இது பிச்சை பாத்திரம் சுரேஷ் கண்ணனின் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் பதிவிற்கான எதிர்பதிவு. இதையே பின்னூட்டமாக போட்டால் அவர் அடிக்கவே வந்துவிடுவார் என்பதால் இந்த தனி பதிவு.ஒருவருக்கு நான் எழுதும் முதல் எதிர்பதிவு இதுவே. மற்றபடி எனக்கும் அவருக்கும் சண்டையில்லை அவரின் கருத்து எனக்கு முரண்பாடாக தென்பட்டதால் இந்த பதிவு.
இது போகிற போக்கில் அரசு ஊழியர்களின் மீது குப்பையை தூவிவிட்டு போகும் செயல். ஆனால் உண்மையிலேயே இது நல்ல பதிவு. காரணம் இது பெரும்பாலானோரின் மனங்களை பிரதிபலித்திருக்கிறது. ஆனால் உண்மை என்ன??
நண்பர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அரசு அலுவலகங்களுக்கு போனால் நம் வேலை உடனே முடிந்துவிட வேண்டும். காலையில் குடுத்தால் மாலை கிடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாளே கிடைத்துவிட வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் அவர்களுக்கு பாவம் இது மட்டுமே வேலை. ஆனால் தனியாரில் பணி புரியும் நாம் பேங்க் போக வேண்டுமென்றால் பாஸ்ட்ட சொல்லிட்டு கிளம்பிறலாம். ஆனால் நம்மை போலவே மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அரசு ஊழியர் இது போல் செல்ல முடியாது. காரணம் அவர் கையொப்பத்திற்காக நம் நண்பர் போல் காத்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதமானாலும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். காரணம் அவர்களுக்கு நேரம் ரொம்ப முக்கியம். (போய் தினமலர் பார்க்கணும்ல,..). ஏனா அவுங்க அரசு ஊழியர்களின் client. ஆனா நம்ம எப்படி? சொன்னா சொன்ன காலத்திற்கு நம் வேலைகளை முடித்து தருகிறோமா?? நான் பார்த்த பெரும்பாலான தனியார் அலுவலகங்களிலும் கண்டிப்பாக சம்பந்தமில்லாத ஒரு explorer file திறந்தும் திறக்காமலும் மூடியும் மூடாமலும் இருக்கும்,..எப்படியோ உங்களை நம்பிய நிறுவனத்தை நீங்களும்தானே ஏமாற்றுகிறீர்கள்?? இதற்கு பெயர் என்னவாம்?? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் 8 மணி உண்மையாக கம்பேனிக்காக உழைக்கிறீர்கள்?? கண்டிப்பாக அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவருக்கு 5 மணி நேரம் மட்டுமே முழுத்திரானியிடம் உழைக்க முடியும். அது நமக்கும் பொருந்தும் அரசு ஊழியருக்கும் பொருந்தும். துரதிர்ஷ்டமாக அந்த மூன்று மணி நேரத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த அரசு அலுவலர் நிலையில் உங்களை நிறுத்தி யோசித்து பாருங்கள். நீங்கள் எட்டுமணி நேரம் இப்படி அப்படி அசையாமல் வேலை செய்வீர்களா??
அடுத்ததாக சம்பளம். இன்றைக்கு சமநிலையில் படித்து தனியாரில் வேலை செய்பவருக்கும், அரசு அலுவலரையும் நான் ஒப்பிட போவதில்லை. பொறியாளர் முடித்து அரசு அலுவலகங்களில் என்ன சம்பளம், தனியாரில் என்ன சம்பளம் என உங்களுக்கே தெரியும். ஆழ்ந்தும்,கடினமாகவும், நிறையவும் படிக்க கூடிய தலைசிறந்த professional தொழிலான மருத்துவ தொழிலையும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள் மருத்துவ படிப்பை எடுக்கவும்,முடிக்கவும் 10 வருடம் தொடர்ந்து கடின உழைப்புடன் விடாமல் படித்து கொண்டே இருக்கவேண்டும். முடித்து வந்தவுடன் அரசில் வேலை கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அரசு அவர்களுக்கு வழங்கும் மாத CTC அதிகபட்சம் எவ்வளவு தெரியுமா? 25,000 ரூபாய். இது சென்னையில் சொந்த ஆட்டோகாரன் மாத வருமானத்தைவிட 5000 ஆவது குறைவு என்பதுதான் உண்மை. படிப்பிற்கு எங்கே மரியாதை?? ஏன் அவன் 10 வருடம் ராப்பகலாக கஷ்டப்பட வேண்டும்? அவன் எப்படி முழு மனதோடு வேலை செய்வான். ஆனால் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குற்றமே பார்த்து பழகிவிட்ட நம் கண்களுக்கு இது போன்ற நல்ல செய்திகள் எங்கே தெரிய போகிறது?? காலையில் 7 மணிக்கு பணிக்கு செல்லும் டாக்டர்கள் மதியம் 3 மணிக்கு சாப்பிட செல்வார்கள். இதை நீங்கள் இன்றும் சென்ரல் மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் ப்ருத்துவமனையிலும், ஸ்டான்லியிலும் பார்க்கலாம். வாரத்தில் ஒரு நாள் டியூட்டி உண்டு. அப்போது 24 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டி இருக்கும். மாதத்தில் இப்படி ஒரு நாள் டியூட்டி மாட்டும். இது போல நம்மில் எத்தனை பேருக்கு மாதத்தில் 24 மணி நேரம், லேட்டானாலும் பரவாயில்ல வேலையை முடித்து கொடுக்கணும்னு உட்கார்ந்து இருக்கோம்?? டாக்டருக்கு நாம் எப்படி கிளைண்டோ, அதே போல்தானே நம்ம கிளைண்டும் எதிர்பார்ப்பான்?? இதுதானே எதார்த்தம்.?
அரசு அலுவலகத்தையும் லஞ்சத்தையும் பிரிக்க முடியாது. அதனால் நாம் பேசியே ஆக வேண்டும். லஞ்சத்தை ஊக்குவிப்பது நாமே. உதாரணமாக ஒரு டெண்டரை எடுத்து கொள்ளுங்கள். ஒரு 5 பேர் போட்டி போடுகிறார்கள். அதில் 4 பேர் நம்மை போல் மிக கண்டிப்பானவர்கள். ஆனால் ஒருவர் மட்டும் புத்திசாலி. அவர் தனியாக காசு கொடுத்து டெண்டரை அள்ளுகிறார். அந்த 5வது நபர் யார்? நம்மில் போல் ஒருவர், a non government servent. தப்பு எங்கே ஆரம்பிக்கிறது? நம்மில் ஒருவர் ஆரம்பிக்கும் லஞ்சத்தால். தூண்டியது யார்? நம்மை போல ஒருவர்,.. பாதிக்கப்பட்டது யார்,?? நம்மை போல ஒருவர். இந்த நம்மைப்போல ஒருவர்தான் 4 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேர்கிறார். போட்டமுதலை அந்த நம்மை போல உள்ள அவர் எப்படி எடுப்பார்?? இங்குதான் ஆரம்பிக்கிறது,..
