வெள்ளி, 1 அக்டோபர், 2010

தூக்கணாங்குருவி, சுவாரஷ்யங்களின் பெட்டகம்,..


ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,..

தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம்.
இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,..

தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான்.

வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது.



கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு காட்டபடும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)


செழிப்பான நீர் பகுதி, உயரமான பனை/தென்னை மரம், போன்ற இடங்களில் கூட்டை கட்டுகின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் இவைகளின் கூட்டத்தில் 20-30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன.




கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும் (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும். அதற்கு திருப்தி இருந்தால் இணைவிற்கு ஓகே சொல்லிவிடும்.



பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள் தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.(அப்போது ஆண் பறவைகள் மிக டென்சனாய் இருக்கும்,.. கிளைண்ட் பிடிக்கலைன்னு project கேன்சல் பண்ணிட்டா??),..



ஆனால் கூட்டின் வடிவமைப்பை விட அது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா என்பதே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும்,. பெண் பறவை 3-4 முட்டைகளை இடும் (அதுக்கு மேலே விட்டா கூடு கீழே விழுந்திரும்மில்ல,..),. பெண்பறவை 15 நாள் வரை அடைகாக்கிறது.குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்து பறந்து சென்றுவிடட்டவுடன் ஆண் குருவி அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை காட்ட ஆரம்பிக்கிறது. பறவைக்குஞ்சு அருகில் உள்ள பகுதிகளுகு இடம் பெயர்கிறது. அப்படி இடம் பெயர்ந்தாலும் அதி இரண்டு கீ.மீக்குள்தான் இருக்கும்,.




இவை ஆச்சர்யம் வாய்ந்த புத்திசாலிப்பறவைகள். நகரங்களில் இருப்பவர்கள் இரவில் ஒளி தரும் மின்மினிப்பூச்சிகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை,.. இந்த தூக்கணங்குருவிகள் இந்த பூச்சிகளை எடுத்து ஈரமான களிமண்ணில் வைத்து தன் கூட்டின் சுவற்றில் ஒட்டிவிடும். இதனால் இரவு கூட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.

வழக்கமாக நாங்கள் கிராமத்தில் முதுகு சொறிய இவற்றின் பழைய கூட்டைப் பயன்படுத்துவது உண்டு. இந்த முறை ஊருக்கு போன போது நைலானாலான தேய்ப்பான் கிடைத்தது. என்னவென்று விசாரித்தால் நாமதான் நெல்லும் போடறதில்ல, கம்பும் போடறதில்லை, எப்படி குருவி தென்னை மரத்தில் கூட கட்டும் என பதில் வந்தது,. உடம்போடு ஒட்டாத அந்த நைலான் உதவியால் அழுக்கு தேய குளித்துவிட்டு வந்தேன். ஆனால் மட்டும் அந்த குற்ற உணர்ச்சி அப்படியே தொக்கி நிற்கிறது,.. தூக்கணங்குருவிகளின் மறைவு யாரால்??


நம் குழந்தைகள் இன்னும் எவற்றையெல்லாம் இழக்கப்போகின்றனர் எனத் தெரியவில்லை,.. அவர்களின் தூக்கணாங்குருவிகள் கம்ப்யூட்டரோடு முடிந்துவிடுமா??

.