செவ்வாய், 30 ஜூன், 2009

வாங்க மீண்டும் கிராமத்திற்கு

பார்த்த இடமெல்லாம் பாலைவனமாய் பார்த்து நொந்து நூலாய் போன எனக்கு இந்த விடுமுறை மிகுந்த எதிர்பார்ப்பை தந்தது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், சிறப்பு பொருளாதர மண்டலங்களாகவும் மாறி வரும் வேளையில் எங்களுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் லாபம் தரவில்லை என்றாலும், எங்கள் நிலத்தில் விளைந்த உயர்ரக அரிசி இது என்று விருந்தினருக்கு முழுதிருப்தியாக பரிமாற வைக்கிற காரணத்திற்காகவே இன்னும் இங்கே சொல்லிக் கொள்ளும் வகையில் விவசாயம் நடக்கிறது. எவ்வளவு சோகம் என்றாலும் ஒரு வாரம் முன் விதைத்த நெல், எங்கள் நிலத்தில் பச்சை ஆடை உடுத்தி செலுமையாக நம்பிக்கையாக நிற்கும் அழகை பார்த்தவுடனேயே சோகம் மறைந்து உற்சாகம் புகுந்துவிடும். இந்த முறை திரும்ப உழைக்க வெளி நாடு செல்ல வேண்டுமே என்ற மீளாத சோகத்தில் இருக்கையில் விஜயம் செய்து "க்ளிக்" செய்த புகைப்படங்கள் இவை. நான் கிளம்பும் போது சோகம் மறைந்து, பக்கத்தில் உள்ள பத்து ஏக்கரையும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என இன்னும் வைராக்கியமும், நம்பிக்கையுமாக கிளம்பினேன்.

இது வரை நான் கவனித்ததில்லை என் ஊர் சாலைகள் இத்தனை அழகா என்று,.. கத்தாரில் சாலையின் இரு ஓரங்களிலும் பாலைவனத்தை பார்த்த பிறகே தெரிகிறது கற்பூர வாசனை.






எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் உயிர் ஒன்று கண்டிப்பாக இருக்கிறது. கிணற்றில் தெரிகிற நீர் மட்டத்தில் இருந்து கீழே ஒருவர் மேல் ஒருவராக ஆறு பேர் நிற்கலாம். அத்தனை ஆழம்.



சுற்றிலும் பச்சை பச்சை மேலும் பச்சை





சுற்றிலும் தென்னை மரங்கள் நடுவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. குளிர் சாதனப்பெட்டியின் தேவைகளை தென்னை மரங்கள் தூக்கிவீசுகின்றன.













நான் வைத்த தென்னைகள் என் நாலு சந்ததி உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது.




தண்ணியின்றி அமையாது பார். (பார், உலகத்தை குறித்தாலும் சரி, பாத்தியை குறித்தாலும் சரி இல்லை அரசாங்கம் நடத்தும் டாஸ்க்மார்க் ஆனாலும் சரி, பொருள் ஒன்றுதான், நீரன்றி அமையாது உலகு). நாற்று நட நிலம் ஆயத்தமாக இருக்கிறது (தமிழிற்கு நன்றி செந்தில்)






நடுவதற்கு ஆயத்தமாக இருக்கும் நெல் நாற்று




நட்டபின் செழித்து நிற்கும் நாற்று





இங்கே அனைவருக்கும் வாழ்வு உண்டு,

எங்களிற்காக உழைக்கும் மாடுகள்




தோட்டத்து காளைகளின் குடி நீர் தொட்டி.




வீட்டு காளைகளின் குளி நீர் தொட்டி.




எங்களுக்கு சுத்தமான பால் தரும் பசுக்களின் அடுத்த தலைமுறைகளுடன் எங்களின் எதிர்கால தலைமுறை (அண்ணன் மகள்)






இங்கே அனைவருக்கும் வாழ்வு உண்டு,

வெயில், மழை, காற்று என அனைத்திலும் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு,.

எங்களுக்கு மட்டும் எங்கள் தந்தையே பாதுகாப்பு (இது எப்டி இருக்கு???)




மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாங்க மீண்டும் கிராமத்திற்கு




திங்கள், 22 ஜூன், 2009

கேள்விகளும் பதிலகளும் - என்னைப் பற்றி என்ன சொல்ல

மொத்தம் எட்டு பதிவை போட்டுவிட்டு என்னைப் பற்றி நானே எழுதவதற்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. என்னைப்பற்றி நானே சொல்லாவிட்டால் வேறு யார்தான் சொல்லுவார்?. அதனால்தான் இந்த மொக்கை பதிவு. இதில் உள்ளது உள்ளபடியே நான்,...
  1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
    பெற்றோர் வைத்த பேரே. மற்றபடி என் கண்ணில் ஜோதியெல்லாம் கிடையாது. (இன்னும் சொல்லப்போனால் தூரத்துப்பார்வை குறையினால் பவர் கிளாஸ் போட்டிருக்கேன் ஹி ஹி,..) என் பேர் கல்லூரியில் படிக்கும் போது பிடிக்கவில்லை. ஜோதி என்ற பெண்ணை கூப்பிடுவதற்காக என்னை கூப்பிடுவார்கள் (கொஞ்சம் கிளர்ச்சியாகவும் நிறைய வருத்தமாகவும் இருக்கும்),.. ஆனால் இப்போது என் பேர் எனக்கு பிடித்துதான் இருக்கிறது.

  2. கடைசியாக அழுதது எப்பொழுது
    May 31,.. இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு பதிவு கதை எழுதி முடித்தபோது,..
    சின்ன விஷயத்திற்கு விழி ஒரம் ஈரம் ஆவதும், பெரிய விஷயத்திற்கு தைரியமாக இருக்கவேண்டும் என நினைப்பதும் என் சுபாவம்.
  3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
    முதலில் அழகாக இருந்தது. இப்போது எழுதுவற்கு பதில் தட்டுவது அதிகமாகி விட்டபடியால் எழுத்து அசிங்கமாகி கொண்டே வருகிறது.
  4. பிடித்த மதிய உணவு என்ன?
    நல்ல வெயில் காலத்தில் விளையாடிவிட்டு, பின் கிணற்றில் நீச்சல் அடித்து குளித்துவிட்டு பின்னர் பழைய நீர்த்த சோறில் நிறைய மோர்விட்டு சர்க்கரைவர்த்தி கீரையை தொட்டிக்கொண்டு சாப்பிடுவது (அட அட என்ன சுவை??) ரொம்ப பிடிக்கும்.
  5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
    மிக விரைவில் நண்பர்களை பெறுவது என் சுபாவம் மற்றும் அதிர்ஷ்டம். ஆனால் எல்லோருடனும் எல்லையுடன் இருப்பது என் குணம்.

  6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
    கிணற்றில்/ஆற்றில் குளிப்பதுதான் எனக்கு மிக பிடிக்கும். உப்பான கடல் தண்ணீர் அறவே பிடிக்காது. பீச் மணலில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.

  7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
    கண்களையும் வார்த்ததைகளையும்

  8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
    பிடிச்சது
    கருணை குணம், எந்த சூழ்னிலையிலும் ஜால்ரா போடாதது, எந்த கட்டத்திலும் அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது.
    பிடிக்காதது
    கொஞ்சம் சோம்பேறி, கையில் இருப்பதை கொடுத்துவிட்டு வானத்தை பார்க்கும் அளவிற்கு ஈகை குணம், கொஞ்சம் அழகான பெண் வந்தால் மனைவி அருகில் இருந்தாலும் இன்னும் சைட் அடிக்கும் கெட்ட குணம்.

  9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது
    பிடிச்சது
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சுத்தமான காதல், போன வாரம் சமைத்த அதே மெனுவை திரும்ப வழங்காமல் கவனமுடனும் மிக அக்கறையுடன் சமைத்து போடும் கை, கடினமான உழைப்பாளி, என்னை பார்ப்பதை போலவே என்னை பெற்றோரையும் கவனித்துக் கொள்ளும் அருமையான குணம், சின்ன சின்ன பரிசுகளிலேயே திருப்தி அடையும் எண்ணம், நான் என்னவெல்லாம் மறப்பேன் என நினைவில் வைத்து சரியான நேரத்தில் நியாபப்படுத்தும் கவனம், எந்த சூழ்னிலையிலும் அவளுக்கென்று இருக்கிற நல்ல குணங்களை மாற்றிக் கொள்ளாதது. இப்படி பல பல பள பள
    பிடிக்காதது
    முன் கோபம், தன் உடம்பை பற்றி கவலைப்படாமல் வேலை செய்து கொண்டே இருப்பது, நண்பர்களின் நட்பை பாதுகாக்காதது.

