திங்கள், 27 செப்டம்பர், 2010

பதிவுலக அருஞ்சொற்பொருள்

பொதுவாக நம் பக்கத்திற்கு வரும் புதிய பதிவர்களின் கஷ்டத்தை போக்க இந்த அருஞ்சொற்பொருள் சேவை,..

சொம்பு :
பதிவுலக பிரச்சனைகளில் நடுவில் மாட்டிக்கொள்ளும் அப்பாவியை துவம்சம் செய்யும் ஆயுதம். இரண்டு குரூப் டமால் டுமீள் என சண்டை போட்டுக் கொள்ளும் போது "நாமெல்லாம் சண்டை போட வேணாம் தல" என வரும் இவர்களை ரெண்டு க்ரூப்பும் சேர்ந்து காலி செய்துவிடும், சண்டைகளில் பஞ்சாயித்து பண்ண கையில் "சொம்பை" தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான் என வர்ணிப்பதால் இப்பெயர்க் காரணம் வந்தது.

ஆப்பு:
இப்படி ரொம்ப நல்லவனாக நாம் சமாதனத்தூதுவனாக செல்லும் போது நம் நண்பன் ஒருவனே காலை வாரிவிடுவான். இதன் பெயர்தான் ஆப்பு. சில நேரங்களில் நம் எழுத்து இடறி நாமே நம்மை வாரிக் கொள்வோம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு,..

தோப்பு
தனியாக இது போன்ற சண்டைகளில் நாம் மாட்டிக்கொள்ளும் போது அங்கிருக்கும் மொத்த பதிவர் கூட்டமே நமக்கு சேர்த்து வைக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆப்புகளுக்கு தோப்பு என பெயர்,.. பொதுவாக தோப்பில் சிக்கி கொள்ளும் பதிவர் ஒன்று பதிவுலத்தைவிட்டு ஓடி விடுகிறார்,. இல்லை என்றால் தன் நிலை பிறள்கிறார் (பாருங்க ,.. நான் எப்படி டீசண்டா சொல்லுறேன்)

பின்னூட்டம்
ஆப்பு வாங்குவதற்கு/வைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உளி. இது முழுக்க ஒரு பதிவை படித்தபின் தமிழீஷ் ஓட்டைத் தவிர இதையும் சன்மானமாக அளிக்க வேண்டியது. ஆனால் பலர் படிக்காமலேயே எழுதி வைத்துவிட்டு செல்வதுதான் கொடுமை. இதைதான் ஆப்புடன் கூடிய பல்பு என பதிவுத்துறை வர்ணிக்கிறது (அதாம்பா,.. பதிவர்கள் இருக்கும் துறை). யாருக்கும் ஆப்பு வைக்காமல் தன் வருகையை மட்டும் பதிவு செய்வதை "மீ த ப்ர்ஸ்ட்" என வரையரை செய்யப்படுகிறது (burst இல்ல first,.. வந்த உடனே ஒரு மனுஷன் burst ஆனா என்னவாகிறது),.. இதன் மூலம் (அட,.ச்சை,.. அதாம்பா origin) என்னவென்றால் முதல் காலத்தில் பின்னால் (இது பேக் சைடு இல்ல) குத்தி குத்திக் காட்டி பதிவர்களை ஊக்கப்படுத்தியதால் பிற்காலத்தில் இது மறுவி பின்னூட்டம் என அழைக்கப்படுகிறது. (ஷ்ஷ்ஷ்ப்பாடா,. மூச்சு வாங்குது)

மொக்கை
ஒரு பதிவரால் ஹிட் ஆகுமா/ ஆகாதா என சந்தேகத்துடன் எழுதும் பதிவு. ஆனால் பதிவுலக நடைமுறைகளின்படி (அப்படின்ன இன்னாபா??) இவை ஹிட் ஆகிவிடும். இதன் மூலம் எப்படியென்றால் முதலில் பதிவுகளை அனுபவம் இல்லாமல் பெரிதாக (அதாம்பா மொக்கையாக) எழுதிவிடுவர், அது பெரும்பாலும் ஒத்தை ஓட்டுடன் சொத்தையாக நிற்கும்.

