வெள்ளி, 24 ஜூலை, 2009

NRI சிங்கங்களா இல்லை குரங்குகளா??



அந்த வறண்ட இந்திய வனவிலங்கு சாலையில் ஒரு சிங்கம் வெறுத்துப்போய் இருந்தது. நமக்கு தினமும் ஒரு கிலோ கறிதான் கொடுக்குறாங்க, நமக்கு பத்தவே மாட்டிங்குது என்று. அப்போது துபாயிலிருக்கும் வனவிலங்கு சாலைக்கு ஒரு சிங்கம் வேண்டும் என்று ஒரு ஷேக் வந்தார். சிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி,.. தன் மனைவிகளையும் (??) குட்டிகளையும் விட்டு விட்டு ஒரு நாளைக்கு இரண்டு ஆடு கிடைக்கும் என்று எண்ணி துபாய் வனவிலங்கு சாலையை அடைந்தது.

அங்கு போனதும் முதல் நாள் சாப்பாடு பார்சல் வந்தது. பார்த்தால் ரெண்டு வாழைப்பழம். சரி, நம்ம முதலாளிக்கு நம் உடம்பின் மேல் கரிசனம் என்று விட்டுவிட்டது. அடுத்த ரெண்டு நாட்களும் தொடர்ந்து அதே வந்த படியால் சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. இதை விட கூடாது என்று எண்ணி நேராக மேலாளரைப் பார்த்தது." என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கீர்கள், நான் அந்த வனவிலங்கு சாலையில் ராஜாவாக இருந்தேன், இங்கு வந்து எனக்கு என்ன வாழைப்பழம் போட்டு ஏமாற்றப் பாக்குறீர்களா???" என எகிறியது. அதற்கு அந்த மேலாளர் சொன்னார் "ஐயா, நீங்கள் அங்கு சிங்கம் என எனக்கும் தெரியும், ஆனால் நீங்கள் வந்திருப்பது குரங்கின் விசாவில், எனவே உனக்கு குரங்கிற்கான உணவே வழங்க வேண்டும் என்பது எனக்கு வந்த உத்தரவு" என கோபப்படாமல் சொன்னான். இப்போது அந்த சிங்கம் தனக்கு அந்த ஒரு கிலோ கறியாவது கிடைக்காதா என ஏங்கிக் கொண்டு உள்ளது"

கதையின் கருத்து ; எங்கோ குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருங்கள் NRIக்களே,..

என்னை மின்னஞ்சலில் வந்த இந்த கதை மிகவும் சூடாக்கியது. ஆனால் யோசித்துப் பார்த்தால் கருத்து சரியானது போலவும் தோன்றியது. எனவே இதை விவாதமாக நடத்த இரண்டு குழுக்களாக நானே பிரித்து உள்ளேன். கருத்திற்கு மறுப்பு தெரிவித்து துபாய், லண்டன் சிங்கப்பூர், ஒரு அணியாகவும், மேலே சொன்ன கருத்து சொன்னது சரியே என்று மதுரை, சென்னை, கோவை என இன்னோரு அணியாகவும் விவாதிக்கலாம்.

துபாய் (தவறு)

ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வை சௌகர்யமாக அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. அது சிங்கமாக இருந்தாலும் சரி, இல்லை குரங்காக இருந்தாலும் சரி. அது அவைகளின் சொந்த உரிமை. அவைகளின் அதிர்ஷ்டம். வீட்டு நாயிற்கு தினமும் பால் சோறு கிடைக்கிறது என்பதற்காக வெளியில் இருக்கிற நாய் குரைக்க கூடாது. வீட்டு நாய்க்கு அதிர்ஷ்டம் உமக்கு இல்லை அவ்வளவே. தானும் தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த சிங்கம் நாயாகி, குரங்காகி அங்கே போய் உழைத்து கஷ்டப்பட்டு ஆடு ஆடாக சேர்த்து சேர்க்கிறது. இங்கே வந்தவுடன் இங்கே இருக்கிற தன் சக சிங்களுக்கு ஆட்டை அடித்து பிரியாணி வைக்கிறது. தான் குரங்காகி மற்ற தன் ரத்த சிங்கங்களை செழிப்பாக வைத்திருக்கிறது. தினமும் அரைக்கிலோ சாப்பிடும் சிங்கத்திற்கு பொறாமை, ஒரு குரங்கு சம்பாரித்து தன் சொந்தங்களுக்கு மட்டுமே தந்து கொழு கொழுவென இருக்கிறது, நாம் எழும்பும் தோலுமாக இருக்கிறோம் என்ற வயிற்றெச்சல் அவ்வளவுதான்.