  10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
    என் மனைவி மற்றும் குழந்தை. (இவர்கள் என் அருகில் இல்லாதது மிகப் பெரிய வருத்தம்).

  11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
    தீப்பற்றி எரியாத ஆரஞ்ச் நிறத்துடன் கூடிய முழு நீள ஆடை (ஹி ஹி சேப்டி டிரஸ்,.. ஆபீஸ் லஞ்ச் டைமில் எழுதிக் கொண்டு இருக்கிறேன்)

  12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
    யுவன் இசையில், இளைய ராஜா குரலில் கற்றது தமிழில் வரும் " பறவையின் கூட்டில்" பாடல். மிக அருமையான் பாடல், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இசை. அற்புதமான வரிகள்,..

  13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
    White is my favorite color. ஆனால் வெள்ளை நிறத்தில் எங்கே எழுதுவது??

  14. பிடித்த மணம்?
    அடுக்கு மல்லி, தாழம்பூ, புது மழையில் எழும்பும் கரிசல் மண்ணின் மணம், அடை மழையில் வரும் அவித்த வேர்க்கடலை, தட்டப்பயிறு மணம், மார்கழியில் காலை 5 மணிக்கு கிடைக்கும் சுக்கு காபியின் மணம், சில நேரங்களில் என் மனைவி சமைக்கும் போது வரும் கருகிய வாசனை ( அப்போதுதானே வெளியில் சாப்பிட என் மனைவி வருவாள்).

  15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன? கலகலப்பிரியா,..
    http://kalakalapriya.blogspot.com/ இவரின் கவிதைகள் பாரதியின் அக்கினி குஞ்சுகள். உரிமையாக பின்னூட்டம் எழுத சொல்லும், எழுதும் நல்ல பதிவர்,.. இப்போதுதான் மழலையர் பள்ளியில் படிப்பதாக கேள்வி,...

  16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
    ஆகாய நதியின் கட்டுரைகள் ஒரே வகை என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரம். முத்து,பவளம்,மாணிக்கம் என பல வகைகள் இருந்தாலும் வைரம் வைரம்தானே?? அவர் எழுதிய "திருமணச் சடங்குகள் தமிழில் நடந்தால் என்ன? " எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. அவரிடம் எனக்கு பிடிக்காதது, அவரே அவர் பதிவை மொக்கை என வர்ணிப்பது மட்டுமே. மற்றபடி தரமான பதிவு தருவதில் அவர் முதல் வரிசையில் அமர வேண்டியவர்,.

  17. பிடித்த விளையாட்டு?
    பொதுவாக எல்லா குழு விளையாட்டுகளும் நான் ஆடியிருக்கேன். அதனால் எல்லாமே எனக்கு பிடிக்கும். ரொம்ப பிடித்தது என்றால் சின்ன வயசில் நாங்கள் கிணற்றில் ஆடும் ரக்பி (அரை மணி நேரம் விளையாண்டால் 1 மணி நேரம் சாப்பிடும் அளவிற்கு பசியெடுக்கும்)

  18. கண்ணாடி அணிபவரா?
    ஆம். கடந்த இருபது வருடங்களாக,..

  19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
    சேரனின் அனைத்து படங்களும்.
    நகைச்சுவைப் படங்களுக்கு முதல் இடம். சண்டை காட்சி படங்களுக்கு பெரிய கும்பிடு,.. (சிம்பு படம் ஒன்று கூட பார்த்தது இல்லை,..விஜய் படம் ஒன்று கூட திரையரங்கில் பார்க்கவில்லை), சேரன், தங்கர்பர்ச்சன் பெரும்பாலான படங்களும் திரையரங்கிலேயே பார்த்தாச்சு.

  20. கடைசியாகப் பார்த்த படம்?
    கேள்வி திரையரங்கு என்றே கருதுகிறேன். கடைசியாக பார்த்த்து "வாரணம் ஆயிரம்"

  21. பிடித்த பருவ காலம் எது?
    கார்காலம். (எல்லோரும் நினைவில் வைத்து இருக்கும் 16 வயதிலிருந்து 20 வயது வரைக்குட்பட்ட பருவ காலம் கூட ரொம்ப பிடிக்கும்).

