ஞாயிறு, 12 ஜூலை, 2009

பெத்த மனசு



தூரல் ஆரம்பித்திருந்தது. மனதிற்குள் சந்தோஷம். நான் மீண்டும் வேளைக்கு போகிறேன். அப்பாடா ஒரு வழியாக பாலாவிடம் அனுமதி வாங்கியாச்சு. நான் வேளைக்கு போகணும்னு சொன்னது அவர் முகம் மாறித்தான் போச்சு. பார்க்க பாவமாகதான் இருந்துச்சு. ஆனால் என்ன செய்ய?? அவர் நான் என் தம்பிக்காக பணம் கேட்கும்போது அந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். அந்த வார்த்தை எவ்வளவு பெரிய வார்த்தை.

வேறொன்றும் இல்லை. அப்போதுதான் என் தம்பி NIIT கோர்ஸ் சேர வேண்டும் என்று சொன்னான். என்னிடம் பணம் இல்லை. என் அப்பாவும் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாலும் ஏற்கனவே என் கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே இருப்பதாலும் முடியாது என்று சொல்லிவிட்டார். என் தம்பி இது வரை என்னிடம் எதுவும் கேட்டதில்லை. என்னிடம் வந்து முதன் முதலாக NIIT கோர்ஸ் சேர்வதை பற்றி விளக்கமாக சொல்லி பணம் கேட்டான். எனக்கும் அது அவசியமாகபட்டது. வேலைக்கு போனவுடன் தந்துவிடுவதாகவும் சொன்னான். ஆனால் என் கணவர் பாலாவிடம் பணம் இருக்குமா என தெரியவில்லை. சரி கேட்கலாம் என்றுதான் கேட்டுப் பார்த்தேன். "இப்படியே கொடுத்துகிட்டே இருந்தா நான் தெருவில நிக்க வேண்டியதுதான்" பாலா முகம் சிவந்திருந்தது. அது என்னை கோபப்படுத்திவிட்டது. இல்லை என்று சாதாரணமாய் சொல்லி விட்டு இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள், என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. நான் வேலைக்கு போனால் ஏன் இந்த கஷ்டங்கள். நான் பாலாவிடம் கூனி குறுகி கேட்காமல், தைரியமாய் கேட்கலாமே. நானும் வெத்துவேட்டு இல்லைல. நானும்தானே MCA படிச்சிருக்கேன். நானும்தான ITல மூணு வருஷம் வேலை பார்த்தேன்.

போன வருஷம் ஆனந்த் வயித்துல தங்கின பின்னர்தான் என்னால் வேலைக்கு போக முடியவில்லை. பல்லை கடிச்சுட்டு பேசாம வேலையை கண்டினியூ பண்ணி இருக்கலாம். ஆனால் என்னால் ஒண்னுமே செய்ய முடியவில்லை. வாந்தியும், தலை சுற்றலும் ரொம்ப அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு பத்து முறை பாத்ரூம் போனால் என்னதான் செய்வது. வாந்தி வருவது போல் இருக்கும், ஆனா வாஸ்பேசின் போனவுடன் வராது. நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் "வரும், ஆனா வராது".

எனக்கு அதெல்லாம் காதில் விழாத மாதிரி சீட்டிற்கு வந்துவிடுவேன். வந்தவுடன் மீண்டும் வருவது போல் இருக்கும். வாஸ் பேசின் போய் நிற்பேன். சும்மா அடி வயிற்றிலிருந்து கிளம்பி வரும் வாந்தி, நான் போடுகிற சத்தம் ஆபீஸ் முழுவதும் கேட்பது போலவே இருக்கும். முடிந்தவுடன் வெளியில் உள்ள மாலதி கேட்டாள். "வராது, வந்தா முழுசா வரும்".. அவள் கல்யாணம் ஆகாதவள் என் வேதனைகள் அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னும் சில சமயங்களில் தலை சர் சர்ரென்று சுற்றும். அப்பாடா,.. வேணாம்டா சாமி,.. வேலையே வேண்டாம்னாலும் பரவாயில்ல, எனக்கு என் பட்டு குட்டி நல்லபடியா வேணும்".. வீட்டில் வந்தவுடன் சொன்னேன்.