மதுரை (சரி)

அண்ணே, வணக்கண்ணே. நீங்க சிங்கம்மா இருங்க, இல்ல அசிங்கமா இருங்க, எங்களுக்கு கவலை இல்லண்ணே. ஆனா, இங்கன்ன நாங்க தோட்டத்துல கஷ்டப்பட்டு சம்பாரிச்சு தேங்காயை நீங்க பத்து ரூபாய்க்கு வாங்குறீங்க,. நாங்க கேனப்பய மாதிரி 2 ரூபாய்க்கு விக்கிறோம். எதுக்கு?? எங்கல தூக்கிவிட அரசாங்கம் இருக்குன்னு ஒரு நம்பிக்க,. என்னைக்காவது எம்புள்ளையும் ஆபீஸ்ல உக்காரும் ஒரு நப்பாசை. ஆனா இந்த அரசாங்கம் என்ன பண்ணுது? ஒரு இஞ்சினியர ரெடி பண்ண 10 லட்சம் செலவு பண்ணுது, ஒரு டாகடர ரெடி பண்ண 25 லட்சம் செலவு பண்ணுது. நீங்க என்னா பண்றீங்க?? அரசு பணத்துல படிச்சுட்டு அமெரிக்கா, லண்டன்னு போய்றீங்க,. நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற அரிசி நாங்க தின்றதில்லயா, இவிங்கலுக்குதான் அனுப்பி விட்டராய்ங்க,.. ந எமக்கு 2 ரூபா அரிசியையும், சீமத்தண்ணியயையும் குடுத்து முடிச்சுபுடுறாய்ங்க. நாங்க இங்கன அடுப்பெறிய ராவெல்லாம் ஊதிக்கிட்டுருக்கோம்.

மொதல்ல டாக்டருக்கு படிச்சு முடிச்சொனே ரெண்டு வருஷம் எங்க சிலுக்குவார்பட்டிக்கெல்லாம் வந்து சேவகம் செஞ்சிட்டு, அப்புறம் அது சிங்கம்புணேரில வேல செஞ்சா யென்ன, சிங்கப்பூர்ல வேல செஞ்சா யென்ன? என்னாண்ணே நாஞ்ச்சொல்றது?/

லண்டன் (தவறு)
இங்கே இருக்கிற அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அன்னிய முதலீடுகளேயே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கூடுதலாக உள் நாட்டில் அதிக அளவு உற்பத்தி இருக்க வேண்டும் இன்னும் அது நமக்கு பலம். நீங்கள் இறக்குமதியை குறைத்து அதிகளவு ஏற்றுமதி செய்வதால் உங்களுக்கு உங்களின் ரூபாயின் மதிப்பு கூடுகிறது. நீங்கள் தானியங்களையும், துணிகளையும், சர்க்கரையயும், மருந்துகளையும் ஏற்றுமதி செய்கிறீர்கள். எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை. அதனால்தான் எங்களையே விற்பனை செய்கிறோம். அது சிலருக்கு அறிவு சார்ந்த மூளையாக இருக்கிறது, சிலருக்கு கடின உழைப்பை தரும் கை, கால்களாக இருக்கிறது. இந்தியாவில் உயிரை கொடுத்து செய்யும் உடல் வேலையை (physical work) எடுத்துக் கொள்ளுங்கள். இருபது மாடி கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளில்லாமல் வேலைசெய்யும் ஒருவனுக்கு அதிகபட்சம் எவ்வளவு சம்பளம் உங்கள் பணக்கார முதலாளிகள் தருவார்கள். ஒரு 25 ஆயிரம் அதிகபட்சம்?? ஆனால் கீழே உள்ள படத்தில் வேலை செய்பவர்க்கு சம்பளம் 5 லட்சம். நான் இவரையும், அவரையும் ஒப்பிட முடியாதது உண்மைதான், ஆனால் உயிர் ஒன்றுதானே? அது இருபது மாடியில் போனால் என்ன? இல்லை 200 மாடியில் போனால் என்ன?.நாங்கள் வேலை செய்வது இந்தியாவை வளம் கொழிக்கத்தான் முதலில் இங்கு இருப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.