  22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
    What went wrong by trevor.
    பொதுவாக technical/ non-technical என பிரித்து படிப்பது இல்லை. எனக்கு உபயோகமான பிடித்தவைகளை மட்டுமே படிப்பதால் இதில் பிரிவு ஏதும் இல்லை. நாவல்களோ, தொடர்கதைகளோ படிக்கும் பழக்கம் கிடையாது. சமையல் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என பல புத்தகங்களை படித்து இருக்கேன். நான் படித்ததில் உட்சகட்ட முட்டாளாக நான் கருதுவது, என் பத்தாவது புத்தகங்கள். அப்போது ஒவ்வொரு பாடமும் எத்தனையாவது பக்கம் என்பது கூட அத்து படி.

  23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
    2 மாதத்திற்கு ஒரு முறை

  24. உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
    குழந்தையின் சிரிப்பு,.
    யாருடைய அழுகையும், கல்லை வைத்து இரும்பை உராயும் சத்தம்

  25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
    லண்டன் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி (வேலை நிமித்தம் சென்ற போது சுற்றி பார்த்தது ஹி ஹி,.. நமக்கு அண்ணா யுனிவர்சிட்டி காம்பஸ்ல படிச்சதே பெரிய்ய விஷயம்)

  26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
    கண்டிப்பாக நிறைய,..
    நன்றாக பாடுவேன், ஆடுவேன் (இப்ப இல்ல), எல்லா விளையாட்டுகளும் பேர் சொல்லும் அளவிற்கு விளையாடுவேன், விவசாயமும் செய்ய தெரியும், ராக்கெட் எரிபொருளின் தேவைகளும் தெரியும், கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.

  27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
    எந்த இடத்திலும் யாரையும் ஏதோ ஒரு காரணம் காட்டி பிரித்து (partiality) பார்ப்பதும், முறையான மரியாதை மறுப்பதும் எனக்கு சுத்தமாக பிடிக்காது.. ஏற்ற தாழ்வுகளையும், அதையே காரணம் காட்டி வழங்கப்படும் இலவசங்களையும் கூட எனக்கு பிடிக்காது. படகு வழங்குவதற்கு பதில் நீச்சல் சொல்லி தருவது நல்லது என நினைப்பவன்.

  28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
    சோம்பேறி தாத்தா.
    விடுமுறை நாட்களில் இப்படி அப்படி அசைவது கூட கிடையாது,

  29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
    என் கிராமமும் எங்கள் தென்னம் தோப்பும் எனக்கு மிக பிடித்த இடங்கள் (தனி பதிவு வருகிறது) . கொடைக்கானலும், டேராடூனும் நான் ரசித்த பிற பகுதிகள்.

  30. எப்படி இருக்கணும்னு ஆசை?
    ஒரு பள்ளி ஆரம்பித்து நான் கற்றதை எல்லோருக்கும் சொல்லி கொடுத்து அடுத்த தலைமுறையில் ஒரு நாலு பேர் என் பேரை ஆயுசு வரைக்கும் நினைவு கூறும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. கண்டிப்பாக அதை செய்வேன். அது என் லட்சியம்.

  31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
    செய்தாச்சு,..

  32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
    யாருடைய வயிற்றிலும் அடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். அதைவிட வேறு என்ன வேண்டும்?

  33. பிடித்த பதிவர்கள்
    ஆதி, வித்யா மற்றும் சாதிக் அலியின் தமிழ் குருவி


புதன், 3 ஜூன், 2009

வேதிபொறியியல் (chemical engineering) படிக்கலாமா? வேண்டாமா?




இது என்னுடைய துறை. +2 முடித்து வரும் பதிவர்களின் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு குழந்தைகளுக்கு இப்பதிவு உதவியாக இருக்கும் என்பதால் எழுதுகிறேன். நான் +2 முடித்ததும் வேதியியல் (chemistry) பிடிக்கும் என்பதால் இத்துறையை தேர்வு செய்தேன். ஆனால் வந்த பின் தான் தெரிந்தது இது வேறு என்பது. எனவே என் மகனிற்கு வேதியியல் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் chemical engineering சேர்க்க வேண்டும் என நினைத்தால் நான் வேண்டாம் என்றே வழி மொழிவேன். காரணம் இங்கே வேதியியல் ஒரு அறிவு அவ்வளவுதான். பிறகு வேதிபொறியாளர் என்பவர் யார்?. An engineer who works as a mechanical engineer and think as a chemist is a chemical engineer. அணுவன்றி அமையாது உலகு என்பார்கள், வேதிபொறியல் இல்லாத துறையே இல்லை எனலாம். அறிவியலும், கணிதமும் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் இத்துறைக்கு வரவேற்கதக்கவர்கள். வேதிப்பொறியியல் எங்கு எங்கு பயன்படுகிறதென்று பார்க்கலாம்.

