செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

பொறியியலில் எதற்காக தமிழ் மொழி? (முடிவு பகுதி)

தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாமா?

இது போன பதிவின் தொடர்ச்சி. (நானும் நாளைன்னு போட்டு நாலு நாளாச்சு, நேரமே அமையவில்லை)

பொதுவாக படிப்பது என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது. அதே போல ஒவ்வொருவரும் படிக்கும் முறையும் நோக்கமும் வேறுபடும். மார்க்கை குறிவைக்கும் இனம் ஒன்று. அறிவை குறிவைக்கும் இனம் ஒன்று. மார்க்கை குறி வைத்துப்படிக்கும் எந்த படிப்பும் தண்டமே.


தமிழில் படிப்பதால் என்ன நட்டம்???

இது வரை நாம் மொழியை பற்றி மட்டுமே அலசினோம். பொறியியல் பற்றி பேசவே இல்லை. எந்த தொழிலும் அதன் பயனாளி மிக முக்கியம். காரணம் அவர்தான் வாடிக்கையாளர். அவர்தான் நம் முதலாளி. பொதுவாக இணைய தளம் உதவியால் இன்றைக்கு பொறியியல் துறை எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது. பயனாளி எந்த நாட்டில் வேண்டானாலும் இருக்கலாம். ஆதலால் எல்லாவற்றிற்கும் தெரிந்த மொழி இருக்க வேண்டியது மிக அவசியம்.

நான் ஆங்கிலத்தில் படித்ததால் நம்மால் எந்த நாட்டிற்கும் சுலபமாக செல்ல முடிகிறது, வேலை செய்ய முடிகிறது. வெள்ளைக்காரனுடன் தொழில் நுட்பம் சம்பந்தமாக விவாதிக்க முடிகிறது. அடுத்தவனுக்கு சமமாக நம்மை உயர்த்த முடிகிறது. நான் உனக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை என நிரூபிக்க முடிகிறது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பொதுவாக துவக்கம் கொஞ்சம் தடுமாறும். பொறியியல் துறைக்கு என்னதான் திறமையானவராக இருந்தாலும் தன் திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்பேச்சும் அவசியம். என்னதான் திறமையானவராக இருந்தாலும் தன் திறமையை விவாதிக்க, நிரூபிக்க தெளிவான பேச்சும் அவசியம். பேச்சு மொழியை சிறிய வயதிலேயே கொண்டு வருவது எளிது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு பொது விவாதங்களில் பங்கேற்கும் போது அன்னிய மொழியில் சடாரென பேச வராது. இது ஒரு முக்கியமான காரணி.அடுத்து வேலை வாய்ப்பு. பொறியியலைவிடுங்கள். தமிழ் MA B.ED படித்து முடித்த எத்தனை பேர் சும்மா இருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த அளவிற்கு வேலை வாய்ப்பிருக்கிறது? அவர்கள் இத்தனை வருடம் படித்த படிப்பிற்கு பலன் என்ன? அரசாங்க வேலை மட்டுமே ஒரே வழி. சரி,. நாளையே பதவிக்கு வருகிற ஒரு கிறுப்பிடித்த அரசாங்கம் எல்லாருக்கும் பொதுத்தேர்வு என வைத்தால் பத்து வருடம் முன் படித்தவர் எப்படி செலக்ட் ஆவார்? இப்படி நிறைய பாதகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

கண்டிப்பாக இன்றைக்கு தமிழில் பொறியியல் படித்தாலும் இதே நிலைதான். நாம் அரசாங்கம் தரும் வேலையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். civil, mechanical, telecommunication போன்ற துறைகளுக்கு பிரச்சனை இல்லை. உள் நாட்டு பொறியியல் ஓரளவு ஈடு செய்யும். ஆனால் கணிப்பொறி, IT, petrochemical, bio technology போன்ற துறைகளில் உலக அளவிலான வியாபாரம் நடக்கிறது. முழுக்க முழுக்க தனியாரால் மட்டுமே நடத்தப்படும் இந்த பொறியியல் துறைகள் எப்படி ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே பேசும் மொழியை வைத்து உலக அளவில் போட்டி போட முடியும். இது மிக கடினமான ஒன்று.

இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்படியல்ல.

பிறகு எப்படி??? இப்போது அடுத்த கேள்வி எழுகிறது. தாய் மொழியில் படிக்கிற நாடுகள் எப்படி முழுமையாக பவனி வருகின்றன? இந்த கேள்வி இந்த பதிவின் முழு அர்த்தத்தையும் சொல்லும். நன்றாக கவனித்தீர்கள் என்றால் ரஸ்யா, ஜப்பான்,கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அவர்களின் நாட்டின் மொழியில்தான் படிக்கின்றனர். அவர்கள் எப்படி முதல் நிலையில் தத்தம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்?