சென்னை (சரி)
நமஸ்காரம். நீங்க ஒன்ன பாக்கணும் பெரியவாளே, எந்த உயிருக்கும் அதோட தர்மப்படி வாழ்றதுக்கு உரிமை உண்டுங்கிறது வாஸ்தவம்தான். அது எப்போதுன்னு நோக்கினானேன்னா அடுத்தவாளை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும். எப்படி? நா மேலை பாக்குற பேங்குளேயே தனியா NRIக்கு அக்கவுண்ட் திறந்திர்ராள். அவாளுக்கு தனி க்யூ, நேக்கு தனி க்யூ. அவாளுக்கு ட்ரீட்மெண்ட் வேற, மத்தவாளுக்கெல்லாம் வேற, இது தான் சம நீதியான்னு கேக்குன்றேன். இங்க கஷ்டப்பட்டு உற்பத்திய பெருக்கிறவாளுக்கு ஒரு நீதி, படிப்ப முடிச்சன்னே அமெரிக்கா, பேரிக்கான்னு போறவாளுக்கு ஒரு நியதி. ஏன் நேக்கு கூடதான் மலேசியா offer வந்தது, நான் ஏன் ஜோய்ன் பண்ணல்ல? நேக்கு பெரியாவல்லாம் இருக்கா, அவாளுக்கு கடைசி காலத்துல சேவகம் பண்றத விட்டு விட்டு கண்டவாளுக்கெல்லாம் பண்ண சொல்றியாளா?. என் கேள்வி என்னன்னு கேட்டியாள்னா நீ அங்க பண்ற வேலையை இங்கே பண்ணினா ஏன் குறைஞ்சு போயிருவேள்னு கேக்குறேன். வெள்ளிக்கிழமைன்னா மொதல்லெல்லாம் எல்லாம் அம்பாள் சன்னதிக்கு வருவாள், இப்போ டாஸ்மார்க்குல்ல போறாள். இப்படி புத்தி இல்லாம திரியிர கூட்டத்த யார் கட்டுப்படுத்துவா? யாரும் பொறக்கும்போதே மஹாலஷ்மிய அழைச்சுண்டு வர்ரதில்ல, அது அவா அவாளுக்கா அமையுறது. சரி அன்னிய முதலீட்டுன்னாலதான் பலன் உண்டு, சொல்றேள் வாஸ்தவம். அதுக்கு நீ ஏன் துபாய்க்கு போறேள். நான் ஒரே ஒரு எக்சாம்புள் சொல்றேன். அந்த பாலும் குழந்தைக்கு 27 வயசு.(???) ஆனால் அவாளுக்கு கீழே 200 பேர் வேலை பாக்குறாள், கோடி கோடியா சம்பாதிக்கிறாள் யார் அவாள்? ஒரு குடிசை வீட்டுல பொறந்து எப்படி சரத் பாபு வந்தார். ஏன் அவாளுக்கெல்லாம் கஷ்டம் இல்ல? அவாளுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நோக்கு பணம்தான் நோக்கம், அதுதான் ப்ராணனை எடுக்கிர்றது.. சரத்பாபு நினைச்சா கிளம்பிருக்க முடியாதா? ஏன் அவாளுக்கு குடும்பம் இல்ல?? அவா மட்டும் எப்படி தன்னையும் உயர்த்திக்கிட்டு அடுத்தவாளையும் தூக்கிவிட்டா?. ஏன் அது மாதிரி நீ நினைக்கமாட்டீர்ரேள்னு எல்லாம் கேக்குறா, நானும் கேக்குறேன். அதுக்கு பதிலை சொல்லும்,.. அரசாங்க பணத்தில வளர்ந்துட்டு, எவனோ ஒருவன் நெல் விதைக்க நீ பொங்கி சாப்பிட்டுட்டு இந்தியாவுல வளர்ற அடுத்தவாளை பத்தி பேச நோக்கு என்ன யோக்யதை இருக்கு??