Petrochemicals (R&D,design,production)

pharmaceticals (R&D,design,production)

Cement (R&D,design,production)

Food Process Industries (R&D,design,production)

Paint (R&D,design,production)

Power & Energy (R&D,design)

Ore Refining industries (R&D,design)

Pollution control (R&D,)

Nuclear Energy (R&D,design,production)

healthcare (R&D,design,production)

plastics & polymer (R&D,design)

Paper Industry (R&D,design,production,)

Dyeing Industry (R&D,design,production,)

Oil and Gas (R&D,design,production)

Control Engineering (R&D,design)

Fertilizer Industry (R&D,design,production,sales)

பலம்
தொழில் திருப்தி (job satisfaction) - படிக்க மிக சுவாரஸ்யமாக ஆக துறை இது. குக்கரில் மட்டும் ஏன் அரிசி சீக்கிரம் வேகிறது அதில் சிறிது எண்ணெய் ஊற்றினால் இன்னும் சீக்கிரம் வேகுவதன் காரணம் என்ன என்பது முதல் பல அன்றாட கேள்விகளுக்கு இங்கு பதில்கள் உண்டு. (இதற்கான பதில்களை யாரும் சொல்லி தரமாட்டார்கள், ஆனால் முடித்து வரும்போது காரணத்தை அறியும் பக்குவம்,விவாதிக்கும் அறிவும் வந்திருக்கும்).கடலுக்குள் கிடக்கும் கச்சா எண்ணெய் எப்படி வெளியில் கண்டு வந்து பிரித்து சமையல் எரிவாய் முதல் தார் வரை எப்படி சுத்திகரிப்பு செய்கிறார்கள் என்பது வரை இங்கு படிக்கலாம் It is more conceptual based Engineering. .
தொழில் பாதுகாப்பு (Job Security) - மார்க்கெட் அவுட் என என்றைக்கும் உங்கள் வேலைக்கு பிரச்சனை வராது. காரணம் எப்போதுமே இருக்கும் தேவைகள் (demand). கொஞ்சம் கஷ்டமானாலும் எந்த உள் துறையிலும் (Inter decipline) நீங்கள் மாறி கொள்ளலாம்.
சுதந்திரம் - மிக அதிகபட்சமான விருப்ப துறைகள் (freeness to select the interesting area)

சம்பளம் - அதிக அளவு சம்பளம் (விபரம் கீழே)

சுயதொழில் - தன்னிச்சையாக small sclae industry ஆரம்பிக்கலாம் (அரசு மான்யமும் உண்டு).
வெளி நாடு வாய்ப்பு - மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக சம்பளத்தில் எளிதாக வெளி நாட்டு வாய்ப்புகள் உண்டு (70 000 USD to 130000 USD) (5 வருட அனுபவம் குறைந்தபட்சம்)

பலவீனம்
JOB AFTER GRADUATION -முடித்தவுடனேயே மற்ற துறைகளைப் போல் வேலை கிடைப்பது கஷ்டம். அதற்கான உட்கட்ட அமைப்புகள் இன்னும் தமிழகத்தில் இல்லை.
சம்பளம் - இந்தியாவில் இன்றைக்கு சம அனுபவத்தில் மென்பொறியாளரக்கு இணையான சம்பளம் கிடைக்காது. ஆனால் நாள்தோறும் பென்/வன் பொறியாளர்களின் எண்ணிக்கை இங்கு புற்றீசல் போல பெருகி கொண்டு வருவதால் மற்றதுறைகளுக்கான கிராக்கி அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவே கூடிய விரைவில் மற்ற துறை நிபுணர்கள் பென்/வன் பொறியாளர்களை விட அதிக சம்பளம் வாங்குவார்கள், (சிறந்த உதாரணம் - CA)
SYLLABUS கடினமான பாடங்கள், மிக விரிவான பாடங்கள் (உதாரணமாக மற்ற பொறியியல் துறைகளில் 2 வருடங்களுக்கு பிறகு கணிதயியல் பாடங்கள் வருவதில்லை. ஆனால் வேதிப்பொறியியலில் 3 ஆண்டுகள் முடிய துணைப்பாடமாக வரும்)
பெண்களுக்கான வாய்ப்புகள் பெண்கள் இத்துறையில் வேலை செய்வது கொஞ்சம் கடினம். திறமை இருந்தாலும் பெண் என்பதால், அவர்களின் அசவ்கரியங்க்களை காரணம் காட்டி ஒதுக்கும் துறை இது. ஆனால் இத்துறையிலேயே, bio technology (இந்தியாவில் இன்னும் முழுமையாக வளரவில்லை, எனவே exposure குறைவு) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள் (Research & Development) பெண்களுக்கு சிறப்பாக அமையும். பெண்களே வெளி நாட்டு மேற்படிப்பு என செல்லும் போது அங்கே இந்த பிரச்சனைகள் இல்லை.
சுயதொழில் - துரதிஷ்டமாக துவக்க முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது, எனவே குடும்ப பின்னணி கொஞ்சம் அவசியமாகிறது.