அரசு அலுவலர் என்பது RTO ஆபீஸிலும், போலீஸ் ஸ்டேஷனிலும், வருமான வரி துறை, வங்கியிலும் மட்டும் முடிவதில்லை. பன்னாட்டு தனியார் நிறுவனங்க்களுக்கு இணையாக அரசு நிறுவனங்களும் உள்ளன. உதாரணமாக நவரத்னா என வர்ணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்டுகின்றன. அங்கு கூட ஒளிவட்ட அரசு ஊழியன் தான் வேலை செய்கிறான். வெளி நாட்டில் கோடி கணக்கில் சம்பளம் கொட்டிதர நினைக்கையில் அண்ணாதுறை, அப்துல் கலாம் போன்றோர் முழுக்க முழுக்க அரசிற்காக வேலை பார்த்தார்கள். தன் சுய நலத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சிறப்பிற்காக வேலை பார்த்த ஊழியர்கள் என அண்ணாதுறை, அப்துல் கலாம், கிரண்பேடி என வரிசையாக நிறைய சொல்லலாம். அது போல் தனியார் துறை ஊழியர் ஒருவரை இந்த நாட்டில் சொல்லுங்கள்.
இன்றைக்கு எந்த தொழில் சுத்தமாக இருக்கிறது?
வீடு கட்டுவது தொழில். உங்கள் பிள்டர் உங்களை ஏமாற்றவில்லை? பிள்டர் நம்மில் ஒருவர்.
பிள்டர் சிமெண்ட் வாங்குகிறார். சிமெண்ட் கடைக்கார் சிமிண்டில் மணலைக் கலந்து பிள்டரை ஏமாற்றுகிறார். கடைகாரர் நம்மில் ஒருவர்.
விற்ற காசில் கடைக்காரர் லாரி வாங்குகிறார், லாரி விற்பவன் விலையை கூட்டி வைத்து கடைகாரரை ஏமாற்றுகிறார். லாரி விற்பவன் நம்மில் ஒருவன்.
லாரி விற்பவன் வருமான வரி கட்டுகிறான். வருமான வரியை குறைத்து காட்டி அரசை ஏமாற்றுகிறான்.
அரசு ஊழியன் வருமானவரியை குறைத்து காட்ட லாரி விற்பவனிடம் காசு வாங்குகிறான்.அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.
அரசு, தன் வேலைக்கு ஆள் எடுக்கிறது. 100 ரூபாய் கொடுக்க வேண்டிய வேலைக்கு 60 ரூபாய் கொடுத்து தன் ஊழியனை ஏமாற்றுகிறது. அரசில் இருப்பவன் நம்மில் ஒருவன்.
ஏமாற்றிய ஊழியன் முதலில் சொன்ன பிள்டரிடம் வீடு வாங்குகிறான். ஏமாறுகிறான்.
அரசு ஊழியன் நம்மை போல ஒருவன். பிள்டரும் நம்மை போல ஒருவன்.
எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நம்மில் ஒருவர். அரசு அலுவலர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் எல்லோருக்கும் தெரிகிறது.
ICICI வங்கியில் சத்தமில்லாமல் கவரில் காசைப்போட்டு அடுத்த நாள் அக்கவ்ண்டில் விழுந்தால் பரவாயில்லை என அமைதியாக செல்லும் நமக்கு வரிசையில் நின்று உடனே கணக்கில் பணம் விழும் வசதியை பெறும் அளவிற்கு கூட பொறுமை இல்லை.
இந்த பொறுமையிழந்தவன் யார்? நம்மில் ஒருவன்.
42 கருத்துகள்:
'' எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நம்மில் ஒருவர். அரசு அலுவலர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் எல்லோருக்கும் தெரிகிறது.''
நல்ல கருத்து ரசித்து படித்தேன்
கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com/
நல்லாத்தான் எழுதிருக்கீங்க.
ஆனா ஏத்துக்குற மாதிரி இல்ல, எல்லாம் பொதுவாவே இருக்கு. சுரேஷ் கண்ணன் சொன்ன மாதிரி ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?
---
புது அக்கவுண்ட் ஓபன் பண்ணனும்னு ஒரு கவர்மெண்ட் பேங்க்லயும், தனியார் பேங்க்லயும் போய் விசாரிங்க. வித்தியாசம் என்னனு இங்க வந்து சொல்லுங்க.
---
//எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள்//
ஓக்கேதான், எங்க அதிகம், எவ்வளவு சதவிதம்னு யோசிச்சீங்களா?
---
ஒரு தனியார் கம்பெனியில் என்னோட அனுபவம்:
http://www.yetho.com/2009/06/1.html
http://www.yetho.com/2009/06/2_08.html
---
இத விட பெருசா பல கவர்மெண்ட் ஆபீஸ்ல அனுபவிச்சிருக்கேன், அதெல்லாம் பதிவுகளா போட்டுக்கிட்டே இருக்கலாம். ஆபீஸ்ல வேல அதிகமா இருக்குறதால போட முடியல.
---
இப்பக் கூட ஆபீஸ்லதான் இருக்கேன். மாலை கிளம்பும்போது, இந்த வேலைய ஏன் முடிக்கலன்னு யாரும் என்னைக் கேட்கும் அளவுக்கு ஓப்பி அடிப்பது இல்லை.
---
எழுத்து நடை நல்லா இருக்கு, இந்த மாதிரி நல்லா நானும் எழுதனும்னு கடவுள வேண்டிக்கிறேன்.
//பொறுமை இல்லை//
அதுதாங்க மேட்டரு... பொறுமை!
அது நம்ம ஆளுங்ககிட்ட ரொம்ப
குறஞ்சிபோச்சு!!
I have not read suresh kannan's post on this. But in some aspect I agree with your views fully. There are quite a lot of Govt offices (govt staff) who performs well, customer friendly. I have seen many librarians, Bus depot time keepers, railway counter staff.
Same way In private companies, banks the discrimination will be there. If me and a Millionaire goes to ABN Amro bank, they will give 1st priority to the millionaire.
//நல்ல கருத்து ரசித்து படித்தேன்
கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com///
மிக்க நன்றி, கட்ட பொம்மன். ஏற்கனவே உங்கள் வலைப்பதிவிற்கு வந்து படித்து இருக்கிறேன். பின்னூட்டம் இட்டதாக நியாபகம் இல்லை. மீண்டும் வருகிறேன். காவல்துறையில் இருந்து கொண்டு பதிவு எழுதி வருவது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாஸிட்டிவாக எழுதி வாங்க,...