காரணம் மிக எளிமையானது.

அவர்களின் முழு தொடர்புகளும் தங்கள் தாய் மொழியிலேயே இருக்கும். மற்ற மொழிகளின் ஆதிக்கம் ஏனோதானாவென்றுதான் இருக்கும். அவர்களுக்கு இதர மொழிகள் இரண்டாம் மொழியாக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் நாட்டில் அது மூன்றாம் தர மொழியே ஆகும். படிப்பு, சிந்தனை, செயல், ஆராய்ச்சி என அனைத்திலும் தங்கள் மொழியையே பயன்படுத்துவதால் கடினமான துறைகளை கூட அவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள் செயல்படுகிறார்கள். சரி விடுங்கள். நிறைய பேருக்கு இது ஒப்புகொள்ள முடியாது.

நம் நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டின் தலை சிறந்த கண்டுபிடிப்புகளாய் எதை சொல்லுவீர்கள்?
செஸ் (கி.மு 230-500), துருப்பிடிக்காத இரும்பு (கி.பி 400), சுழி (ஆமாங்க ஜீரோ), பின்னம் (decimals), நுண்கணிதம் (calculus) , differential equation (aryapattar), எதிர்மறை எண்கள் (negative numbers), பை எண்கள் pi number (22/7) , முடிவில்லாத் தொடர்கள் (infinite series), முக்கோண தொகை (trignometric functions),

இப்படி நிறைய, அதில் எதை சொல்லுவீர்கள்?. ஆனால் நன்றாக கவனிக்க. அனைத்தும் தங்கள் தாய் மொழியிலேயே கண்டுபிடிக்கப்பட்டவை. அதுதான் முக்கியம். நான் போன பதிவில் சொன்ன CTRL C CTRL V காரணமும் அதுதான். மேல சொன்ன நாடுகள் தங்கள் துறையில் தனித்துவத்துடன் விளங்க காரணம் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே.அதனால் தாய்மொழியில் படித்தால் முன்னேற முடியாது என்பதற்கு தவறு என நிரூபிக்க மேலே சொன்ன நாடுகள் ஒரு சிறந்த உதாரணம்.


அதற்கான காரணம் என்ன? தங்கள் நாட்டில் இரண்டாம் மொழி இருந்தாலும் தம்தம் தாய் மொழியில்தான் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், உருவாக்குகிறார்கள். உருவாக்குதல் என்றால் எப்படி? சீனா ஒரு வேளிநாட்டிற்கு ஒரு project பண்ணுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து நிலையிலும் சீன மொழியே இருக்கும். வாடிக்கையாளருக்கு அனுப்பும் முன் மென்பொருளை பயன்படுத்தி அனைத்து பக்கங்களும் மொழி மாற்றம் செய்யப்படும். ஆனால் இங்கே அப்படியல்ல.

தாய் மொழியில் அனைத்தும் சிறப்பாய் அமைய அரசாங்கமும் ஒத்துழைப்பு மிக அவசியம். மக்களுக்கு தாய் மொழியில் படித்தாலும் வேலை கிடைக்கும் என நம்பிக்கை வர வைக்க வேண்டும். சீனாவில் எல்லா நிறுனங்களுக்கும் உற்பத்தி அலுவலகம் உள்ளது. அவர்களின் உட்தொடர்பு மொழி அவர்களின் சீன மொழிதான். சீனா மொழி தெரியாதவர்களிடம் வரும் போதுதான் ஆங்கிலம் வருகிறது. ஆனால் நாம்??? அலுவலகத்தில் இருவருக்கும் தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடல். ஏன் என இருவருமே யோசித்ததில்லை? காரணம் என்ன? தொழில் நுட்பங்களை ஆங்கிலத்தில் படிப்பதால பேசும் போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதுதான் வசதியாக இருக்கிறது. பிரச்சனை தமிழிடம் இல்லை. நம்மிடம்தான்.

எனவே தமிழ்மொழியில் பொறியியல் படித்தால் வேலைக்கு ஆகாது என்ற வாதத்தையெல்லாம் என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. 2000 வருடத்திற்கு முன்பே தனக்கென ஒரு சிறப்பான இலக்கணத்தை கொண்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும் தமிழிற்கு அதற்கு தகுதி இல்லை என்பதெல்லாம் ஏற்க முடியாது. மேலும் அதை இன்னும் பிரகாசிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அதை அஸ்மித்துவிடாமல் வைக்கும் பொறுப்பு நம் தலை முறைக்கு உண்டு.

இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறோம். இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு பத்து தலைமுறைகளில் தமிழில் படிப்பது என்பதே இருக்காது. எது எப்போது அவசியமில்லையோ அது எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியப்படும். இது மொழிக்கு மட்டுமல்ல. உலகில் எதற்கு வேண்டுமானாலும் பொருந்தும். கண்டிப்பாக இது தமிழிற்கு நல்லதில்லை.
2500 வருடங்களுக்கு மேல் இருக்கும் தமிழ் மொழிக்கு நம் தலைமுறையிலிருந்துதான் ஆபத்து துவங்குகிறது. அரசாங்கம் முழித்துக்கொண்டு விட்டது,. நாம்? இன்னும் இல்லையே? காரணம் நிகழ் காலத்தில் புறக்கணிப்படுகின்ற மொழிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை நாம் இன்னும் உணரவில்லை..

19 கருத்துகள்:

கலகலப்ரியா சொன்னது…

//
நம் நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டின் தலை சிறந்த கண்டுபிடிப்புகளாய் எதை சொல்லுவீர்கள்?//

தங்கிலீஷ விட்டுப்புட்டியளே...

//அனைத்தும் தங்கள் தாய் மொழியிலேயே கண்டுபிடிக்கப்பட்டவை. அதுதான் முக்கியம்.//

ஓ,..! தங்கிலீஸ் இந்த லிஸ்ட்ல வராதுதான் சாமி..

//
இப்போது எல்லோரும் குழந்தைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கிறோம். இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு பத்து தலைமுறைகளில் தமிழில் படிப்பது என்பதே இருக்காது.//

இதுவும் genocide தானுங்கோ...

நாம உணர மாட்டோமுங்க... உணர்ச்சி இருந்தாதானே... ஹிஹி...

jothi சொன்னது…

வாங்க ப்ரியா,..

சே,.. சீரியஸா ஒரு பதிவு போட்டாலும் அதை காமெடியா மாத்திரீங்க,..

உணர்ச்சியெல்லாம் இருக்கு,.. ஆனா அதனால் பலனும் இல்லை. காரணம் அதைவிட சுய நலம் அதிகமாய் இருக்கிறது. சுய நலத்திற்காக சுயகௌரவத்தை வித்தாச்சு, இலவச இணைப்பா மனசாட்சியையும் சேர்த்து

Vels சொன்னது…

தாய் மொழியிலேயே கற்பது என்பது நம் அறிவை வளரச் செய்யும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் குறிப்பிட்டதைப்போல பல நாடுகள் தாய் மொழியில் கற்று முன்னேறியுள்ளன. ஆனால் நம் இந்திய நாட்டில், நூறு கிலோ மீட்டர் தாண்டியவுடனே வேறொரு மொழி வந்து விடுகிறது. அவரவர் தாய் மொழியில் கற்றதை நம் நாட்டிலேயே தாய் மொழியில் விளக்க முடிவதில்லை. அதோடு நம்முடைய மொழியில் பொறியியல், மருத்துவம் தொடர்பான தமிழ் மொழி புத்தகங்கள் குறைவாகவே உள்ளன. அந்தந்த துறையில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை தமிழ் படுத்த முன்வர வேண்டும். பதிவர்கள் கூட முயற்சி செய்யலாம். அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து துறைகளிலும் தமிழை முன்னிலைப்படுத்த முன்வர வேண்டும். (ஹ்ஹஹ்ம்ம். இதெல்லாம் நடக்கற காரியமா ?)

மதார் சொன்னது…

ஆங்கிலத்தில் பொறியியல் படிக்கும்போதே பல சிக்கல்கள் . நான் படித்தது அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் . இப்பொழுது தமிழ்நாடு முழுவதுமே அண்ணா தான் .அதற்க்கு முன்புவரை மனோன்மணியம் பாடத்திட்டம் (MS University ) .பாடத்திட்டம் மட்டுமே மாற்றிய அரசு நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாற்றவில்லை . அனைத்துமே MSU படைத்திட்ட புத்தகங்கள் . இவ்வளவுக்கும் நான் அண்ணாபல்கலைக்கழகம் ரெகுலரின் மூன்றாவது batch . மூன்று வருடங்களில் கூட எங்கள் பாடதிட்டதுக்கான புத்தகங்கள் நூலகங்களில் மிக குறைவே இருந்தன . அதுவுமில்லாமல் பொறியியல் பாடங்கள் மேற்க்கத்திய புத்தகங்களையும் படித்தால்தான் சில புரியும் . ஆங்கிலத்திலேயே நம் அரசு இப்படி இருக்க தமிழில் பொறியியல் படித்தால் அதற்க்கான புத்தகங்களும் தமிழிலேயே வேண்டும் .லட்சக்கணக்கான புத்தகங்கள் முதலில் தமிழில் மொழி பெயர்க்கபடவேண்டும் . அதுவுமில்லாமல் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை நமக்கு உணர்த்தும் சேதி தமிழில் குறைந்தது நான்கு வரியில் எழுதினால் மட்டுமே புரியும் . இன்னும் பல சிக்கல்கள் இதில் உள்ளன .