தங்கமணி
பதிவுலகத்தால் துவைத்துப்போடப்படும் விவரமான அப்பாவி மனைவிமார்கள். (ஆனால் வீட்டில் எல்லாத்துணியையும் துவைப்பது நம் பதிவர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே,.) இதற்கான பெயர்காரணம் குறித்து முறையான ஆதாரங்கள் இல்லை,.. ஆனால் வீட்டில் உள்ள மனைவிமார்கள் அடிக்கடி "தங்கம்" வாங்க "மணி" கேட்பதால் தங்கமணி இந்த பெயர் வந்திருக்கலாம்,.. (இதில் expert நம்ம பதிவர் ஆதிதான்,.. சான்சே இல்ல,. அவரின் கற்பனை தங்கமணி கதைகளுக்கு நான்/என் அலுவலக நண்பர்கள் அடிமை என்றே சொல்லலாம், நேரம் கிடைத்தால் புது பதிவர்கள் அங்கே விஜயம் செய்யுங்கள்,. தானாகவே எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்)

பிரபலப்பதிவர்
இது மிகமிக முக்கியம் நண்பர்களே,.. இவர் பதிவர்களுக்கு முன்னோடியாக பதிவுலகத்தால் கருதப்படுகிறார். ஆனால் செயல்கள் எல்லாம் பின்னால் இருந்து நகர்த்துபவையாக இருக்கும். இவர்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என அரிச்சுவடிகளில் (அரிச்சுவடியா? ஆத்திச்சூடியா,.. அய்யயோ சரியா தெர்லயே) தேடிப்பார்த்த போது இவர்கள் போற இடமெல்லாம் பிராபலம் வருவதால் பிராபலப்பதிவர், பிராபலபதிவர் என அழைக்கப்பட்டு பின்னர் தொழில்னுட்ப வளர்ச்சியால் பிரபலப்பதிவர்கள் ஆனார்கள்,..

இவர்கள் இல்லாமல் மூத்தபதிவர்கள் என்ற வகை உள்ளது. இவர்களில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று வயதான பதிவர்கள் (மரியாதைக்காக யாரும் இவர்களை ஒண்ணும் சொல்லமாட்டார்கள்,..), இன்னொன்று 2007ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள். வருஷத்திற்கு ஒரு 10 பதிவைப் போட்டுவிட்டு பாத்துக்கப்பா,.. நான் ஜெயிலுக்கு போய்ட்டேன், ஜெயிலுக்கு போய்ட்டேன்,, நானும் ரௌடிதான் (பதிவர்தான்) என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஒரு பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு போடுவாங்க,.. நேரப்பற்றாக்குறையாலும், தங்கமணிகளின் தொந்தரவாலும் இவர்கள் இப்படி பாதி பதிவராகவும், முக்கால்வாசி வாசகராகவும் ஆகிவிட்டார்கள்.

கவிஜ
இது கூட மிக மிக முக்கியம். கிட்டதட்ட மனசாட்யே இல்லாமல் எல்லா பதிவரும் கைவைக்கும் இடம் இதுதான். (நான் கூட அந்த கொடுமையை இரண்டு முறை செய்திருக்கேன்,. நல்ல வேளை ஹிட் ஆகாததால் யாரிடமும் " ஹிட்" ஆகாமல் தப்பித்தேன். சில நேரங்களில் கவிதையின்பால் உள்ள ஆர்வக்கோளாற்றில் நண்பர்கள் கவிதையை விளக்கம் கேட்டு "இது கூட தெர்ல" என பெரிய தோப்பு (விளக்கம் மேலே) வாங்கிய அனுபவம் கூட உண்டு). இதற்கு உள்ள ஒரே பிளஸ்பாய்ன்ட் இப்படிதான் இதை எழுத வேண்டும் என்ற எந்த எந்த வரையரையும் இல்லாதது. இப்போது நம் புத்திசாலி பதிவர்கள் படங்களில் வந்த நல்ல பாடல்களையே பதிவாய் போட்டு கவிதை எபக்டில் பேமசாகி விடுகிறார்கள். நான் கூட அப்படி போடலாம் என இருக்கேன் யாராச்சும் சாப்ட் காப்பி இருந்தா என் மெயிலுக்கு அனுப்பிவையுங்க,.. நான் எப்படியாச்சும் அதை கஷ்டப்பட்டு பதிவாக்கிவிடுகிறேன்,..
இதற்கான பெயர்காரணம் மிக எளிது,. தன் படைப்பு கவிதை என உறுதியாக நினைக்கும் புலவர்கள் தன் படைப்பை கவிதை என்றே அழைக்கிறார்கள். ஆனால் சிலர் இதை போய் நாம் கவிதைன்னு சொல்லலாமா?? நீதி தாங்குமா,..செங்கோல் வீங்குமா என நினைத்துவிட்டு அதை கவித, கவிஜ, கவி, கவித்தை (இவர் வித்தக கவிஞராம்,. அதனால் தன் படைப்பை இப்படி அழைக்கிறார்,.நான் கூட குரங்காட்டியா இருந்து கவிதை எழுத தாவிட்டார்னு நினைச்சேன்,..) என பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைக்கிறார்கள்.