//புது அக்கவுண்ட் ஓபன் பண்ணனும்னு ஒரு கவர்மெண்ட் பேங்க்லயும், தனியார் பேங்க்லயும் போய் விசாரிங்க. வித்தியாசம் என்னனு இங்க வந்து சொல்லுங்க.//
ஓ இருக்கே,..
இது கடந்த ஜூன் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட தலை நகர் என்றாலும் அங்கு ICICI BANK தவிர எந்த பன்னாட்டு தனியார் நிறுவனங்களும் இல்லை. SBI ஆரம்பிக்க போனேன், அவர் ஒரு பார்ம் கொடுத்தார். முழுக்க fill பண்ணி கொடுத்தேன்.எவ்வளவு குறைந்தபட்சம் கணக்கில் maintain பண்ணனும்னு கேட்டேன்."செக் புக் வேணுமா?" என்றார், "எதற்கு" என்றேன், "இல்ல வேணாம்னா 500 ரூபாய், வேணும்னா 1000 ரூபாய்" என்றார். கட்டிவிட்டேன். காத்திருக்க சொன்னார். 1 மணி நேரம் ஆச்சு, பாஸ் புக் வந்தபாடில்லை. எனக்கு கோபம்,நேராக மேனேஜரை பார்க்க போனேன். உள்ளே போய் "இப்படி பண்ணினா எப்படி? நான் ஆபீஸ்ல இருந்து permission போட்டுவிட்டு வந்துள்ளேன் (சும்மாவாச்சும் ஒரு சவுண்ட் வேணாமா, அன்னைக்கு சனிக்கிழமைதான்), கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கன்னு" கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் "சார் புரியுது, அதோ அந்த காலில்லாம உட்கார்ந்து இருக்குல அந்த பொண்ணு education loan apply இருக்கு.1200 க்கு 1107 வாங்கியிருக்கு. நாளை காலைலபணம் சென்னைல கட்டணும். ரொம்ப நேரமா அந்த பொண்ணு சாய்ஞ்சு நின்னுக்கிட்டே இருந்துச்சு, உட்கார்ந்த யாரும் இடம் தர்ரமாதிரி தெரியல,. உட்கார்ந்து இருக்கிறவரும் என் வாடிக்கையாளர் (#). அதானாலதான் அந்த பொண்ணு லோனை ப்ராசஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் இருங்க, தர்ரேன்" பத்து நிமிடத்தில் பாஸ் புக் வந்தது. வாங்கிவந்துவிட்டேன். மனம்தான் கொஞ்சம் கனத்திருந்தது.
நான் புது அக்கவுண்ட் HDFC பாங்க்ல ஓப்பன் பண்ணினேன். அந்த கதையை சொல்லுகிறேன். அது சென்னையின் முக்கிய வேளச்சேரி கிளை. அங்கு ஆரம்பிக்கலாம் என போனேன். போனவுடன் அந்த அழகான சின்ன பெண்ணிடம் கேட்டேன். கொண்டங்க சார், நானே fill பண்றேன்னு, அப்ளிகேசன் fill பண்ணி கொடுத்தாள். எவ்வளவு குறைந்தபட்சம் கணக்கில் maintain பண்ணனும்னு கேட்டேன். 5000 ரூபாய் என்றாள். ஏம்மா மடிப்பாக்கத்துல 2500 ரூபாய்தான?? இங்க மட்டும் ஏன் இவ்வளவு வாங்குறீங்க?? கேட்டே விட்டேன். "இல்ல சார் அது வந்து ரூரல்ல வருது, அதுனாலதான்". (ரெண்டுக்கும் 3 கி.மீ தான் வித்தியாசம்) சரிம்மா,.. 5000 கட்டினேன். அவர்கள் கொடுத்த ஸ்லிப்புடன் அக்கவுண்ட் ஆரம்பித்த திருப்தியுடன் திரும்பினேன். ஒரு வாரம் கழித்து என் மனைவி பாங்க்கில் இருந்து டாக்குமெண்ட் வந்ததாக சொன்னாள். நிம்மதியாக இருந்தது. அப்பாடா, ஆரம்பித்தாச்சு. பார்த்தேன். எல்லாம் இருந்தது. கூடவே monthly statementம் இருந்தது. இதுதான் ப்ரைவேட். பார் சரியாக monthly statementம் கொடுத்திருக்காங்க என் மனைவியிடம் கூறிக் கொண்டே. திறந்து பார்த்தேன். ஷாக். முதலில் service charges 50 ரூபாய் பிடித்து இருந்தார்கள். பின்னாலேயே minimum maintenance charge 725 ரூபாய் பிடித்து இருந்தார்கள். எனக்கு கடுங்கோபம், நேரே காலை பாங்க் போனேன். நேரே அந்த பெண்ணிடம் சென்றேன். அதே சிரிப்பு. "சார் புது அக்கவுண்ட் ஆரம்பிக்கணுமா சார்",..(அடி செருப்பால,.. மனசுக்குள்),.. ஏம்மா நீதான் அன்னைக்கு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக் கொடுத்த,.. இப்ப புது அக்கவுண்டானு கேக்குற,.. ஏம்மா, இது பார் என் அக்கவுண்ட்ல 925 ரூபாய் பிடிச்சிருக்காங்க, ஏன் வாங்கி பார்த்தாள். சார் service charges 50 ரூபாய் பிடிச்சிருக்காங்க, மாச மினிமம் பேலன்ஸ் குறைங்ஞ்சிட்டதால 725 ரூபாய் கம்பியூட்டர் பிடிச்சிருக்கு,.. நீங்க customer careக்கு போன் பண்ணுங்க சார். நான் கேட்டேன் "அப்ப நீ எதுக்கு இருக்க??", நான் public relationship officer சொல்லிக்கொண்டே "வாங்க சார்,.. விஸா காப்பியெல்லாம் கொண்டு வ்ந்துட்டிங்களா??",.. பக்கத்தில் இருந்த வெள்ளைத்தோல் நண்பரை நெருங்கிவிட்டிருந்தாள் உபசரிப்பில். நான் விலக்கி கொண்டுவிட்டு இருந்தேன்.
வெளியில் வந்தவுடன் மொபைல் அடித்தது. "சார் நாங்க HDFC பாங்குல இருந்து போன் பண்றோம். உங்களோட salary slip வச்சு உங்கள privilage customerஆ செலக்ட் பண்ணி இருக்கோம். அதுக்கு உங்களுக்கு platinum card தர்ரோம், வாங்கிகிறிங்களா சார்". இப்ப நான் ஆரம்பித்தேன் "! $ ^ &) #$%@*^$!*! $ ^ &) #$%@*^$!*! $ ^ &) #$%@*^$!*". நானும் மனுசந்தானே எல்லாரையும் போல,.