மதார் சொன்னது…

தமிழை வளர்க்க பொறியியல் மட்டுமே வழி இல்லை . குறைந்தபட்சம் அனைத்து பள்ளி ,பட்ட படிப்புகளிலும் சங்ககால தமிழ் பாடங்கள் ஒரு பேப்பர் வைக்கலாம் . பட்டப்படிப்புகளில் ஒரேமாதிரியாய் , ஒருதுறை சார்ந்த பாடங்களை மட்டுமே படிக்கும் அலுப்பு கூட சங்ககால தமிழை இன்னும் ஆர்வமாய் கற்க வைக்கும் .

malar சொன்னது…

தாய் மொழியில் பயின்றால் நம்ம நாடாக இருந்தாலே பிழைக்க கடிணம் நாடுவிட்டு நாடு செல்லும் போது?
ஜப்பான் ,சைனா போன்ற நாட்டு மக்கள் அவர்கள் நாட்டுக்குள்ளேயே தாங்கள் வ்ருமானத்துக்கு வழி தேடி கொள்கின்றனர் அரசாங்கமும் முழு ஒத்துளைப்பு கொடுக்கிறது.அவர்களுக்கு அவர்கள் நாட்டைவிட்டு வெளி நாடுகளுக்கு சென்று பொறுளீட்டவேண்டிய அவசிய இல்லை.அவர்கள் நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் மக்கள்.நம் நாட்டவர் வெளி நாடு களுக்கு செல்லும் போது தாய் மொழி மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது.துபாய் போன்ற நாடுகளில் ஒரே அறையில் நாங்கு பேர் வசிதால் அதில் பல மொழி பேசும் மக்கள் இருபார்கள் (பெங்காளி ஹத்ராபாதி)
அவர்கள் தமிழை எளிதில் பேசிவிடுகிறார்கள் .நம்ம தமிழ் மொழி பேசுபவர்கள் அவர்கள் மொழி பேசுவதில்லை. நமக்கு நமது தேசிய மொழி ஹிந்தி கூட தெரியாது.ஆங்கில மீடியதில் படிக்காமல்

(டிக்கிரி வாங்கி வருபவர்கள்) கல்லூரியில் தப்பி தவறி ஆங்கிலம் படித்து இங்கு வேலைக்கு வருபவர்கள்
ஆங்கிலம் பேசவும் எழுதவும் படும் பாடு .....(இது சிட்டியில் இருந்து வருபவர்கள் அல்ல )
தாய் மொழி கட்டாயம் வேண்டும் மற்ற ஆங்கிலம் ,ஹிந்தி போன்ற மொழிகளும் தெரிந்து இருக்கவேண்டும்.இங்கு பிலிபினொ கூட தமிழ் பேசுகிறார்கள்.ஒரு மொழி கூடுதலாக படிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

nerkuppai thumbi சொன்னது…

நல்ல விதமாக அலசி எழுதி இருக்கிறீர்கள். இது போன்ற விஷயங்களைப் பற்றி புதிய கோணத்தில் சிந்தித்து கருத்துக்களை பதிவு செய்ய நம்மவர் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் குறிப்பிட்ட உதாரங்களில் பல மொழிகள் வழக்கில் உள்ள நாடுகள் ஒன்றும் இல்லை. ரஷியாவிலும், சீனாவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் (துணை மொழிகள் டியாலேக்ட்ஸ்) இருந்தாலும் , ஒரு மொழியே அரசு மொழியாக கட்டாயப் படுத்தப்பட்டு இருக்கிறது என எங்கோ படித்த ஞாபகம். நம் நாடு குடியரசு என்பதால் கட்டாயப் படுத்தி எதையும் செய்ய முடியாது.
எனவே பொறி இயல் தமிழில் என்பது எளிது அல்ல; ஆனால், தாய் மொழியில் படிப்பதை கீழ் வகுப்புகளில் கட்டாயம் ஆக்கி, மாணவர்களை சிந்திக்க செய்ய முடியும்; சமூகப் பாடங்களை தாய் மொழியிலேயே கற்பிக்க வேண்டும்; (நான் கூட உங்களைப் போல் பதினொன்று (அப்போது s s l c) தமிழில் அரசு பள்ளியில் படித்தவன் தான்.)