அடுத்த இரு விவாதங்களும், தீர்ப்பும் நாளைக்கு,.. (அது கூட உங்கள் பின்னூட்டத்தை பொறுத்தது.)

ஆகா,.. வர்ரவுங்க பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஒரு குத்து குத்திட்டு போங்கப்பா



.

27 கருத்துகள்:

Admin சொன்னது…

மிகவும் அவசியமானதொரு பதிவுதான். நன்றிகள் தொடருங்கள்...........

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//கதையின் கருத்து ; எங்கோ குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருங்கள் NRIக்களே,..//

ஆகா......

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அப்புறம் அது சிங்கம்புணேரில வேல செஞ்சா யென்ன, சிங்கப்பூர்ல வேல செஞ்சா யென்ன? என்னாண்ணே நாஞ்ச்சொல்றது?///

அண்ணே நீங்க சிங்கம்புணேரி யா

jothi சொன்னது…

//மிகவும் அவசியமானதொரு பதிவுதான். நன்றிகள் தொடருங்கள்............//

வருகைக்கு நன்றி சந்ரு. நான் யோசித்து போடுற பதிவெல்லாம் ஊத்திக்குது, நடிகையின் படத்தைப்போட்டு பாகங்களை குறிச்சா ஹிட்டாகுது,.. ஒன்னும் புரியல,.. ஆனால் ஐந்து பதிவில் இது மாதிரி எனக்கு புடிச்ச ஒன்னு வந்துக்கிட்டே இருக்கும்.

jothi சொன்னது…

மிக்க நன்றி ஞான சேகரன். கருத்து சொல்லுவீங்கன்னு பார்த்தேன்,.. நான் சிங்கம்புணேரி இல்ல, திண்டுக்கல். கொஞ்ச நாள் என் அக்கா அங்குள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக இருந்தார்கள் அதனால் தெரியும். ஆனாலும் புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி என அந்த ஏரியா முழுசா எனக்கு நல்லா தெரியும் நண்பரே.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

விவாதத்தில் பணம் வெல்லுமா? தாய் நாடு வெல்லுமா?

பணம்தான் எல்லாரையும் மதிக்க வைக்குது என்ன பண்றது ஜோதி......?

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி வசந்த். இன்று மாலை போட்டுறலாம்னு நினைக்கிறேன். பணமும் முக்கியம். அதற்கு நாம் கொடுக்கும் விலை?? அதற்கு இது சரியாகுமா??

geethappriyan சொன்னது…

நண்பர் ஜோதீ
மன்னியுங்கள் ரொம்ப தாமதமாக உங்க தளத்திற்கு வருவதற்கு
எல்லாமே நல்ல சுவாரஸ்யமான சுவையான பதிவுகளை உள்ளது.
எல்லா பதிவுக்கும் ஓட்டும் போட்டாச்சு.