கவனத்திற்கு..

நான் மேலே என் துறையின் பலம் மற்றும் பலவீனங்களை ஒப்பிட்டு உள்ளேன். கை ஒன்றாலும் விரல்களின் நோக்கம் வேறுபடுகிறது. அதைப்போலவே ஒவ்வொருவரின் குடும்ப சூழ்னிலையும் வேறுபடும். ஒருவருக்கு காலேஜ் முடித்தவுடன் கட்டாயம் வேலைக்கு, சிலருக்கு வேலைக்கு சென்றுதான் ஆக வேண்டும் என்று இருக்காது. சிலருக்கு கல்யாணத்திற்கு முன் வேலை போதும், எனவே முடிவு உங்கள் கையில்

கல்லூரிகள்

INDIAN INSTITUTE OF TECHNOLOGY - சென்னை
NATIONAL INSTITUTE OF TECHNOLOGY - TRICHY
UNIVERSITY DEPARTMENTS OF ANNA UNIVERSITY CHENNAI, ACT CAMPUS
COIMBATORE INSTITUTE OF TECHNOLOGY, COIMBATORE
SRI RAM ENGINEERING COLLEGE, PERUMALPATTU - CHENNAI
VEL HIGH TECH SRI RANGARAJAN SAKUNTHALA ENGINEERING COLLEGE
SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING, SRIPERUMBADUR
SRI SIVASUBRAMANIYA NADAR COLLEGE OF ENGINEERING - THIRUPORUR POST
ST.JOSEPH'S COLLEGE OF ENGINEERING, CHENNAI - 600 119
ADHIPARASAKTHI ENGINEERING COLLEGE, MELMARUVATHUR
ARULMIGU MEENAKSHI AMMAN COLLEGE OF ENGINEERING (NEAR KANCHIPURAM)
ARUNAI ENGINEERING COLLEGE, TIRUVANNAMALAI
ADHIYAMAAN COLLEGE OF ENGINEERING,HOSUR (AUTONOMOUS)
ERODE SENGUNTHAR ENGINEERING COLLEGE - ERODE
KONGU ENGINEERING COLLEGE, ERODE (AUTONOMOUS)
ANJALAI AMMAL MAHALINGAM ENGINEERING COLLEGE - THIRUVARUR
MOHAMED SATHAK ENGINEERING COLLEGE, RAMANATHAPURAM
ST.MICHAEL COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY,KALAYARKOIL-சிவகங்கை.

மற்றும்

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அம்ரிதா பல்கலைகழகம்.


செவ்வாய், 2 ஜூன், 2009

உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்

ஆற்றல் அழிவின்மை விதி (நன்றி : 8ஆம் கிளாஸ் அறிவியல் நன்றாய் எடுத்த ஆசிரியர்) எப்படி எல்லா இடங்களிலும் பொருந்துமோ அதைப் போலவே 2000 வருடங்களுக்கு முன் எழுதிய திருக்குறளும் எல்லா இடங்களிலும், எல்லா கால கட்டத்திற்கும், எல்லாதுறைகளிலும், பொருந்தும் என்பதை ஒரு மொக்கையாக சொல்லி இருக்கேன். மற்றபடி உங்கள் திறமையே உங்கள் புகழ் பாடும்.