////எல்லா துறையிலும் தன் தொழிலில் சுத்தமானவர்கள் இருக்கிறார்கள். அசுத்தமானவர்களும் இருக்கிறார்கள்//
ஓக்கேதான், எங்க அதிகம், எவ்வளவு சதவிதம்னு யோசிச்சீங்களா?//
என்ன கேள்வி இது??. கண்டிப்பாக தனியாரில்தான்.
ஏமாறாமல் வீடு வாங்கி இருக்கிங்களா??
ஏமாறாமல் வீட்டு லோன் கட்டி இருக்கிங்களா??
7 ரூபாயில் அரசு அல்ட் ரா பஸ் இருக்க, மீட்டர் பார்த்து ஆட்டோ தொகையை கொடுத்து இருக்கிங்களா?? 4 கிமீக்கு 200 ரூபாய் கொடுத்து ஏமாந்து இருக்கிங்களா??
மூடிய பெப்சியில் கரப்பான் பூச்சி பார்த்து இருக்கிங்களா??
கோ ஆப்டெக்ஸில் நல்ல பட்டு புடவை இருக்கையில், ஸ்ரேயா வரும் கடையில் பட்டுபுடவை வாங்கி சாயம் ட்ரை வாஸில் வெளுத்திருக்கிறதா??
freshஆக ஆவின் பால் இருக்கையில் நாலரை சதவீத பால் வாங்கி உங்களுக்கு புடுங்கியிருக்கிறதா??
BSNLல் unlimited 650க்கு கிடைக்க உங்களுக்கு மாதவன் வரும் கம்பேனியில் brandband எடுத்து 6500 கட்டி இருக்கீர்களா??
கட்டமாட்டேன் என கஸ்டமர் கேரில் போன் பண்ணியவுடன் உங்கள் வீட்டிற்கு வாட்டசாட்டமான நபர்கள் மிரட்டி 6500 பணத்தை பறித்து இருக்கார்களா. (இதனைதான் விரைவான் சேவை என விளம்பரபடுத்துகிறார்கள்,..)
இவர்களெல்லாம் யார் நண்பரே?? அரசு ஊழியரா?? நம்மை போல ஒருவர்
//ஒரு தனியார் கம்பெனியில் என்னோட அனுபவம்:
http://www.yetho.com/2009/06/1.html
http://www.yetho.com/2009/06/2_08.html//
வந்து படிக்கிறேன், கண்டிப்பாக
//இத விட பெருசா பல கவர்மெண்ட் ஆபீஸ்ல அனுபவிச்சிருக்கேன், அதெல்லாம் பதிவுகளா போட்டுக்கிட்டே இருக்கலாம். ஆபீஸ்ல வேல அதிகமா இருக்குறதால போட முடியல.//
வேலை கம்மியா இருந்தாலும் ஆபீஸ்ல வேணாம். வீட்ல freeஆ இருக்கும் போது போடுங்கள், இல்லைனா ஆபிஸ் லஞ் டைம்ல போடுங்க,.. வந்து படிக்கிறேன்,.. இப்ப உங்க பாலோயர் ஆய்ட்டேன்,.
//இப்பக் கூட ஆபீஸ்லதான் இருக்கேன். மாலை கிளம்பும்போது, இந்த வேலைய ஏன் முடிக்கலன்னு யாரும் என்னைக் கேட்கும் அளவுக்கு ஓப்பி அடிப்பது இல்லை.//
அருமை. என்னைப்போலவே ஒருவர், அவர் எவரோ ஒருவர் (மரியாதை வேணாமா??) .இன்றைக்கு நான் வீட்டிற்கு வந்துதான் இது (பதிவு) பற்றியே சிந்திக்கிறேன்.
//எழுத்து நடை நல்லா இருக்கு, இந்த மாதிரி நல்லா நானும் எழுதனும்னு கடவுள வேண்டிக்கிறேன்.//
மிக்க நன்றி. நான் எழுதியது உங்களின் மாற்று கருத்து என்பதால் என் பின்னூட்டங்கள் மீது கோபம் வருவது இயற்கை. என் எழுத்துகள் எங்கேயும் யாரையும் தாக்குவதற்காக எழுதியதல்ல,..நான் சொல்ல வந்தது எல்லோரும் நம்மை போலவே. அவ்வளவுதான்.
//நல்லாத்தான் எழுதிருக்கீங்க.
ஆனா ஏத்துக்குற மாதிரி இல்ல, எல்லாம் பொதுவாவே இருக்கு. சுரேஷ் கண்ணன் சொன்ன மாதிரி ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?//
மிக்க நன்றி. மேலே சொன்ன பாங்க் உதாரணம் ஒன்று போதும்னு நினைக்கிறேன். பத்தாது என்றால் jet airwaysல flight cancel ஆகி ஒரு நாள் காத்திருந்த மேட்டரையும், indian airlinesல மூணே மூணு பயணிகளுடன் வந்த கதையை சொல்லுகிறேன்.
//அதுதாங்க மேட்டரு... பொறுமை!
அது நம்ம ஆளுங்ககிட்ட ரொம்ப
குறஞ்சிபோச்சு!!//
ரொம்ப சரியா சொன்னீங்க கலை,.. நாம் கொஞ்சம் சோம்பேரித் தனத்தை பயன்படுத்தி தானே நல்லா சம்பாரிக்கிறானுங்க,..
நானும் என் நண்பனும் ஒரே அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கினோம் நான் ஆக்ஸிஸ் பேங்கில் எடுத்தேன் நண்பர் அலைந்து திரிந்து sbiல் லோன் எடுத்தார். மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. நான் இன்னும் 18 வருடம் கட்டணும், நண்பர் 15 வருடம் கட்டினால் போதும். இத்தனைக்கும் இருவருக்கும் ஒரே வட்டியில்தான் (11%) சேர்ந்தோம். ஒரே EMI தான். என் சோம்பேரிதனத்திற்கு நான் தந்த விலை இது.
//I have not read suresh kannan's post on this. But in some aspect I agree with your views fully. There are quite a lot of Govt offices (govt staff) who performs well, customer friendly. I have seen many librarians, Bus depot time keepers, railway counter staff.
Same way In private companies, banks the discrimination will be there. If me and a Millionaire goes to ABN Amro bank, they will give 1st priority to the millionaire.//
மிக்க நன்றி குப்பன் யாகூ. அருமையாக சொன்னீர்கள். என்னை மாதிரியே அனுபவம் போல இருக்கு.
என்னமோ போங்க.., இதையெல்லாம் படிக்கும்போது ஆறுதலா இருக்குங்க..,
மிக்க நன்றி சுரேஷ். ஆமாம்,.. நீங்க டாக்டர்ல,.. நீங்க ஏன் எதுமே சொல்லல?? உங்கள் வாதங்கள்தான் மிக முக்கியம். பசியுடன் 2 மணிக்கு எத்தனை ஆப்ரேஷன் தியட்டர்ல நின்னு இருப்பிங்க,.. எத்தனை ஏழைகள் உங்களை கும்பிட்டு இருப்பாங்க??