விஞ்ஞானம், பொறி இயல் தவிர்த்து, பிற பாடங்கள் தமிழில் பெரும் அளவில் பயிற்று மொழி ஆகலாம்.

ஹுஸைனம்மா சொன்னது…

மற்ற மொழிகளையும்/ மொழிகளிலும் படிப்பது நமக்கு பலம்தானே தவிர, பலவீனமாகாது.

jothi சொன்னது…

//அதோடு நம்முடைய மொழியில் பொறியியல், மருத்துவம் தொடர்பான தமிழ் மொழி புத்தகங்கள் குறைவாகவே உள்ளன. அந்தந்த துறையில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை தமிழ் படுத்த முன்வர வேண்டும். //

மிக விளக்கமான பின்னூட்டம் இடுவதற்கு நன்றி நண்பரே

வழி மொழிகிறேன். ஆனால் யார் படிப்பா?? பள்ளிகளிலேயே தமிழ் படிப்பது குறைந்துவிட்டது. நான் முன்பே சொன்னது போல் அவசியம் இல்லாத எதுவும் அனாவசியமே. விக்கியபீடியா தமிழில் எத்தனை பேர் எழுதுகிறார்கள்?? ஆனால் நீங்கள் சொன்ன இந்த மொழியாக்கம் மிக அவசியமான ஒன்று.

வருகைக்கு நன்றி.

jothi சொன்னது…

//ஆங்கிலத்தில் பொறியியல் படிக்கும்போதே பல சிக்கல்கள் . நான் படித்தது அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் . இப்பொழுது தமிழ்நாடு முழுவதுமே அண்ணா தான் .அதற்க்கு முன்புவரை மனோன்மணியம் பாடத்திட்டம் (MS University ) //

வாங்க மதார்.

ஆங்கிலமும், தமிழும் நாம் மற்றவருடன் தொடர்பு செய்வதற்கான ஒரு மொழி. சிக்கல்கள் நம்மை சார்ந்தைவை, மொழியை சார்ந்தவை அல்ல.

//அதுவுமில்லாமல் பொறியியல் பாடங்கள் மேற்கத்திய புத்தகங்களையும் படித்தால்தான் சில புரியும்//

வழி மொழிகிறேன்,அடிப்படை பொறியியல் (engineering fundamentals) இந்திய ஆசிரிய்ர்களின் புத்தகங்களே புரியக்கூடியவை.ஒரு வேளை நீங்கள் விருப்பபட்டு இன்னும் இன்னும் என ஆழ்ந்து ஆராய்ந்து படிக்கும் போது மட்டுமே வெளினாட்டு புத்தகங்கள் தேவைப்படும்.

என்னைப் பொருத்தவரை அந்த படிப்பிற்கும் அடிப்படை மட்டுமே மிக முக்கியம். நாம் படிக்கிறதில்தான் வேலை செய்யப்போகிறோம் என்பது நிச்சயம் கிடையாது. எனவே அடிப்படைகளை மட்டும் தெளிவாக கற்றுக் கொண்டால் போதுமானது. அடிப்படைகளை நன்கு நினைவில் வைப்பதற்கு தாய் மொழி கல்வி ஒரு சிறந்த வழியே

/அதுவுமில்லாமல் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை நமக்கு உணர்த்தும் சேதி தமிழில் குறைந்தது நான்கு வரியில் எழுதினால் மட்டுமே புரியும்/

திருக்குறள் படிக்கும் போது எத்தனை பேருக்கு புரிகிறது? இருந்தாலும் படித்தோம். கற்க கசடற என சொல்ல ஆரம்பிக்கும் போது அடுத்த வரி நமக்கு நினைவிற்கு வருகிறது. அதையே நியூட்டனின் இரண்டாம் விதியை சொல்லிப்பாருங்கள். எப்படி அது? இரண்டையும்தான் படித்தோம். எது நினைவில் இருக்கிறது. அது தாய் மொழியின் பலம். அடிப்படைகள் மறக்கமுடியாது.