பெயரில்லா
பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களையே சும்மா நடு நடுங்க வைக்கும் வினையூக்கிகள் (அதாம்பா catalyst),.. இதன் பெயர்காரணமும் மிக சிம்பிள்.பெயரே இல்லாமல் வந்து பேர் போனபதிவர்களின் பேரை நாறடித்ததால் இந்த பெயர். பெயரில்லாங்கற பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல,..

ங்க்கொய்யால,.
சமீப காலமாக பதிவுலகில் பயன்படுத்தப்பட்டாலும் இதன் மூலமும் அர்த்தமும் இப்போது தெரியவில்லை. இதற்கு நம் பதிவர் கூட்டம் எனக்கு உதவும் என நினைக்கிறன்,..


.

அதென்ன ஓசோன் துளை???

கொஞ்சம் முன்னுரை
உச்சவளி மண்டலத்தின் மேற்புற படுகையாக பரவி இருக்கும் ஓசோனானது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நேரடியாக புறஊதாக்கதிர்கள் நம்மை தாக்கும்போது நம்மை மட்டுமின்றி நம் சந்ததியையும் பாதிக்கும். எனவே இந்த புறஊதாக்கதிர்கள் நம்மை தாக்குவதை தடுக்க கூடிய ஓசோன் படலத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. அது எப்படி என்பதினை அறியும் முன் அதன் பின்னால் உள்ள அறிவியலைப் பார்க்கலாம்.

கொஞ்சம் அறிவியல்.

ஆக்ஸிஜன் அணு (O), ஆக்ஸிஜன் மூலக்கூறு வாயு (O2), ஓசோன் வாயு (O3) இவை மூன்றும் மாறி மாறி சுழல் வினையின் (cyclic reaction) காரணமாக உருவாகி, பிரிந்து, பின்னர் மீண்டும் உருவாகினறன
நிலை ஒன்று
முதலில் ஓசோன்வானது (O3) சூரியனின் புற ஊதாக்கதிர்களினால் ஆக்ஸிஜன் வாயுவாகவும் (O2) தனித்த ஆக்ஸிஜன் (O)அணுவாகவும் உடைகிறது. (இந்த வேதி மாற்றத்தின்போது புற ஊதாக்கதிர்கள் அதிகப்படியான வெப்பஆற்றலை (heat energy) வெளிவிடுகின்றன என்பதை நினைவில் கொள்க)

O3 --------> O2 + O + வெப்பஆற்றல் --------(1)

நிலை இரண்டு
பொதுவாக வாயுனிலைத்தனிமங்கள் தனித்து இருப்பதில்லை. எனவே இந்த தனித்த ஆக்ஸிஜன் மற்றோரு ஆக்சிஜன் மூலக்கூறுடன் இணைந்து ஓசோன் வாயுவை உருவாக்குகிறது. இதுவும் சாதாரணமான வினை இல்லை. "Photodissociation" என அழைக்கப்படும் இவ்வினையானது uvயில் இருக்கும் போட்டோனை எடுத்துக்கொண்டு கீழ் வரும் வினையை அளிக்கிறது. இதன் மூலம் உடைந்த ஓஸோன் மீண்டும் உருவாகிறது. இதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இது சூரியனிடம் இருந்து வரும் மின் காந்த ஆற்றலில் ( electromagnetic energy) இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.

O + O2 + ஆற்றல் --------> O3 ------------------- (2)
இதனால் உடைந்த ஓசோன் மீண்டும் உருவாகிறது. இதுதான் மீள் வினை (reversible reaction) எனப்படுவது.