உங்க அனுபவம் இப்படியா?
இதோ எனது...
முதன் முதலில் அக்கவுண்ட் ஓபன் பண்ணது ஐசிஐசிஐல், என்னுடைய ஊரில். சென்றேன், அவர்களே எல்லாம் ஃபில் அப் பண்ணி குடுத்தார்கள். ஆயிரம் ரூபாய் பணம் கட்டினேன். ஒரு வாரத்தில் கார்டு, நெட் பேங்கிங் பாஸ்வேர்டு எல்லாம் கிடைத்து விட்டது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. போன மாதம் கூட வேறு ஏடிஎம்ல் பணம் எடுக்கப்போய், பணம் வராமல் கணக்கில் பணம் குறைந்துவிட்டது, கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன், ஒரு மாதத்தில் சொன்னபடி பணம் திரும்பி வந்தது.
சென்னை வந்த பிறகு இங்கு ஒரு அக்கவுண்டு ஓபன் பண்ண எண்ணினேன். அரசு வங்கியில்தான் மினிமம் பேலன்ஸ் கம்மி. SBI ல் பண்ணலாமென நெட்டில் போன் நம்பர் பார்த்து போன் பண்ணீனேன், அது டெய்லர்ஸ் ரோடு கிளை. எடுத்தவர் உங்கள் வீட்டு அருகில் புரசைவாக்கம் கிளை உள்ளது, அங்கே போங்கள் என்றார். புரசைவாக்கம் போனேன். இப்போது ப்க்கத்தில் புது கிளை ஒன்று உள்ளது, அங்கே போய் பண்ணுங்கள் என்றார்கள். பரவாயில்லை இங்கேயே ஓபன் பண்ணிக்கிறேன் என்றேன். இங்கே இப்போ முடியாது, அங்கே போங்க என்று கெல்லிஸ் பக்கத்தில் முகவரி குடுத்தார்கள். அந்த இடத்தைத் தேடிப் பிடிப்பதற்குள் போது போதும் என்றாகிவிட்டது. அது ஒன்வேயில் வேறு இருந்தது. போய் சேர்ந்தபோது மணி 12. அன்று சனிக்கிழமை ஆதலால் (நமக்கு இந்த சனிக்கிழமைதான் சொந்த வேலைகளைப் பார்க்க முடியும். ஆனால் அன்றுதான் எல்லா அலுவலகமும் அரை நாள் இயங்கும். என்ன கொடுமை சார் இது) நேரம் முடிந்தது, திங்கள் வாருங்கள் என்றார்கள்.
திங்கள் எங்கே போக... அடுத்த 2ஆம் சனிக்கிழமை (எனக்கு மாதம் ஒரு சனிதான் விடுமுறை) எல்லா டாக்குமெண்டுகளுடன் போனேன், அப்ளிகேசன் பார்ம் குடுத்தார்கள், அதை நிரப்புவதற்குக் கூட ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக நிரப்பி மானேஜரிடம் சென்றேன். அட்ரஸ் புரூப் தனியார் லேண்ட்லைன் பில் போதாது, பிஎஸென்னெல் தான் ஏற்றுக்கொள்ளப்படும், அப்படி இல்லையென்றால் வேறு ஏதாவது அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் குடுங்கள் என்றார்கள் (இத போன மாசம் கேட்டப்பவே சொல்லிருக்கலாமே!). மறுபடி வீட்டுக்கு வந்து நெட்டில் தகவல் எடுத்து, பிரிண்ட் எடுத்து சென்றேன். 11.30 தான், நேரம் ஆகி விட்டது திங்கள் வாருங்கள் என்றார் மேனேஜர். அத்தோடு ஆசை விட்டது. அன்று நிரப்பிய ஃபார்ம் சரியா என்று கூட இன்று வரை தெரியாது.
பதிவு போடுறத விட,பின்னூட்டத்துக்கு பதில் போடுறதுக்குத்தன் உங்களுக்கு நெறையா நேரம் பிடிக்கும் போலருக்கே?!
உண்மையிலேயே தங்களின் இந்தப் பாங்கு என்னை வியக்க வைக்கிறது.
//நான் எழுதியது உங்களின் மாற்று கருத்து என்பதால் என் பின்னூட்டங்கள் மீது கோபம் வருவது இயற்கை.//
ரைட்டு...
//என் எழுத்துகள் எங்கேயும் யாரையும் தாக்குவதற்காக எழுதியதல்ல,..நான் சொல்ல வந்தது எல்லோரும் நம்மை போலவே. அவ்வளவுதான்.//
அவ்வளவுதான்.
//உங்க அனுபவம் இப்படிய?///
உங்கள் அனுபவம் என்னை வேதனை பட வைக்கிறது. என்னைப்போலவே எவரோ ஒருவர். எனக்கும் ICICI அக்கவுண்ட் உண்டு. அதென்னவோ எனக்கென்னவோ தனியார் சேவை நிறுவனங்கள் ஒத்து வருவது இல்லை. காரியம் ஆகும் வரை காலை பிடித்துவிட்டு காரியம் முடிந்ததும் கழுத்தில் கைவைப்பது அவர்கள் சுபாவம். இது என் அனுபவம்.
//பதிவு போடுறத விட,பின்னூட்டத்துக்கு பதில் போடுறதுக்குத்தன் உங்களுக்கு நெறையா நேரம் பிடிக்கும் போலருக்கே?!
உண்மையிலேயே தங்களின் இந்தப் பாங்கு என்னை வியக்க வைக்கிறது.//
பதிவுகள் என் மன திருப்திக்காக எழுதுவது. என் பதிவையும் படித்து அதற்கு அவர்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவழிக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் மரியாதை செய்வதுதான் முறை. அதைவிடுத்துவிட்டு நன்றி ஜோதி, நன்றி யாரோ ஒருவர், நன்றி கலை என ஒரே பின்னூட்டத்தில் பதிலளிப்பது என்னை வெறுப்படையும் செய்தி. இதற்காகவே பிரபல பதிவர்களின் பக்கங்களுக்கு செல்வதை குறைத்துவிட்டேன். பிரபல பதிவர்களும் பதிவுகளின் எண்ணிக்கையில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். மாதவராஜ் போன்றோரை தவிர,..
//அவ்வளவுதான்.//
என் பக்கங்களுக்கு வந்து உங்கள் கருத்தை மிக விளக்கமாக தெரிவித்தர்க்கு நன்றி. எனக்கு வந்த பின்னூட்டங்களில் ஆழ்ந்து விளக்கமளித்தது நீங்கள்தான். அதற்கு என் மனமான நன்றி.