jothi சொன்னது…

//தமிழை வளர்க்க பொறியியல் மட்டுமே வழி இல்லை . குறைந்தபட்சம் அனைத்து பள்ளி ,பட்ட படிப்புகளிலும் சங்ககால தமிழ் பாடங்கள் ஒரு பேப்பர் வைக்கலாம் . பட்டப்படிப்புகளில் ஒரேமாதிரியாய் , ஒருதுறை சார்ந்த பாடங்களை மட்டுமே படிக்கும் அலுப்பு கூட சங்ககால தமிழை இன்னும் ஆர்வமாய் கற்க வைக்கும் ./

எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நேற்றைய கனவு முக்கியமா நாளைய லட்சியம் முக்கியமா? என்னைப் பொருத்தவரை தமிழை 8 வதுடன் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். அது வரை படிக்கிற தமிழ் போதும். அதே மாதிரி இந்த வரலாறையும் 8 வதுடன் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். வரலாறு பாடங்கள் ஒரு முறை வாழ்க்கையில் படித்தால் போதும். ஒத்துழையாமை இயக்கத்தையும், சட்டமறுப்பு இயக்கத்தையும், "வெள்ளையனே வெளியேறு"வதையும் எத்தனை முறை, எத்தனை ஆண்டுகள் படிப்பது. அவசியமில்லை. அதற்கு பதில் கீழ்கண்ட பாடங்களை சேர்க்கலாம்.

1.நம் உரிமைகளும் சட்டங்களும் (இதன் அவசியம் தேவைப்படும்போதுதான் தெரியும்)
2.Communication English

கண்டிப்பாக இவை இரண்டும் வாழ்க்கைக்கு தேவை.

சங்கத்தமிழைவிட இவை நம் வாழ்க்கைக்கு மிக அவசியம். என் எண்ணம் ஒன்றே ஒன்றுதான். இதற்கு மேல் வளர வைக்க வேண்டியதில்லை. அழியவிடாமல் பார்த்துக்கொண்டால் போதும். அவ்வளவே. இப்படியே போனால் எழுத்துதமிழ் அழிந்து பேச்சுத்தமிழ் மட்டுமே நிற்கும்.

jothi சொன்னது…

//ஒரு மொழி கூடுதலாக படிப்பதில் தவறு ஒன்றும் இல்லை./

என் பதிவு தவறாக பொருள் விளக்கம் தருகிறதா என தெரியவில்லை. அதிகப்படியான மொழிகள் கற்பதால் நமக்கு நட்டம் ஏது இல்லை. ஆங்கிலம் தேவையில்லை என நான் சொல்லவே இல்லை. நம் எண்ணங்கள் நமக்கு எது வசதி என நினைத்து வாழ பழகிவிட்டோம். அதனால்தான் இந்த இழப்புகள். கண்டிப்பாக நாம் தொடர்ந்து ஆங்கிலத்தில் படிக்கும்போது நாளாக நாளாக தமிழ் என்பது பேச்சில் மட்டுமே இருக்கும் என்பது என் வாதம்.

தாய் மொழியில் படிக்கும் போது சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகவே இருக்கும். முழுக்க முழுக்க நாம் ஆங்கிலத்தில் படித்து பழகிவிட்டதால், "தமிழில் படிக்கும் போது" என்ற பக்கத்திற்கு நாம் வரவே தயாராக இல்லை.

உங்கள் வீட்டிற்கு "TIME" இதழும் வருகிறது, குமுதமும் வருகிறது எதை முதலில் திறப்பீர்கள்? குமுதம்தான். இருக்கட்டும் பரவாயில்லை. இரண்டு புத்தகத்தையும் முழுக்க படியுங்கள்.

படித்து முடித்ததும் எதில் படித்தது அதிக நினைவில் இருக்கும்???

பொறியியல் கண்டிப்பாக தமிழில் படித்தால் சுலபமாக நினைவில் இருக்கும். ஆனால் நிறைய புத்தகம் இல்லை, தகவல் தொடர்பு போன்ற இடர்பாடுகள் இருக்கின்றன. இவையெல்லாம் தனி மனிதனால் செய்ய முடியாது. ஒரு அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

நாம் தமிழை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோம். மீண்டும் போகும் போது வலி இருக்கத்தான் செய்யும். உடம்பு போட்டு விட்டு, குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்து, நடக்க ஆரம்பித்து பின் ஒரு வாரம் முழுக்க வலிப்பதை போல,
உடம்பு ஆரோக்யமாக வேண்டுமானால் வலிகளை தாங்கித்தான் ஆக வேண்டும்.

thenammailakshmanan சொன்னது…

மிக அருமையான பகிர்வு ஜோதி நிஜமாவே தாய் மொழியில் உயர் கல்வி இருந்தால் நிறைப்பேர் பட்டம் பெற இயலும்

jothi சொன்னது…

//விஞ்ஞானம், பொறி இயல் தவிர்த்து, பிற பாடங்கள் தமிழில் பெரும் அளவில் பயிற்று மொழி ஆகலாம்.//

வாங்க தும்பி.