அகர முதல எழுத்தெல்லம் ஆதி

பகவன் முதற்றே உலகு

முதல் பின்னூட்டம் ஆதிக்கு இட்டால் உங்கள் பெயரை எல்லோருக்கும் தெரிந்து கொள்வார்கள். காரணம்?? அவருக்கு தமிழிஸீல் வரும் ஓட்டைவிட அவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் நிறைய பேர் பார்ப்பார்கள்!!! (தெரிந்து ஒன்னும் ஆகாது என்பது வேற விஷயம்,.. சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்,.... வசிஷ்டர் ஆதி என்னை மன்னிப்பாராக,.. )

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நாண நன்னயம் செய்து விடல்.

பின்னூட்டத்தில் ஹாய் சொன்னால் பதிலுக்கு ஹாய் சொல்லு. டேய் நாயே சொன்னால் பதிலுக்கு ஆருயீர் நண்பரே என்று சொல்லு.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

எல்லா பின்னுட்டத்திற்கும் ஒரு பதில் பின்னூட்டம் போடு,. நன்றி சொல்லிவிடு. மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்ற் மாகும் இறைக்கு

(பொருள்: முன்னே தன் குற்றத்தைக்கண்டு நீக்கிக் கொண்ட பிறகு பிறருடைய குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானால் அவனிற்கு என்ன குற்றம் உண்டாகும்??)

நன்றாக புலம்பு,.. அவன் இதனை கண்டுக்க மாட்டிங்றான், இவன் காசு புடுங்குறான், ஐ. நா சபையே இல்ல, இங்கே யவனும் சரி இல்ல, பொண்டாட்டி டி.வி பார்க்கவிடமாட்டிங்குறா அப்படீன்னு எல்லாத்துக்கும் எல்லாரைப்பத்தியும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல, ஆபீஸ் நேரத்துல, ஆபீஸ் இன்டெர்னெட் கனெக்சன்ல மாசத்துக்கு ஒரு புகார் பதிவை போட்டுக்கிட்டே இரு,.. (யவருமே பாலோ பண்ண முடியாத குறள் இது. வெற்றியே குறிக்கோளாய் கொண்டவர்கள் குறளை ஓரத்தில் வைத்துவிட்டு உங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருங்கள். எல்லோரும் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லனும்!!!)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில நேரங்கள்ள இந்திய ராணுவம் கோவையில் க.மூ.சா தொண்டர்களிடம் தோல்வி, பிரபாகரன் இறந்தார் என செய்தி பதிவு வரும். அது போன்ற பதிவுகளை போடும் முன்பு உண்மையை தெரிந்து கொண்டு போடு.

தோன்றின் புகழோடு தோன்றுக ஆக்திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

நீங்கள் சில நேரங்களில் மிக பிரபலமானவராக இருக்கலாம். நீங்கள் பதிவுத்துறைக்கு (இது ரெஜிஸ்டர் ஆபிஸ் இல்ல,.. பதிவுத்துறை என்றால் பதிவர்கள் இருக்கும் துறை) வந்தால் மிக குறுகிய காலத்தில் மேலே வந்து விடுவீர்கள்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

யாரையும் வலைப்பதிவில் கிண்டல் செய்யாதீர்கள். அதே நபர் பின்னொரு நாளில் உங்கள் மோசமான கவிதையை நாறடிப்பார்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

(பொருள் : நல்ல ஆண்மை என்பது தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுதல்,..) சக பதிவரின் பிறந்த நாள், அவர் குழந்தையின் பிறந்த நாள் நினைவு வைத்து ஒரு பதிவு போடு. நண்பர் ஆவியில் கதை எழுதியது பாராட்டி ஒரு பதிவு போடு. எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும். (எந்த அளவிற்கு சூடு என்பது உங்களுக்கு வரும் பின்னூட்டத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)

நன்றி : ஆசிரியர் - திருக்குறள் (ஜோதி, இம்புட்டு நல்லவனாடா நீ )

திங்கள், 1 ஜூன், 2009

இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு


அப்பாடா, ஒரு வழியாக ஊருக்கு கிளம்ப போகிறோம். சென்னையிலிருந்து துபாய் வந்து 6 மாதமாகி விட்டது. பெற்றோரைப் பார்க்க முடியவில்லை, மனைவியை பார்க்க முடியவில்லை. அதைவிட என் அருமைக்குழந்தையை பார்க்க முடியவில்லை. என்ன செய்ய வீட்டுக்கடன் இருக்கே,. இந்தியாவில் இருந்தால் 20 வருஷம், இங்கேன்னா ஒரே வருஷம். ஓட்டிதானே ஆக வேண்டி இருக்கு,..

