரியம் காட்டாமல் உங்கள் கண்ணில் "Electronic balance"ல் வைத்தது போல் உணவை பகிர்ந்துகொடுக்கும் போது என் கண்கள் "Periscope" போல்தானே மற்ற தட்டுக்களை பார்த்துக்கொண்டிருந்து? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம்? நம் அரசும் ஒரு தாயயை போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அம்மா உன் ஆசையில் எதை நான் நிறை வேற்றினேன்?. மாவட்டத்தில் முதல் இடம் நான் வாங்க ஆசைப்பட்டாய், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன். என்னை டாக்டராக ஆசைப் பட்டாய், நான் பொறியல் படித்தேன். என்னை நண்பர்களுடன் ஊர் சுற்றாதே என்று சொன்னாய். நண்பர்களுடன் ஊர் ஊராய் சுற்றினேன். காதலிக்காதே என்றாய், காதலித்தேன் என்னால், ஊரில் எல்லோரிடமும் அவமானப்பட்டாய். உனக்கென்று என்ன கேட்டாய் இது வரை?. உனக்காக என்ன செய்து விட்டேன் நான், இந்த அன்னையர் தின கடிதத்தை தவிர?

நான் செருப்பில்லாமல் நடந்த போது உன் செருப்பை எனக்கு கொடுத்து என் கால் சூட்டை நீ வாங்கினாய், கஷ்டப்போது எங்களுக்கு சோறுட்டி நீ தண்ணீர் குடித்து தூங்கினாய், திருவிழாவில் நான் காணாமல் போன போது எனக்காக நீ மொட்டை அடித்தாய், முதன் முதலில் மண்ணெண்ணெய் pump stove வாங்கிய போது எங்கள் அனைவரையும் வெளியில் அனுப்பி நீ மட்டும் உள்ளே இருந்து பற்ற வைத்தாய்.அம்மா, எந்த முட்டாள் சொன்னது கடவுள் இல்லை என்று???

என் அப்பாவையும் விட்டு தராமல், எங்களுக்கும் சோறு ஆக்கிப்போட்டு, ஆசிரிய வேலைக்கு கிளம்பி பாடம் முடித்துவிட்டு, பின் வீட்டிற்கு வந்து எங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து விட்டு, எல்லோருக்கும் மீண்டும் சோறக்கி போட்டு, பிறகு தூங்க வைத்து,.யப்பப்பா,.. எழுதுகிற எனக்கே இப்படி வலி இருக்கும் போது வேலை செய்த உனக்கு எப்படி இருந்திருக்கும்? என் மனைவியின் அன்றாட வலியை பார்க்கும் போதுதானே நீ எங்கள் ஆறு பேரையும் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய் என தெரிகிறது. இது வரை நீ ஆசைப்பட்டதை எதுவும் நான் நிறவெற்றியது இல்லை. இதற்கு மேல் என்னிடம் கேட்கப் போவதுமில்லை.ஆனால் இந்த ஒரே ஒரு முள் மட்டும் குத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போய்கிறேன்?

வெள்ளி, 8 மே, 2009

கவித கவித

உழுதவனுக்கு உணவில்லை - நன்றாக
படித்தவனுக்கு வேலை இல்லை

நெய்தவனுக்கு உடை இல்லை - கடை
திறந்தவனுக்கு விலை இல்லை.

பொற்கொல்லொன் உருக்குகிறான் ஒரு கருகாமணிக்கு
நெல் விதைப்போன் உருகியே போய்விட்டான் ஒரு நெல்மணிக்கு,

சொல்லிக் கொடுப்பவனுக்கு கரும்பலகையில் வாழ்க்கை
கேட்டுப் பெற்றவனுக்கோ உலகம் முழுக்க யாத்ரை

அனைவருக்கும் உள்ளது வருமான வரி - இங்கே
அரசியல்வாதிக்கு மட்டும் தொப்பையில் வரி

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - வாழப்போகும்
இடமெல்லம் உதை வாங்கும் இனம் தமிழினம்

ஏழைக்கு மட்டுமே இலவச அரிசி - மற்ற
எல்லாருக்கும் இங்கே உள்ளது வாய்க்கரிசி

இந்தியாவில் இல்லையடா சுதந்திரம் - நீ
வாழும் வாழ்க்கை ஒரு கருமாந்திரம்.


பின் குறிப்பு
இது T Rajender எழுதிய கவித அல்ல,..நான் எழுதியதே,.. எல்லொரும் என்னயே துப்பலாம்,.. (T Rajenderன் சில பாடல்கள் உண்மையிலேயே சிறப்பானவை,.. ஒரு தலை ராகத்தில் வரும் இது குழந்தை பாடும் தாலாட்டு, வாசமில்லா மலரிது ஆகியவற்றின் பாடல் வரிகள் உச்ச கட்ட கற்பனையின் படைப்புகள்)