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.


என் கட்டுரையின் நோக்கம்.

1. பொறியியலை கற்றுவிப்பதற்கு தமிழிற்கு தகுதி இருக்கிறது. அதில் கற்றுக் கொள்ள தமிழனுக்கு விருப்பம் இருக்கிறதா?

2.நம்முடைய மேலே சொன்ன கணித கண்டுபிடிப்புகள் அன்னிய மூளைகளின் துணையின்றி, அன்னிய மொழிகளின் வழிகாட்டுதலின்றி தம் தம் தாய் மொழியிலியே சிந்தித்து உருவாக்கப்பட்டவை. உலகம் முழுக்கு உருளையின் பரப்பளவை, சுற்றளவை, கொள்ளலவை காண நாம் கண்டுபிடித்த π -ஐ பயன்படுத்தி கொண்டிருக்கிறான். சுதந்திரத்திற்கு பின் நம் கல்வி அறிவும் அதைப்பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. ஆனால் கண்டுபிடிப்புகள் என்ன?? ஏன் நம்மால் எதுவே புதிதாய் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அவை ஏன் ஏதோ ஒன்றின் மாறுதலாக (modification) இருக்கின்றன ?

3.தமிழ் வழியில் கற்பதால் ஒருவரின் ஆங்கில தொடர்பு மிக மோசமானதாக இருக்கும் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு என்ன? ஆங்கிலம் ஒரு மொழியே. அது ஒரு வருடம் தொடர்ந்து யாருடனாவது பேசினாலாயே போதும். கண்டிப்பாக வந்துவிடும். ஆங்கிலம் தெரிந்த அனைவருமே பொது இடத்தில் சிறப்பாக பேசுவார்கள் என்பது உண்மையல்ல. என்ன,.. நமக்கு தெரிந்த ஒன்றை பொது இடத்தில் சொல்ல முடியவில்லை. அதை ஏதோ ஒன்று தடுக்கிறது. அதற்கு தமிழ் என்ன செய்தது? ? தமிழா தடுத்தது? நாம் பொறியியல் கற்க சிரத்தை எடுப்பது போல ஆங்கிலத்தில் பேசுவதிற்கும் சிரத்தை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதை எடுக்காமல் தமிழை குறை சொல்வது எந்த விதத்தில் சரி? வீடு ஒழுக மழையா காரணம்?. ஓட்டையை அடைக்க நாம் முயற்சி எடுக்க வில்லை.

4. இன்றைக்கு மருத்துவமும், பொறியியலும், விஞ்ஞானமும்தான் முதுகெழும்புகள். புற நானூறும், அக நானூறும் அல்ல. வேர்கள் அறுந்துவிட்ட ஆலமரத்திற்கு விழுதுகள்தான் தேவை. செத்த மரத்தின் மரத்தூண்களால் நிலையாக நிறுத்தி வைக்கலாம் என்பதில் ஒரு பலனும் இல்லை.

jothi சொன்னது…

//மற்ற மொழிகளையும்/ மொழிகளிலும் படிப்பது நமக்கு பலம்தானே தவிர, பலவீனமாகாது.//

வாங்க ஹூஸைனம்மா,.

சந்தேகமில்லை. கற்கிற எதுவுமே வேஸ்ட் இல்லை.

இன்று வந்த குழந்தைகளை பார்த்துவிட்டு பெற்ற தாயை தொலைக்கிறோமே என்பதே என் கவலை.

அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கண்டிப்பாக இன்னும் ஒரு 5-6 சந்ததிகளில் பள்ளியில் தமிழ்பாடம் இருக்குமா என தெரியவில்லை.

jothi சொன்னது…

//மிக அருமையான பகிர்வு ஜோதி நிஜமாவே தாய் மொழியில் உயர் கல்வி இருந்தால் நிறைப்பேர் பட்டம் பெற இயலும்//

நன்றிங்க தேனம்மை.

பெறுகிற பட்டம் பலன் வயிற்றிற்கு பலன் தருவதாக இருக்க வேண்டும். இமய மலை அழிவது போல் தமிழும் அழிந்து கொண்டு இருக்கிறது. இரண்டிற்கும் காரணம் சூழ்னிலையே.