பெட்டியை எடுத்து வச்சாச்சு.அப்பாவிற்கு வாங்கிய சுகர் மெசின்னயும், மனைவிக்கு இங்கே வாங்கிய அந்த 24 கேரட் நகையை எடுத்து வச்சாச்சு. மகனிற்குதான் கொஞ்சம் தேடி அலைந்து அந்த அசல் போலவே இருக்கும் அந்த ஏரோபிளெனை வாங்கினேன். நான் சென்னையில் இருந்து கிளம்பும்போது ஏர்போர்ட்டில் அவன் அழவே இல்லை. அவன் வானத்தில் பறந்து போகும் அந்த ப்ளைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே சிரிப்புதான். வீட்டிற்கு அவர்கள் என்னை வழி அனுப்பி சென்றபின் என்னைக் காணாமல் இரவு பூரா அவன் அழுது கொண்டே இருந்திருக்கிறான். இப்போது என்னை மறந்தேவிட்டதாக என் மனைவி சொல்லுகிறாள்.

நான் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். காரணம் அவன் என்னை விட்டே பிரியமாட்டான். நான் சென்னையில் office கிளம்பும்போது அவன் தூங்கி கொண்டிருப்பான். நான் சத்தமில்லாமல் ஓடிவிடுவேன். மாலை நான் வந்ததும் என் மீது தாவி ஏறுவான். அப்பா, அப்பா என நொடிக்கொரு முறை சொல்லுவான். நான் கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது என் தொடை மடியில் உட்கார்ந்து கொள்வான். கண்டிப்பாக அது என் வலது தொடையாக இருக்கும். உடனே என் மனைவி கத்துவாள். "டேய் அவரை சாப்பிடவிடேண்டா".

காலையில் சென்னையில் இறங்கியவுடன் பார்த்துக் கொள்கிறேன், என்னை எப்படி மறந்து இருப்பான் என்று. நான் போனவுடன் கையை தூக்குவேன்,.. "அப்பா" என்று ஓடி வருகிறானா, இல்லையா என்பதையும் பார்த்து விடுகிறேன். அவன் வந்தவுடன் அவன் வயிற்றில் கடிக்கவேண்டும், அவனிற்கு வலிக்காத மாதிரி.

அப்பாடா ஒரு வழியாக ப்ளைட்டில் வந்து உட்கார்ந்தாச்சு. விமான பணிப்பெண் பார்த்து சிரித்தாள். உதட்டில் அழகான புன்னகை இருந்தது. அவள் கண்களில் என் கருமை நிறத்திற்கு வெள்ளையர்கள் தரும் மரியாதை நன்றாக ஒட்டிக்கொண்டிருந்தது. நான் முன்னால் இருந்த புத்தகத்தின் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

"ட்ங்க் ட்ங்க்,.."

நிசப்தம். அப்பாடா ப்ளைட் கிளம்பிருச்சு போல இருக்கு,..

"ட்ங்க் ட்ங்க்,."

மீண்டும் நிசப்தம், "டேய் ப்ளைட்டை கிளப்புறேன்னு சொல்லுங்கடா,".. மனதிற்குள் நான்.

"ட்ங்க் ட்ங்க்,."

"சார்,."

இதென்ன குமாரின் குரல்,..அவனும் ஊருக்கு வர்ரான்னா,.. திரும்பினேன்.

"ஓ மை காட்"

குமார் என்னை பார்த்து சிரித்தான்,..
.
"சார்,. ரொம்ப நேரமாய் காலிங் பெல்லை அடிச்சிட்டுருக்கேன், வண்டியில் ஜாகிரும், இஸ்மாயிலும் உட்கார்ந்திட்டுருக்காங்க,.."

"சாரி குமார் தூங்கிட்டேன், அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்"

பாத்ரூம் ஸவரை போட்டேன். அதற்கு முன்னாலேயே தாரை தாரையாக வந்துகொண்டிருந்தது என் கண்களில் இருந்து கண்ணீர். ஸவரின் சத்ததில் என் அழுகை வெளியில் கேட்டிருக்க நியாயமில்லை.