சொம்பு :
பதிவுலக பிரச்சனைகளில் நடுவில் மாட்டிக்கொள்ளும் அப்பாவியை துவம்சம் செய்யும் ஆயுதம். இரண்டு குரூப் டமால் டுமீள் என சண்டை போட்டுக் கொள்ளும் போது "நாமெல்லாம் சண்டை போட வேணாம் தல" என வரும் இவர்களை ரெண்டு க்ரூப்பும் சேர்ந்து காலி செய்துவிடும், சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.
ஆப்பு:
இப்படி ரொம்ப நல்லவனாக நாம் சமாதனத்தூதுவனாக செல்லும் போது நம் நண்பன் ஒருவனே காலை வாரிவிடுவான். இதன் பெயர்தான் ஆப்பு. சில நேரங்களில் நம் எழுத்து இடறி நாமே நம்மை வாரிக் கொள்வோம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு,..
தோப்பு
தனியாக இது போன்ற சண்டைகளில் நாம் மாட்டிக்கொள்ளும் போது அங்கிருக்கும் மொத்த பதிவர் கூட்டமே நமக்கு சேர்த்து வைக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆப்புகளுக்கு தோப்பு என பெயர்,.. பொதுவாக தோப்பில் சிக்கி கொள்ளும் பதிவர் ஒன்று பதிவுலத்தைவிட்டு ஓடி விடுகிறார்,. இல்லை என்றால் தன் நிலை பிறள்கிறார் (பாருங்க ,.. நான் எப்படி டீசண்டா சொல்லுறேன்)
பின்னூட்டம்
ஆப்பு வாங்குவதற்கு/வைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உளி. இது முழுக்க ஒரு பதிவை படித்தபின் தமிழீஷ் ஓட்டைத் தவிர இதையும் சன்மானமாக அளிக்க வேண்டியது. ஆனால் பலர் படிக்காமலேயே எழுதி வைத்துவிட்டு செல்வதுதான் கொடுமை. இதைதான் ஆப்புடன் கூடிய பல்பு என பதிவுத்துறை வர்ணிக்கிறது (அதாம்பா,.. பதிவர்கள் இருக்கும் துறை). யாருக்கும் ஆப்பு வைக்காமல் தன் வருகையை மட்டும் பதிவு செய்வதை "மீ த ப்ர்ஸ்ட்" என வரையரை செய்யப்படுகிறது (burst இல்ல first,.. வந்த உடனே ஒரு மனுஷன் burst ஆனா என்னவாகிறது),.. இதன் மூலம் (அட,.ச்சை,.. அதாம்பா origin) என்னவென்றால் முதல் காலத்தில் பின்னால் (இது பேக் சைடு இல்ல) குத்தி குத்திக் காட்டி பதிவர்களை ஊக்கப்படுத்தியதால் பிற்காலத்தில் இது மறுவி பின்னூட்டம் என அழைக்கப்படுகிறது. (ஷ்ஷ்ஷ்ப்பாடா,. மூச்சு வாங்குது)
மொக்கை
ஒரு பதிவரால் ஹிட் ஆகுமா/ ஆகாதா என சந்தேகத்துடன் எழுதும் பதிவு. ஆனால் பதிவுலக நடைமுறைகளின்படி (அப்படின்ன இன்னாபா??) இவை ஹிட் ஆகிவிடும். இதன் மூலம் எப்படியென்றால் முதலில் பதிவுகளை அனுபவம் இல்லாமல் பெரிதாக (அதாம்பா மொக்கையாக) எழுதிவிடுவர், அது பெரும்பாலும் ஒத்தை ஓட்டுடன் சொத்தையாக நிற்கும்.
தங்கமணி
பதிவுலகத்தால் துவைத்துப்போடப்படும் விவரமான அப்பாவி மனைவிமார்கள். (ஆனால் வீட்டில் எல்லாத்துணியையும் துவைப்பது நம் பதிவர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே,.) இதற்கான பெயர்காரணம் குறித்து முறையான ஆதாரங்கள் இல்லை,.. ஆனால் வீட்டில் உள்ள மனைவிமார்கள் அடிக்கடி "தங்கம்" வாங்க "மணி" கேட்பதால் தங்கமணி இந்த பெயர் வந்திருக்கலாம்,.. (இதில் expert நம்ம பதிவர் ஆதிதான்,.. சான்சே இல்ல,. அவரின் கற்பனை தங்கமணி கதைகளுக்கு நான்/என் அலுவலக நண்பர்கள் அடிமை என்றே சொல்லலாம், நேரம் கிடைத்தால் புது பதிவர்கள் அங்கே விஜயம் செய்யுங்கள்,. தானாகவே எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்)
பிரபலப்பதிவர்
இது மிகமிக முக்கியம் நண்பர்களே,.. இவர் பதிவர்களுக்கு முன்னோடியாக பதிவுலகத்தால் கருதப்படுகிறார். ஆனால் செயல்கள் எல்லாம் பின்னால் இருந்து நகர்த்துபவையாக இருக்கும். இவர்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என அரிச்சுவடிகளில் (அரிச்சுவடியா? ஆத்திச்சூடியா,.. அய்யயோ சரியா தெர்லயே) தேடிப்பார்த்த போது இவர்கள் போற இடமெல்லாம் பிராபலம் வருவதால் பிராபலப்பதிவர், பிராபலபதிவர் என அழைக்கப்பட்டு பின்னர் தொழில்னுட்ப வளர்ச்சியால் பிரபலப்பதிவர்கள் ஆனார்கள்,..