நண்பரே நான் 11 வருடங்கள் சென்னையில் வேலை செய்து விட்டே இங்கு வந்தேன் , நல்ல வெளிநாட்டு வேலையில் நீங்கள் அமர்ந்தாள் ஒரே வருடத்தில்
தங்கை கல்யாண கடனை அடைக்கலாம்,
வெளிநாட்டுக்கு வந்த கடனை அடைக்கலாம்.
இங்கு மூன்று வருடம்
வேலை பார்ப்பது நம் ஊரில் 10 வருடம் வேலை பார்ப்பதற்கு சமம்.
ஊரில் நீங்கள் வீடு வாங்க 20 வருடம் தவணை கட்டனும் ,இங்கே மூன்று வருடங்கள் போதும்.
என்ன சில தியாகங்கள் செய்யணும்.
கண்ட இடத்தில் பணம் கட்டி ஏமாற கூடாது.
நல்ல உழைப்பும் திறமையும்,விசுவாசமும் இருந்தால் இங்கு விரைவில் முன்னேறலாம்.
நான் என் முதலீடுகளை தாய் நாட்டில் தான் செய்கிறேன்.
அது என்னால் என் நாட்டிற்க்கு முடிந்த உதவி.

வெளிநாடு வர துடிக்கும் அன்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது

இப்போது ரிசெஷன்

சம்பளம் அதிகம் கிடைக்காது.
வேலை போகும் அபாயமும் அதிகம் உண்டு.
இன்னும் ஆறு மாதம் பொறுங்கள்
பின்னர் முடிவெடுங்கள்.
நல்ல கேம்பஸ் இண்டர்வியூவில் வரபாருங்கள்.
இதன் மூலம் அகேண்டிற்கு பணம்,விசாவிற்கு பணம் டிகடிற்கு பணம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
நண்பர் ஜோதி ரொம்ப அருமையான கட்டுரைங்க
தினமும் வரேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

ஜோதி, அருமையான பதிவு.. இதே கதை எனக்கும் மின் அஞ்சலில் வந்தது. நம் ஊரில் சிங்கமாக இருப்பதே சிறந்தது!

நண்பர் கார்த்திகேயனின் கருத்துகளை நான் அப்படியே வழிமொழிகிறேன் :))

நீங்க திண்டுக்கல்னா எங்க? நம்ம ஊரு பழனிக்கும் உடுமலைக்கும் நடுவுல மடத்துக்குளம்..

jothi சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி கார்த்திகேயன்.

என்னை உற்சாகப்படுத்தியதற்கு இன்னும் மிக்க நன்றி கார்த்திகேயன். (இது போன்ற பின்னூட்டங்கள் வந்தால் நான் நடிகையின் பாகங்களை குறிக்கிறேன்)

//இங்கு மூன்று வருடம் வேலை பார்ப்பது நம் ஊரில் 10 வருடம் வேலை பார்ப்பதற்கு சமம்.//

உண்மைதான். இந்த மூணு வருடத்தில் நாம என்னம்மோ இந்தியாவின் சொத்து முழுசையும் தூக்கிவந்துட்டமாதிரி எல்லாம் கத்துவானுங்க.

//நல்ல உழைப்பும் திறமையும்,விசுவாசமும் இருந்தால் இங்கு விரைவில் முன்னேறலாம்.//

இந்தியாவிற்கும் இது பொருந்தும் நண்பரே.

கொஞ்சம் அதில் நேர்மையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இந்தியாவில் இருந்தால் நடக்காது. நெளிவு சுழிவு வேண்டும். அயல் நாட்டில் இது இல்லாவிட்டால் முடியாது.

இன்னோரு வித்தியாசம் நீங்க சொன்ன அந்த "விரைவில்"

jothi சொன்னது…

//இதன் மூலம் அகேண்டிற்கு பணம்,விசாவிற்கு பணம் டிகடிற்கு பணம் போன்றவற்றை தவிர்க்கலாம்.//

என்னைப் பொருத்தவரை இந்த மூன்றுமே குடுக்காதீங்கன்னு சொல்லுவேன். காரணம் இங்கு நாம் எக்கச்சக்கமாக வாங்கினாலும் அதற்கு நமக்கு கொடுக்கும் சம்பளம் மிக சொற்பமே. இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் சாதாரண தொலிலாளிகளை அலைய விடுவது, நம் நாட்டில் இருந்து நமக்கு முன்னே சென்று ஏஜென்டுகளாக இருக்கும் நம் பக்கத்து மாநில கூட்டம்தான்.