"ஏங்க,.. என்னால ஒண்ணுமே பண்ண முடியல,.. எங்க ஆபீஸ்லேயே விழுந்திருவேன்னு பயமா இருக்கு, நான் வேலையை விட்டிரவா"

"உன் முடிவுதான் முக்கியம். உனக்கு என்ன சரியென்று படுகிறதோ அதையே செய். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை" பாலு ஓகே சொல்லிட்டார்,

அடுத்த நாளே போய் ரிசைனேசன் லெட்டர் கொடுத்தேன். group head ஒத்துக்கல,..

"இது பார்மா, ரிசைன்லாம் பண்ணாத, மெடிக்கல் சர்டிபிகெட் கொடுத்துடு, சம்பளம் வராது,.. குழந்தை பிறந்து ஒரு மூணு மாசம் கழித்து வந்து join பண்ணிக்க, நான் எம்.டி.ட்ட சொல்லிர்ரேன். all the best. ஸ்வீட் கொடுத்துவிட்டுதான் திரும்பவும் join பண்ணனும், ஆமா சொல்லிட்டேன். கிளம்பு,.."

எனக்கு ரொம்ப சந்தோசமாய் போய்விட்டது. நல்லவேளை வேலை போகவில்லை. குழந்தை பிறந்தவுடன் வந்து திரும்பவும் join பண்ணனும்,.. நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதுக்குபின் இன்றைக்குதான் போறேன். இந்த வேளை பார்த்து மழை வேறு அடிக்கிறது. பஸ்சில் கிளம்பினேன். ஒரு வழியாக பஸ்ஸில் இடம் கிடைத்தது. உட்கார்ந்திருக்கும் போதே மழை வலுக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு டக்கென்று ஆனந்த் நியாபகம். நான் அவனை போர்த்திவிட்டுதான் வந்திருந்தேன். ஆனால் என்னதான் போர்த்தினாலும் அவன் கை, காலை உதறியே துணி எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்துவிடுவான். சில நேரங்களில் ஊச்சா கூட போய்விடுவான்,.. அயோ,.. குழந்தைக்கு குளிரடிக்குமே? அம்மாவிற்கு போன் செய்தேன்.

"ம்மா, என்ன மழை ஜாஸ்தியா இருக்கா, அவனை முழுசா போத்திவிட்டுருக்கியா?/"
"மழையா, இங்க ஒண்ணும் இல்ல, எங்க இருக்க?? அவன் பால் கொடுத்துட்டு போனதிலிருந்து நல்லா தூங்கிட்டுருக்கான்,.. எங்கன இருக்க"
"சையதாபெட்மா",.. போனை வைத்துவிட்டுருந்தேன்.
போன் அடித்தது,..அம்மா மீண்டும் போனில்,..
"ரேவதி,. மழைல நனையாத,.. பால் குடுத்திட்டுருக்க,.. நியாபகம் வச்சிக்க"'
"சரிம்மா" உரையாடல் முடிந்துவிட்டிருந்தது.

ஆபீஸ் போனவுடன் எல்லோரும் நலம் விசாரிப்பு. எல்லோருமே சொல்லிவைத்தார் போல் என்ன இப்படி குண்டாயிட்ட, என்ன இப்படி குண்டாயிட்டதான்,..ஆண்களின் பார்வைகள் மாறி இருந்தது. ஒரு வழியாக ஜாய்ன் பண்ணியாச்சு.முதல் நாள் என்பதால் வேலை எதுவும் ஒதுக்கவில்லை. HR பார்மாலிட்டியை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தேன். ரொம்ப நாளைக்கு பின் உடம்பு வேலை செய்வதால் ஒரு மாதிரி இருந்தது.