//காரியம் ஆகும் வரை காலை பிடித்துவிட்டு காரியம் முடிந்ததும் கழுத்தில் கைவைப்பது அவர்கள் சுபாவம்//
உண்மைதான்.
//எனக்காக செலவழிக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் மரியாதை செய்வதுதான் முறை//
நல்லது.
//மாதவராஜ் போன்றோரை தவிர,.. //
அவரது தள முகவரி தரவும்.
நன்றி.
அன்புள்ள ஜோதி கண்ணன்
ஆரேர்க்கியான மொழியில் எதிர்பதிவு எழுதியமைக்கு நன்றி.
பொதுப்புத்திக்கு அரசு ஊழியர்கள மீது இருக்கும் வெறுப்பான மனநிலையை ஊதிப்பெருக்கும் முயற்சியல்ல என் பதிவு. அரசுத்துறையிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவீதம் மிகக்குறைவானதும் விதிவிலக்கானதுமாகும். நான் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை உடனே பின்புறமாக வாசித்து தனியார் துறைக்கு ஆதரவான பதிவாக பார்க்கக்கூடாது. என் பதிவில் நான் அப்படி தனியார் துறைக்கு ஆதரவாக எதையுமே எழுதிவிடவில்லை. தனியார் துறையிலும் இதே மாதிரியான சேவைக்குறைபாடுகளும் அலட்சியப் போக்குகளும் உள்ளன. ஆனால் இவற்றின் சதவீதம் குறைவானது. அரசோ தனியாரோ பணியாற்றுவது அதே இரத்தமும் சதையுமான மனிதர்கள்தானே?
மேலும் தனியார் துறையில் உள்ள சேவைக்குறைபாடுகள் பற்றி அவர்களிடமே விவாதிக்க முடியும். கேள்விகள் கேட்க முடியும். சேவையில் திருப்தியில்லையெனில் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றிக் கொள்ள இயலும்.குறைந்த பட்சம் உங்களின் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்து உங்களின் மனஉளைச்சலையாவது சற்று மட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அரசு அலுவலகங்களில் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. உங்களின் வேலையை வேண்டுமென்றே இழுத்தடித்து பழிவாங்கி உங்களைப் பணியவைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். வழக்கு, நீதிமன்றம் என்று செல்பவர்கள் ஒருசிலர்தான். அந்த தாமதமான நீதி உங்களுடைய பேரன்களுக்குத்தான் கிடைக்கும்.
தனியார்துறையின் பெருக்கம்கூட உலகமயமாக்கத்திற்கு பின்பான மாற்றம்தான். முன்பெல்லாம் ஒரு தொலைபேசி இணைப்புக்குக்கூட வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியதிருந்தது. பலரை 'கவனிக்க' வேண்டியிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசுத்துறையின் அவலமான சேவையை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இன்றும் கூட சில சேவைகளுக்கு அரசுத்துறையைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. பொதுமக்களின் அசெளகரியங்களைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. பணியில் இருக்கும் பாதுகாப்பு ஒருபுறம் என்றால் அரசு இயந்திரம் இயங்கும் மெத்தனமானப் போக்கும் ஊழல் அழுத்தமாக படிந்துள்ள சூழலும் உற்சாகமானவர்களையும் நேர்மையானவர்களையும் கூட முடக்கிப் போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இந்த அபத்தமான சூழ்நிலையிலிருந்து போராடி தன்னை நிருபீத்துக் கொள்ளும் தன்மை சிலருக்கே வாய்க்கிறது.
அலுவலகத்தின் இடையே தனிப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது ஒரு பொதுவான இந்திய பணியாளர்களுக்கே உரிய மனநிலை. அலுவலக நேரத்திலிருந்து திருடி தமக்கு பயன்படுத்திக் கொள்வதில் ரகசிய மகிழ்ச்சி கிடைக்கிறது. இது அரசு மற்றும் தனியார் இருவருக்கும் பொதுவானதுதான்.
ஆனால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் இதை மறைமுகமாகவும் குற்றஉணர்வோடும்தான் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர் எதிரே காத்திருக்கும் போது சக பணியாளரிடம் அரட்டையடித்துக் கொண்டிருப்பதோ அவரை அலட்சியமாக நடத்தி அவமதிப்பதோ தனியார் துறைகளில் அபூர்வம்தான். மாறாக அரசு அலுவலகங்களில் இது மிக சகஜமான ஒன்று. அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் உடனேயே தங்கள் வேலை முடிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இதுவும் நடைமுறைக்கு முரணனான ஒன்று. அரசு அலுவலகங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதற்கு ஏற்றதான மனநிலையோடும் 'கவனிப்போடும்' செல்கிறார்கள்.
மறுபடியும் சொல்கிறேன். எல்லா அரசுப் பணியாளர்களையும் குற்றம் சொல்வது என் நோக்கமல்ல. அதிலும் போதுமான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் 'சிலர்' இருக்கிறார்கள். ஆனால் தங்கள் அடிப்படை கடமையை ஒழுங்காக நிறைவேற்றும் ஒருவரைக்கூட 'ஆகா தெய்வமே' என்று நாம் வியந்து பார்க்கும் சூழ்நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சுஜாதாவின் அந்நியன் பட வசனத்தின் படி 'கடமையை செய்வதற்கு' கூட லஞ்சம் கேட்கு்ம சூழ்நிலையில்தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.
அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
உங்களின் பார்வைகளை எண்ணங்களை, அற்புதமாக நிலை நிறுத்தியதற்கு பாராட்டுகள். மேலே சொன்ன உங்களின் பொதுவான கருத்துகளுடன் நான் உடன்பட்டுதான் போகிறேன். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து பொறியியல் மேற்படிப்பு வரை அரசு நிறுவங்களில்தான் படித்தேன். நான் பட்ட வேதனைகள் எனக்கு நன்றாகவே தெரியும். 100 கோடி மக்களிற்கு சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் நீங்களாக சொல்லுகிறீர்கள். நான் அவர்கள் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என ஒரு சாதாரண மனிதனாக சொல்லுகிறேன். அதனால் அவர்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை.
முதலில் இருந்த அரசாங்கங்களின் போக்கிற்கும், இப்போது உள்ள அரசாங்கங்களின் போக்கிற்கும் மிக மிக பெரிய வேறுபாடுகள் வந்துவிட்டன. முதலில் திட்டங்கள் தீட்டி சேவையை தந்தார்கள். அதிலும் சில மூதேவிகள் பணம் சம்பாதித்தார்கள். ஆனால் இப்போது எந்த சேவையை வழங்கினால் பணம் சம்பாதிக்கலாம் என திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அதை சார்ந்தவர்களும் சம்பாதிக்கிறார்கள். அரசாங்கமே அவர்களுக்கு துணை நிற்கும் போது திமிர் ஏறித்தான் போகிறது. அந்த திமிரை அடக்க வேண்டியன் அரசை நடத்துவன். இவன் உதவி அவனுக்கு தேவை என்பதால் கண்டும் காணாமல் போகிறான். திமிர் அதிகரித்துக் கொண்டே போகிறது.