ஹுஸைனம்மா சொன்னது…

உங்க கருத்து எனக்குச் சரியா பிடிபடவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழ்-வழி பொறியியல் கற்றலுக்கு ஆதரவாத்தான் பேசுறீங்களா அப்போ? அப்படின்னா எட்டாவதோட தமிழ்ப்பாடத்தை மூட்டை கட்டணும்னும் சொல்றீங்க?

அதாவது, புற/அக நானூற்று வகைகளை விட்டுட்டு, டெக்னிக்கல் விஷயங்கள் தமிழ்ல படிக்க ஆரம்பிக்கனும்னு சொல்றீங்க இல்லையா? அதுதான் சரி. ஆனால், பொறியியலிலும், விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் தினம்தோறும் புதுப்புது உத்திகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துகிட்டிருக்கும்போது தமிழ்தான் வேணும்னு நாம நம்மைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. அந்த புதிய உத்திகள் தமிழில் வந்து சேர்வதற்குள் பழசாகிடும். வேகமாப் போற உலகத்துல ஆங்கிலப் புலமையும் கட்டாயமே என்பது என் கருத்து.

jothi சொன்னது…

//உங்க கருத்து எனக்குச் சரியா பிடிபடவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழ்-வழி பொறியியல் கற்றலுக்கு ஆதரவாத்தான் பேசுறீங்களா அப்போ? அப்படின்னா எட்டாவதோட தமிழ்ப்பாடத்தை மூட்டை கட்டணும்னும் சொல்றீங்க?//

மொழி சார்ந்த கல்வியை (எ.கா தமிழ் இலக்கணம்) விட தொழில் சார்ந்த கல்வி (பொறியியலில் தமிழ்) அவசியம் எனக் கூறுகிறேன். தேவைகள் இருந்தால் மட்டுமே எதுவும் நிலைத்து நிற்கும், புற நானூறைவிட தொழில்னுட்பம் மிக முக்கியம் என்பதால் அதை சொன்னேன்.

//ஆனால், பொறியியலிலும், விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் தினம்தோறும் புதுப்புது உத்திகள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துகிட்டிருக்கும்போது தமிழ்தான் வேணும்னு நாம நம்மைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. அந்த புதிய உத்திகள் தமிழில் வந்து சேர்வதற்குள் பழசாகிடும். //

புதிய உத்திகளை எதிர்பார்த்து நாம் பழகிவிட்டோம். புதிய உத்திகளை நாம் உருவாக்குவதை தொலைத்துவிட்டோம்.தொழில் நுட்பத்தை உருவாக்குவதற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை என்பதற்காகதான் நான் தினம் ஒரு தொழில் நுட்பம் வரும் ஜப்பானை உதாரணமாக சொல்கிறேன். இன்றைக்கு ஜப்பானில்தான் அதிகளவு மின்னணு கண்டுபிடிப்புகள் வருகின்றன. நம் நாட்டிற்கு BPO/KPO தான் அதிகம் வருகிறது.

தமிழ்தான் வேணும்னு நான் சொல்லவில்லை. தமிழும் வேணும் என்றுதான் நான் சொல்ல வருகிறேன். ஆங்கிலபுலமை தேவையில்லை, பேசுவதை,எழுதுவதை அறிந்து கொள்ளக்கூடிய அறிவு இருந்தால் போதும் என்றே நான் நினைக்கிறேன்.

anto சொன்னது…

ஆணித்தரமான கருத்துக்கள்...தெளிவான பின்னூட்டங்கள்...அவசியமான பதிவு.தமிழ் மிக லாவகமான மொழி இல்லையென்றால் எட்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அதை நிலைத்திருக்காது.நீங்கள் குறிப்பிட்டது போல் திருக்குறள் போல் இரண்டடிகளில் ஒரு உலகப் பொதுமுறை வேறு எந்த மொழிக்கும் கிடையாது.தமிழில் வார்த்தை பஞ்சம் ஒரு போதும் ஏற்பட்டதில்லை.நமக்கு தெரியவில்லை என்பதற்காக இருப்பது இல்லை என்றாகிவிடாது.இங்கு மருத்துவம்,பொறியியல் உட்பட சகலமும் தமிழ்மயம் ஆக்கலாம்.அதற்கு தேவை முயற்சிகள்....எண்ணங்கள் திண்ணமானால் முயற்சிகள் பிறக்கும் நம்பிக்கையுடன் முயன்றால் நிச்சயம் முடியும்!!!!

என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது உங்களது பதிவு.வாழ்த்துக்கள் தோழா!

கருத்துரையிடுக