சும்மாவே உட்கார்ந்து இருந்ததால் ஆனந்த் நியாபகம் வந்துவிட்டது. அம்மாவிற்கு போன் செய்தேன்.

"என்னம்மா என்ன பண்றான்?"

"இதுவரை தூங்கிட்டுதான் இருந்தான், இப்ப நீ போன் பண்ணின பின்னாடிதான் முழிச்சிட்டு அழறான், பாரு ரொம்ப அழறான், நீ அப்புறம் போன் பண்ணு."
அம்மா போனை வைத்துவிட்டு இருந்தாள்.

ஆனந்த் அழுகை குரலை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"ச்ச, நம்மாள்தான் பையன் கஷ்டப்படுறான். என்ன பண்றது, இதெல்லாம் சமாளிச்சுதான் ஆகணும்"

ஒரே இடத்தில் இருப்பதற்கு ஒரு மாதிரி இருந்ததால் நான் பக்கத்து பிளாக் மாலதியை பார்க்க போனேன்.

ஆள் மாறி இருந்தாள். பணக்கார வரன் அவள் முகத்தில் தெரிந்தது.

சிரித்தாள். பேசினோம். கொஞ்ச நேரம்தான் பேசினோம்.

"பாத்ரூம் போய்ட்டு வரேன்". பாத்ரூம் சென்றேன். அந்த வாஸ்பேசினை பார்த்ததும் எனக்கு அந்த வாந்திதான் நியாபகம் வந்தது. அடுத்தவினாடியே ஆனந்த் என்ன பண்றானோ, கவலை,.. செ என்ன பொழப்பு இது," போன் செய்யவும் பயம்,.. முழிச்சிக்குவானோ கவலையா இருந்தது. மேலாடையை மாத்திவிட்டு வெளியே வந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அம்மாவிற்கு போன். நல்ல வேளை, தூங்கிகொண்டுதான் இருந்தான்.

"என்னம்மா சாப்பிட்டான்."
"என்ன சாப்பிடுவான்??, செரலாக்தான்"
அவன் எப்படி சாப்பிட்டான்னு தெரியல,.."
"ம்ம்ம்ம்ம்ம்"
"எப்பம்மா தூங்கினான்?"
"ஒரு மணி நேரம் ஆச்சு"
"சரிம்மா நான் போனை வச்சிடுறேன்"
"ஏ ஏ,.. நீ சாப்டியா??"
"சாப்பிட்டேன்"
போனை வைத்துவிட்டுருந்தேன், ,.. அம்மா சாப்பிட்டாளா என்பதை கேட்காமல்,.
இப்படியே சாயங்காலம் ஆனது. டைம் ஆனதும். கால் மணி நேரம், முன்னதாகவே பாஸிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

ஒரே ஓட்டம், பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாச்சு,.. நல்ல மழை என்பதால் சில்லென்று காத்தடித்துக் கொண்டே இருந்தது. குளிர் காற்று அவனிற்கு ஒத்துக்குமான்னு தெரியாது. இவன் ஒண்ணுக்கு போய் அம்மா பாத்தாளானு தெரியல,.. ம்ம்ம்ம்ம், சரி போன் பண்ணிரலாம். மீண்டும் அடித்தேன்.

"ம்ம்மா"
"ம்ம்"
"என்னம்மா பண்றான்"
"தூங்குறாண்டி"
"ஒண்ணும் பிரச்சனையில்லையே"
"இல்ல, இல்ல ஒடம்புதான் சாயந்தரம் கொஞ்சம் சூடா இருந்துச்சு,. கால்பால் அரை மூடி ஊத்திவிட்டேன்"
"என்னம்மா சொல்ற, ரொம்ப கொதிக்குதா??
"இல்ல, இல்லடி, சும்மா உடம்பு சூடா இருக்கு, பனிக்காத்து அடிக்குதல"
"சரிம்மா உடனே நான் வர்ரேன்"
இப்ப என்ன பண்றது?? கடவுளே நான் வேலைக்கு போற அன்னைக்கா இப்படி ஆகணும்,..கைகள் படபடக்க ஆரம்பித்து விட்டது.அம்மா சரியாதான் கொடுத்திருப்பாளா?, ஏதாச்சும் மாத்தி கொடுத்திருந்தா,.. பக்கென்றது,..அய்யயோ கடவுளே,.. சரி ஆட்டோ பிடிச்சு கிளம்பிறலாம்,.ஆட்டோ வந்தது.