//ஆனால் இவர்களின் சதவீதம் மிகக்குறைவானதும் விதிவிலக்கானதுமாகும். நான் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.//
கண்டிப்பாக ஒப்புக்கொள்ளவே மாட்டேன். என் அனுபவத்தில் கண்டிப்பான அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழிலாளிகள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களின் அனுபவம் சென்னையுடன் மட்டும் முடிந்துவிடுகிறது என கருதுகிறேன். சென்னையை தாண்டி வாங்க. அதிலும் அரசு பணிகள் நீங்கள் சேவையை மட்டும் சொல்லுகிறீர்கள். அதை தாண்டி நிறைய துறைகள் உள்ளன. நான் முதலில் சொன்னது போல் 100 கோடி மக்களுக்கு சேவை என்பது சாதாரணமான விஷயம் இல்லை.
இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு மதிப்பு இல்லை. ஆனால் ஒரு 25 பைசாவிற்கு போஸ்ட் கார்டு வாங்கி 800 கி.மீ தொலைவில் உள்ள நண்பருக்கு அனுப்புங்கள். அது இன்றைக்கும் பத்திரமாக போகும். அதுதான் சேவைதுறை. எல்லோருக்கும் சமமான சேவை வழங்குவது. நீங்கள் ஸ்பீட் போஸ்ட்டில் உள்ள புகார்களை சொல்லுகிறீர்கள். நான் மதிப்பே இல்லாத 25 கார்டுக்கும் வழங்கவேண்டிய அவர்களின் சேவைகளின் கடினங்களை சொல்லுகிறேன். அவ்வளவுதான்,
//என் அனுபவத்தில் கண்டிப்பான அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழிலாளிகள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களின் அனுபவம் சென்னையுடன் மட்டும் முடிந்துவிடுகிறது என கருதுகிறேன். சென்னையை தாண்டி வாங்க//
இதுவும் யோசிக்கப்படவேண்டிய விசயம்தான். நான் கண்ட வரை சென்னையில் எல்லா விசயத்திலுமே மக்கள் மனசு ரொம்ப கேவலமாத்தான் இருக்கு(80% என்று சொல்லாலாம்). ரோட்டில் போகும்போது வழி கேட்டுச் செல்வது, அட்டோக்காரர்கள் அடாவடி, கடைக்காரர்களின் அலட்சியம், வீட்டுக்காரர்கள் அடிக்கும் கொள்ளைகள்... இப்படி பல அனுபவங்கள் எனக்கு உண்டு.
நம்ம ஊர் பக்கம் இது அப்படியே தலைகீழா இருக்கும் (80% நல்லா வேலை செய்பவரா இருப்பாங்க).
---
நம்ம சுரேஷ் கண்ணன் சென்னைதான் என நினைக்கிறேன். அவர் பார்த்ததைத்தான சொல்ல முடியும்? அவர் சொன்ன கருத்துக்கள் 100/100 சென்னையை மையமாக வைத்தே எழுதப்பட்டதென்பது என் நினைப்பு.
---
நான் சென்னை வந்து 3 வருடங்கள் ஆகிறது, இதுவரை சென்னைவாசி ஒருவர் கூட எனக்கு நண்பர் ஆனது கிடையாது. அந்த அளவுக்கு சென்னை மக்களின் மனப்பாங்கு என்னை, அனைவரையும் வெறுக்கவைத்துவிட்டது. பதிவுலகம் பார்த்த பிறகுதான், நம்மள மாதிரியும் இருக்காங்கன்னு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
---
//இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு மதிப்பு இல்லை. ஆனால் ஒரு 25 பைசாவிற்கு போஸ்ட் கார்டு வாங்கி 800 கி.மீ தொலைவில் உள்ள நண்பருக்கு அனுப்புங்கள். அது இன்றைக்கும் பத்திரமாக போகும். அதுதான் சேவைதுறை.//
இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதை சேவைத் துறை என்று கூற முடியாது.
அதே போஸ்ட்கார்டு போய்ச்சேராமல், அதைப் பற்றி புகார் கூறும்போது, உங்களைக் கேவலமாகப் பார்த்து, ஏதும் கடிந்துகொள்ளாமல், தக்க நடவடிக்கை எடுத்தால், சேவைத் துறை என ஒப்புக்கொள்ளலாம்.
சேவைத்துறை தனியார்மயமானால் பரவாயில்லை என சொல்லுகிறீர்கள்.
நல்ல நோக்கம்தான். ஆனால் பெரும்பாலான பன்னாட்டு வங்கிகள், கூரியர், ஆம்னி பேருந்துகள் மாநகரங்களை, பெரு நகரங்களை தாண்டி வருவதே இல்லையே. சிறு நகரில் உள்ளவர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் வாயும் வயறும் உள்ளதே, என்ன செய்வது? அவர்களுக்கும் சேவை வழங்கவேண்டி இருக்கிறதே,.. என்ன செய்வது, வங்கிகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ 5000,25000 என 90% சாதாரண மனிதர்களின் வருகையை அடைத்து 10% பணக்கார கூட்டத்திற்கு மட்டும் சேவையை அள்ளி வழங்குவதில் என்ன நியாயம், அதில் என்னதான் கஷ்டம்?? அந்த சேவையில் என்னதான் குறைச்சல் வரக்கூடும்?