கார்த்திக் சொன்னது…

அற்புதமான பதிவு ஜோதி.. இங்கு குரங்கு விசாவில் வருபவர்கள் தான் அதிகம்.. குப்புஸ் மட்டுமே வாழ்கை என வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்..

jothi சொன்னது…

//நீங்க திண்டுக்கல்னா எங்க? நம்ம ஊரு பழனிக்கும் உடுமலைக்கும் நடுவுல மடத்துக்குளம்..//

வாங்க செந்தில். ஆதரவிற்கு மிக்க நன்றி. நான் திண்டுக்கல் உழவர் சந்தைக்கு அருகில் செந்தில்.

உங்கள் பகுதிக்கு வந்திருக்கேன். பச்சை பசேலன மரங்களும், மலைகளும் கொண்ட அழகான பூமிக்கு சொந்தகாரர்கள் நீங்கள்.

jothi சொன்னது…

//அற்புதமான பதிவு ஜோதி.. இங்கு குரங்கு விசாவில் வருபவர்கள் தான் அதிகம்.. குப்புஸ் மட்டுமே வாழ்கை என வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்..//

வாங்க கார்த்திக். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. கடும் வெயிலில் வேலை பார்க்கும் அந்த ஜீவன்களை பார்த்தால் கண்ணீர் வந்துவிடும். அவர்கள் சோக கதையை கேட்டால் நெஞ்சில் ரத்தம் வந்துவிடும். முதல் முறை வெளி நாடு வருபவர்கள் ஆசையில் வருகிறார்கள். ஊருக்கு வந்து இரண்டாம் முறை கிளம்பும் போது இந்த வெளி நாட்டு வேலை அவசியமா என்ற கேள்வி தொக்கி நிக்கும். ஆனாலும் கால்கள் வானவூர்தியை நோக்கி சென்று கொண்டிருக்கும். அப்போது அவன் சந்தோசங்கள் அனைத்தையும் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டுதான் சொல்கிறான், இயந்திரமாக,...

jothi சொன்னது…

ஆகா,.. வர்ரவுங்க பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஒரு குத்து குத்திட்டு போங்கப்பா

பதிவு பெருசா இருந்தா எல்லாம் திரும்பி பார்க்காமல் ஓடிற்றாங்க

ஆகாய நதி சொன்னது…

உண்மையா சொல்லனும்னா இந்தியாவில் சிங்கமாக வாழ்வதே சிறந்தது என என் மனம் சொல்கிறது...

ஆகாய நதி சொன்னது…

உங்க பதிவுகளோட தரம் பதிவுகளில் இருக்கும் கருத்தும் வித்தியாசமாவும் ரொம்ப அருமையாவும் இருக்கு.... அதற்கு என்னுடைய வாழ்த்துகள்!

jothi சொன்னது…

ஆதரவிற்கு நன்றி ஆகாய நதி.

தீர்ப்பை எழுதியாச்சு படிச்சிட்டு முடிஞ்சா கருத்து சொல்லுங்க,..

Beski சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்கனும் ஜோதி.
---
வெளிநாடு போய் சம்பாதிக்கிறது தப்பே இல்ல. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லியிருக்காங்களே!

திறமையும் தகுதியும் உள்ளவந்தானே போகிறான்?
ஏற்கனவே சென்னை டிராபிக் ஜாம், வீட்டு வாடகை உயர்வுனால தாங்க முடியல... வெளிய போன அவ்ளோ பேரும் திருந்தி இங்க வந்தா என்ன் ஆகும்?

இந்தியப் பணத்துல படிச்சுட்டு அங்க போறது தப்பா? அதுக்குத்தான் வரி கட்டுறாங்களே!

அதவிட இங்க இருந்தா இந்த அரசியல்வாதிங்க, காவல்துறை கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும். எனக்கே எங்கயாவது வெளிநாட்டுக்கு ஓடிப்போயிறலாமான்னு இருக்கு. அவ்ளோ டார்ச்சர் பண்றானுவ.

jothi சொன்னது…

//வெளிநாடு போய் சம்பாதிக்கிறது தப்பே இல்ல. திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லியிருக்காங்களே!//

உண்மைதான் நான் வழிமொழிகிறேன். உங்கள் வாழ்க்கை சுகமாக இருக்க நீங்கள் செல்கிறீர்கள் இல்லையா?