"அடையார் போகணும்பா"
"130 ரூபா குடும்மா"
"80 ரூபாதானங்க"
மறு பேச்சு இல்லாமல் ஆட்டோ கிளம்பிவிட்டிருந்தது. கடவுளே என்ன இது. என் குழந்தைக்கு ஒண்னும் ஆக கூடாது.
பின்னாலேயே 23C டீலக்ஸ் வந்தது. ஏறலாமா??,. வேணாம் லேட்டாக்கிடுவான்,.. பின்னால் ஆட்டோ வந்தது.
அடையார் போகணும், ஏறி விட்டிருந்தேன்.
"150 ரூபா ஆகும்மா"
"போப்பா,.. தர்ரேன்"

திரும்ப அம்மாவிற்கு போன் பண்ணலாமா?? வேணாம் டென்ஷன் படுத்திடுவா,..2 வினாடிதான் ஆகியிருக்கும். போன் அடித்தது. அய்யோ அம்மா போன்ல
"என்ன எங்க இருக்க??"
"தேனாம்பேட்டைமா,.. எப்படி இருக்கு அவனுக்கு"
"தூங்குறான், சரி நீ சீக்கிரம் வா, டாக்டர் 7 மணிக்கு வேற கிளினிக் போய்டுவார்"
"வந்திடுறேன்மா"


ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். ஆட்டோவை வெய்ட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே அப்படியே ஓடினேன். அவனை பார்த்ததும் அழுகை பீறிட்டு வந்துவிட்டது. அவனும் என்னை பார்த்தது அழ ஆரம்பித்துவிட்டான். 5 நிமிடம் உட்கார்ந்து பார சுமையை இறக்கிவிட்டு, தூக்கிகொண்டு ஆட்டோவில் க்ளினிக்கு போனேன். கூட்டம். அரைமணி நேரம் இருக்கும். டாக்டர் கூப்பிட்டார்
"என்னம்மா பண்ணுது"
"பையனுக்கு காய்ச்சல்"
தொட்டு பார்த்தார். இல்லையெம்மா, தெர்மாமீட்டரை வைத்துப்பார்த்தார். நார்மலாதானம்மா இருக்கு,..
"இல்ல சார் கிளம்புபோது சூடா இருந்துச்சு, இப்ப குறைஞ்சிருக்கு போல"
'சரிம்மா, இதை தேவைப்பட்டா மட்டும் கொடு, சும்மா எல்லாத்துக்கும் மருந்து கொடுக்காதம்மா, வயறு புண்ணாகிடும் "
"சரிங்க சார்"


வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மா கேட்டாள்,.
"என்னடி டாக்டர் சொன்னாரு"
"காய்ச்சல்லாம் ஒன்னும் இல்லையாம், தேவைப்பட்டா மட்டும் மருந்து கொடுங்கன்னு கொடுத்திருக்கார்"
"நான் தான் அவ்வளவு சொன்னேன்ல,..நான் ஏதோ பிள்ளயே பெக்காத மாதிரி சொல்லுவா" அலுத்துக் கொண்டாள்.
"சரிம்மா, சோறு போடு பசிக்குது"

மனசு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பாலு பத்தரை மணிக்கு வந்தார். சாப்பிட்டு படுக்கையறைக்கு வந்தோம். நான் ஆரம்பித்தேன்.