//அலுவலகத்தின் இடையே தனிப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது ஒரு பொதுவான இந்திய பணியாளர்களுக்கே உரிய மனநிலை. அலுவலக நேரத்திலிருந்து திருடி தமக்கு பயன்படுத்திக் கொள்வதில் ரகசிய மகிழ்ச்சி கிடைக்கிறது. இது அரசு மற்றும் தனியார் இருவருக்கும் பொதுவானதுதான்.//
நம்மில் ஒருவர்
//அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் உடனேயே தங்கள் வேலை முடிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இதுவும் நடைமுறைக்கு முரணனான ஒன்று //
வேலை விஷயமாக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நாம் வேலை உடனே முடியவேண்டும் என்றுதானே நினைப்போம். இதில் யாருக்கும் முரண்பாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
//அரசு அலுவலகங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அதற்கு ஏற்றதான மனநிலையோடும் 'கவனிப்போடும்' செல்கிறார்கள்.//
//அந்நியன் பட வசனத்தின் படி 'கடமையை செய்வதற்கு' கூட லஞ்சம் கேட்கு்ம சூழ்நிலையில்தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.//
நான் முன்பே சொன்னது போல் லஞ்சம் துரதிர்ஷடவசமானது. அது நம்மில் ஒருவர்தான் ஆரம்பித்து வைக்கிறார். ருசி கண்ட காகங்களுக்கு பிறகு தானியங்கள் பிடிக்கவில்லை. கோழிகறிதான் பிடிக்கிறது. ஆனால் கோழிகறி குடுத்தாலும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை தானியங்கள்தான் வேண்டும் என இருக்கும் பறவைகள் நிறைய இருக்கின்றன. அது நம் கண்களுக்கு தெரிவதில்லை. ரோட்டில் போகும்போது காகங்கள் மட்டுமே கண்ணில் தெரியும். அது யாரோ தூக்கி போடும் சிக்கன் துண்டிற்காக ஒரே இடத்தில் அலைந்து கொண்டே இருக்கும். அது தின்னும் போது கூட்டணிக்கு ஆளும் சேர்க்கும். எண்ணிக்கையில் அதிகம் உள்ள கிளிகளும், மைனாக்களும், குருவிகளும்,புறாக்களும் நம் கண்ணில் தெரியாதது நம் துரதிர்ஷ்டம். கழுகுகளும், காகங்களும் மட்டுமே நம் கண்ணில் தெரிகிறது. பறவைகள் அனைத்தும் மாமிச வகை என சொல்ல வைக்கிறது.
மிக்க நன்றி சுரேஷ் கண்ணன். உங்களின் பார்வைகள் பொதுவான மக்களின் பார்வை என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பது என் கருத்து. தண்ணியே இல்லாமல் வறண்டு நிற்கும் போதுதான், நமக்கு கடல் தண்ணினாலும் பரவாயில்லை என குடிக்க கிடைத்தால் போதும் என நினைப்போம். அதுவரை கிணற்று தண்ணீர்க்கு பாட்டில் மினரல் வாட்டர் நல்லது என சொல்லி கொண்டுதான் இருப்போம். கிணற்று தண்ணீர் செடிக்கும் உதவும், நமக்கும் உதவும்.
பிரபல பதிவர் என் பதிவிற்கு இவ்வளவு பெரிய பின்னூட்டம் இடுகிறார் என்றால் அது என் எழுத்துகளுக்கு மிக பெரிய கௌரவம். பின்னூட்டம் அளித்து உற்சாகபடுத்தியதற்கு நன்றி,. நம் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை இருக்கிறது போல,..
//சென்னையில் எல்லா விசயத்திலுமே மக்கள் மனசு ரொம்ப கேவலமாத்தான் இருக்கு(80% என்று சொல்லாலாம்). ரோட்டில் போகும்போது வழி கேட்டுச் செல்வது, அட்டோக்காரர்கள் அடாவடி, கடைக்காரர்களின் அலட்சியம், வீட்டுக்காரர்கள் அடிக்கும் கொள்ளைகள்... இப்படி பல அனுபவங்கள் எனக்கு உண்டு.//
மிக்க நன்றி எவனோ ஒருவன். நம்மை போலவே பலர். "work from home" வந்துவிட்டால் நிம்மதியாக ஊர் பக்கம் சந்தோசமாக உட்கார்ந்துவிடுவேன்,.. போடா நீங்களாச்சு, உங்க சென்னையாச்சுன்னு பெரிய கும்பிடு போட்டுறலாம். (ஆனா சைட் அடிக்க ம்ட்டும் இங்கதான் வரணும்னு நினைக்கிறேன்)
//நம்ம ஊர் பக்கம் இது அப்படியே தலைகீழா இருக்கும் (80% நல்லா வேலை செய்பவரா இருப்பாங்க).
---
நம்ம சுரேஷ் கண்ணன் சென்னைதான் என நினைக்கிறேன். அவர் பார்த்ததைத்தான சொல்ல முடியும்? அவர் சொன்ன கருத்துக்கள் 100/100 சென்னையை மையமாக வைத்தே எழுதப்பட்டதென்பது என் நினைப்பு.//
என் கருத்தும் அதுவே
//அதே போஸ்ட்கார்டு போய்ச்சேராமல், அதைப் பற்றி புகார் கூறும்போது, உங்களைக் கேவலமாகப் பார்த்து, ஏதும் கடிந்துகொள்ளாமல், தக்க நடவடிக்கை எடுத்தால், சேவைத் துறை என ஒப்புக்கொள்ளலாம்.//
impractical truth...
உங்க பதிவை விட பின்னூட்டங்கள் ரொம்ப அருமையா இருக்கு... பின்னூட்டத்தில பல விஷயங்கள் இருக்கு... :) நான் சைலண்டா படிச்சிக்கிறேன் எல்லாத்தையும்...
மிக்க நன்றி ஆகாய நதி. வந்து பொறுமையாக படிங்கள். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் கண்டிப்பாக ரெண்டு பதிவு போட்டுவிடலாம். இதில் நிறைய எழுதி இருந்தாலும் தெரிந்து உங்களுக்கு பலனிக்க கூடிய விஷயங்கள் ஏதும் இல்லை. அரசு ஊழியர்களை பற்றி என் பார்வை அவ்வளவுதான். பொழிலன் கதைகளை ஒரு வாரமாக கேட்கலை என்ன ஆச்சு??
பிறந்த நாள் பதிவு அட்டகாசமாக இருக்கணும் ஆமா,..
உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள். வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சத்ரு. அடிக்கடி இந்த வலைப்பக்கம் வாங்க,..
//உங்கள் அனுபவம் என்னை வேதனை பட வைக்கிறது. என்னைப்போலவே எவரோ ஒருவர். எனக்கும் ICICI அக்கவுண்ட் உண்டு. அதென்னவோ எனக்கென்னவோ தனியார் சேவை நிறுவனங்கள் ஒத்து வருவது இல்லை. காரியம் ஆகும் வரை காலை பிடித்துவிட்டு காரியம் முடிந்ததும் கழுத்தில் கைவைப்பது அவர்கள் சுபாவம். இது என் அனுபவம்.//
எனக்கும் icici-ல் மோசமான அனுபவம் தான்.
நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. பொது மக்கள் தொடர்பு இல்லாத அரசு ஊழியர் என்றால் அதில் இவ்வளவு
திமிர்த்தனம் இல்லையோ என்று தோன்றுகிறது . நானும் ஒரு அரசு ஊழியன் தான் . ஆனால் பொது மக்கள் தொடர்பு இல்லாத ஒரு இலாகாவில்
27 வருடமாக பனி புரிகின்றேன் . அதற்கு முன்பு மூன்று வருடம் தனியார் துறையில். வேலை பளு இரண்டிலும் ஒரே போலத்தான் தோன்றுகிறது .
இங்கே ப்ரோமோஷன் கிடைக்க கிடைக்க டென்ஷன் தான் கூடுகின்றது
கருத்துரையிடுக