இவர்கள் இல்லாமல் மூத்தபதிவர்கள் என்ற வகை உள்ளது. இவர்களில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று வயதான பதிவர்கள் (மரியாதைக்காக யாரும் இவர்களை ஒண்ணும் சொல்லமாட்டார்கள்,..), இன்னொன்று 2007ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள். வருஷத்திற்கு ஒரு 10 பதிவைப் போட்டுவிட்டு பாத்துக்கப்பா,.. நான் ஜெயிலுக்கு போய்ட்டேன், ஜெயிலுக்கு போய்ட்டேன்,, நானும் ரௌடிதான் (பதிவர்தான்) என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஒரு பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு போடுவாங்க,.. நேரப்பற்றாக்குறையாலும், தங்கமணிகளின் தொந்தரவாலும் இவர்கள் இப்படி பாதி பதிவராகவும், முக்கால்வாசி வாசகராகவும் ஆகிவிட்டார்கள்.
கவிஜ
இது கூட மிக மிக முக்கியம். கிட்டதட்ட மனசாட்யே இல்லாமல் எல்லா பதிவரும் கைவைக்கும் இடம் இதுதான். (நான் கூட அந்த கொடுமையை இரண்டு முறை செய்திருக்கேன்,. நல்ல வேளை ஹிட் ஆகாததால் யாரிடமும் " ஹிட்" ஆகாமல் தப்பித்தேன். சில நேரங்களில் கவிதையின்பால் உள்ள ஆர்வக்கோளாற்றில் நண்பர்கள் கவிதையை விளக்கம் கேட்டு "இது கூட தெர்ல" என பெரிய தோப்பு (விளக்கம் மேலே) வாங்கிய அனுபவம் கூட உண்டு). இதற்கு உள்ள ஒரே பிளஸ்பாய்ன்ட் இப்படிதான் இதை எழுத வேண்டும் என்ற எந்த எந்த வரையரையும் இல்லாதது. இப்போது நம் புத்திசாலி பதிவர்கள் படங்களில் வந்த நல்ல பாடல்களையே பதிவாய் போட்டு கவிதை எபக்டில் பேமசாகி விடுகிறார்கள். நான் கூட அப்படி போடலாம் என இருக்கேன் யாராச்சும் சாப்ட் காப்பி இருந்தா என் மெயிலுக்கு அனுப்பிவையுங்க,.. நான் எப்படியாச்சும் அதை கஷ்டப்பட்டு பதிவாக்கிவிடுகிறேன்,..
இதற்கான பெயர்காரணம் மிக எளிது,. தன் படைப்பு கவிதை என உறுதியாக நினைக்கும் புலவர்கள் தன் படைப்பை கவிதை என்றே அழைக்கிறார்கள். ஆனால் சிலர் இதை போய் நாம் கவிதைன்னு சொல்லலாமா?? நீதி தாங்குமா,..செங்கோல் வீங்குமா என நினைத்துவிட்டு அதை கவித, கவிஜ, கவி, கவித்தை (இவர் வித்தக கவிஞராம்,. அதனால் தன் படைப்பை இப்படி அழைக்கிறார்,.நான் கூட குரங்காட்டியா இருந்து கவிதை எழுத தாவிட்டார்னு நினைச்சேன்,..) என பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைக்கிறார்கள்.
பெயரில்லா
பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களையே சும்மா நடு நடுங்க வைக்கும் வினையூக்கிகள் (அதாம்பா catalyst),.. இதன் பெயர்காரணமும் மிக சிம்பிள்.பெயரே இல்லாமல் வந்து பேர் போனபதிவர்களின் பேரை நாறடித்ததால் இந்த பெயர். பெயரில்லாங்கற பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல,..
ங்க்கொய்யால,.
சமீப காலமாக பதிவுலகில் பயன்படுத்தப்பட்டாலும் இதன் மூலமும் அர்த்தமும் இப்போது தெரியவில்லை. இதற்கு நம் பதிவர் கூட்டம் எனக்கு உதவும் என நினைக்கிறன்,..