"என்னங்க,.."
"ம்ம்ம்ம்"
என்ன்ன்ங்ங்க""
"ம்ம்ம் சொல்லு,.."
"நான் ஒன்னு சொல்லுவேன் கோச்சிக்க மாட்டிங்களே"
"ம்ம்ம்"
"நாளேலிர்ந்து நான் வேலைக்கு போகல"
"உன் இஷ்டம்"
அவர் கண்களில் ஒரு பிரகாசம் பூத்துக்கொண்டு இருந்தது. முகத்தில் வழக்கம்போல் மாற்றமில்லை. ஏன்னு கூட கேட்கவில்லை.
என் தோல்வியை ஏற்கமுடியாமலும், என் இயலாமையை ஒப்புக்கொள்ளாமலும் அவர் முகத்தை பார்க்க முடியாமலும் திரும்ப படுத்தேன்.
கண்களில் பொல பொலவென கண்ணீர் வந்து குழந்தையின் மேல்விட்டிருந்தது.
அடக்கமுடியவில்லை.
எனக்காக இல்லை,.
என் மகனிற்காகவும் இல்லை,..
கூடவே இருந்தும் உதவி செய்ய முடியாத இந்த கையாகாளாத ஒரே அக்காவை நினைத்து. என்ன படித்து என்ன பலன்?

10 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல கதை கலம், கதை அமைப்பு பராட்டுகள் நண்பா

jothi சொன்னது…

மிக்க நன்றி ஞானசேகரன். நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதும் படைப்புகள் கடலில் போட்ட கருவாடாய் கரைந்து போகிறது. மொக்கையாய் போடுபவை சக்கையாய் வருகிறது. எங்கோ தப்பு செய்கிறேன் என மட்டும் தெரிகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

அன்பரே..

அருமையான கதை. காட்சிகளின் விவரிப்பு அழகு. நேரில் பார்த்தது போல உணர முடிந்தது. தொடருங்கள்!

jothi சொன்னது…

//அருமையான கதை. காட்சிகளின் விவரிப்பு அழகு. நேரில் பார்த்தது போல உணர முடிந்தது. தொடருங்கள்!//

செந்தில் நண்பரே,

மிக்க மகிழ்ச்சி. நான் சாதாரணமாக எழுதி வெளிவிடும் பதிவிற்கு வரும் responseஐ விட இது மிகவும் கம்மியாக இருக்கிறதே என்ற வருத்தம்தான். ஆனால் என் தவறுகளை திருத்திகொள்வேன். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற தத்துவங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

உற்சாகமூட்டியதற்கு மிக்க நன்றி செந்தில்,.. தொடருங்கள் உங்கள் தமிழ் சேவையை,..

iniyavan சொன்னது…

ஜோ,

அருமையா எழுதியிருக்கீங்க.

"என்னடி, ஈரமா?, போய், ப்ராவை மாத்திட்டு வா, போடி யாரும் பாக்கறதுக்குள்ள"

இதெல்லாம் எழுதனுமா?

விக்னேஷ்வரி சொன்னது…

நல்ல கதை. அது எழுத்தில் அழகாய் வந்துள்ளது.

jothi சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி இனியவன். அதுவும் என் இவ்வளவு பெரிய கதையை படித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னதை நானும் எழுதும்போதே யோசிச்சேன்.It is a girl thing. எனக்கு அது ஆபாசமாக தெரியவில்லை. ஆனால் இவ்வளவு கதையையும் படித்த பிறகு உங்களுக்கு அது நினைவில் நிற்கிறது என்றால் அது ஆபாசம் என்றே நினைக்கிறேன். நீக்கிவிடுகிறேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி.

அடிக்கடி இந்த குடிசைக்கு வாங்க,..

jothi சொன்னது…

//நல்ல கதை. அது எழுத்தில் அழகாய் வந்துள்ளது.//

மிக்க நன்றி விக்னேஷ்வரி.

Beski சொன்னது…

நல்லாருக்கு ஜோதி.
---
படிக்கும்போது ஒரு பெண் எழுதிய கதை என்றே தோன்றியது.

jothi சொன்னது…

மிக்க நன்றி எவனோ ஒருவன் (one of my most favorite song),..

கருத்துரையிடுக