//திறமையும் தகுதியும் உள்ளவந்தானே போகிறான்?
ஏற்கனவே சென்னை டிராபிக் ஜாம், வீட்டு வாடகை உயர்வுனால தாங்க முடியல... வெளிய போன அவ்ளோ பேரும் திருந்தி இங்க வந்தா என்ன் ஆகும்?//

சந்தேகமில்லை எவனோ ஒருவன். அதை நாம் இழக்க கூடாது என்பதுதான் இந்த கட்டுரையின் மையக்கருத்தே. எனக்கொன்றில் நம்பிக்கை உண்டு எவனோ ஒருவன். இன்னும் பத்து வருடங்களில் " work from home" ரொம்ப சாதாரணமாகிவிடும். அப்போது சிறு நகரங்களும் கண்டிப்பாக வளர்ச்சி பெரும்,.. " work from home" வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அத்தனை பேரும் திரும்பி வந்தால் ஒன்னும் இழப்பு வராது. எல்லா கம்பேனிகளும் இங்கே வந்தாக வேண்டும்,.. காரணம் low cost with highest profit. கண்டிப்பாக எல்லோருக்கும் வேலை இருக்கும் என்பதே என் கருத்து.

jothi சொன்னது…

//இந்தியப் பணத்துல படிச்சுட்டு அங்க போறது தப்பா? அதுக்குத்தான் வரி கட்டுறாங்களே!//

தப்பில்லை. ஆனால் இந்திய பணத்தில் படிச்சிட்டு இங்கேயே 30% சதவீதம் வரி என எந்த வசதிகளும் பெறாமல் கட்டுறானே அவன் கிறுக்கனா??

//அதவிட இங்க இருந்தா இந்த அரசியல்வாதிங்க, காவல்துறை கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும். எனக்கே எங்கயாவது வெளிநாட்டுக்கு ஓடிப்போயிறலாமான்னு இருக்கு. அவ்ளோ டார்ச்சர் பண்றானுவ.//

டார்ச்சர் இல்லாத இடமே இல்ல எவனோ ஒருவன். 100 கோடி மக்கள் தொகைதான் நம் பிரச்சனையே

jothi சொன்னது…

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, எவனோ ஒருவன்.

எனக்கொரு சந்தேகம், flv fileஐ ஸ்பிலிட் பண்ண என்ன இலவச சாப்ட்வேர் பயன்படுத்தலாம். ஒரு நல்ல பதிவிற்கு கொஞ்சம் பிரித்தல் ஒட்டுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது. உதவுவீர்களா??

jothi சொன்னது…

மிக்க நன்றி எவனோ ஒருவன் (பேர போடலாமா??) இனி மேல்தான் முயற்சி செய்ய வேண்டும்.

Beski சொன்னது…

//(பேர போடலாமா??)//
இதெல்லாம் ஒரு கேள்வியா? ராஜ் பதிவப் போய் பாருங்க... அவரெல்லாம் என்கிட்ட கேட்டுட்டா போடுறாரு?

jothi சொன்னது…

சாரி, மொதல்லையே கேக்கணும்னு நினைச்சேன். யாரு அது ராஜ்?? எனக்கு தெரியல,.. மன்னிக்கவும்

Beski சொன்னது…

யாரு ராஜ்ஜா?
ஜக்கம்மா உங்கள சும்மா விட மாட்டா...

jothi சொன்னது…

ஓஓஓஓஓஓஓஓஓ,.. குறை ஒன்றும் இல்லை, நான் இப்போதுதான் அவர் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன். எல்லாம் அவுங்க அவுங்க பேர வச்சா ஏன் இப்படி தர்ம சங்கடமெல்லாம் வருகிறது. மன்னிக்கவும்,..

கருத்துரையிடுக