இதனால் ஓசோனில் இருந்து ஆக்ஸிஜனும், பின்னர் அதே ஆக்சிஜனிலிருந்து ஓசோனும் உருவாகின்றன. நம்முடைய ஓசோன் படலத்தின் வேதிச்சமனிலையின் தத்துவம் (Law of ozone chemical equilibrium) இதுதான். இப்படிதான் ஓஸோன் படலம் தன்னை முழுமையாக நிலை நிறுத்தி இருக்கிறது.

ஆக மொத்தம், நிலை ஒன்றில் ஆக்சிஜனாக உடைகிற ஓசோன் மீண்டும் நிலை இரண்டில் மீண்டும் ஓசோனாகவே மாறுகிறது. இதுதான் வழக்கமான சுழல் நிகழ்ச்சி.



எங்கே பிரச்சனை,..??

பொதுவாக இப்படி உடைகிற ஓஸோன் தனித்து ஆக்சிஜனாய் இருக்கையில் ஒண்ணும் பிரச்சனை இல்லை. அது உடனடியாக மற்றோரு ஆக்சிஜனுடன் இணைந்து ஓஸோனாய் மாறிவிடுகிறது.

O + O2 + ஆற்றல் --------> O3

அப்படி தனித்து இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்சனை,..

அது எப்போது நடக்கிறது??

இன்றைய நாட்களில் மிக அதிக அளவு தொழிசாலை, கார், மற்றும் இன்ன பிற மாசு உருவாக்கும் காரணிகளால் உருவாகின்ற தன்னிச்சை வளைய வேதிவினையூக்கிகளான (free radical catalyst) நைட்ரிக் ஆசிட், நைட்ரஸ் ஆக்ஸைட், தனித்த நிலையில் உள்ள குளோரின், மற்றும் புரோமின் அணு, ஹாலஜன் சேர்மங்களான ப்ரோமோப்ளூரோகார்பன், க்ளோரோப்ரோமோகார்பன், ஹைட்ரக்ஸைல் போன்றவை தனித்த நிலையில் இருக்கும் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்து சேர்மமாக மாறுவதால் மீண்டும் ஓஸோன் உருவாக்கம் தடைபடுகிறது. கீழே உள்ள சமன்பாட்டை பார்க்க,..

CFCl3 + UV -------> CFCl2 + Cl
Cl + O3 -------> ClO + O2
ClO + O3 -------> Cl + 2 O2

நன்றாக பார்த்தீர்களானால் வழக்கமான சுழல்வினையில் (வினை 1 பார்க்க) மிச்சம் இருக்கிற தனித்த ஆக்ஸிஜன் (0) இதில் இல்லை. இதனால் ஆக்ஸிஜன் அணு மீண்டும் ஆக்சிஜன் மூலக்கூறுடன் இணைந்து ஓசோனை உருவாகும் (வினை 2) மீள்வினை (reversible reaction) இதில் தடைபடுகிறது.

இதனால் ஓசோனின் எண்ணிக்கை உயர் வளிமண்டலத்தில் குறைகிறது. இதைதான் ஓசோன் துளை என சொல்லுகிறோம்.



இதனால் உருவாகின்ற அதிகுறை அடர்த்தி பகுதியில் (very low density field) புறஊதாக்கதிர்கள் எளிதாக உள்ளே நுழைகின்றன,. இதன் விளைவுதான் நமக்கு உருவாகின்ற பல்வேறான உடல் உபாதைகளும், சுற்றுசூழ்னிலை மாற்றங்களும்,..

இவற்றில் ப்ரோமோப்ளூரோகார்பன், க்ளோரோப்ரோமோகார்பன் (மேலே சொன்னவை) மிக மோசமானவை. அவை வேதிவினையின்போது மிக மிக வேகமாக ஓசோனின் எண்ணிக்கையை குறைப்பதாக கணடறியப்பட்டன. இதனால் இவற்றை உருவாக்குவதும், பயன்படுத்துவதும் உலகம் முழுக்க தடை செய்யப்பட்டு 1996 ஆம் ஆண்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.(குளிர்பாதனத்துறைக்கு பயன்படுத்தப்பட்டது)

இத்தகைய உலக அளவிலான நடவடிக்கைகளால் இப்போது ஓசோன்படலம் ஓரளவிற்கு மூடிவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது நம் சுற்று சூழலிற்கு தருகிற முக்கியத்துவத்திற்கு ஒரு நல்ல மைல்கல் என்றே நாம் சொல்லலாம். நாம் கற்றுக் கொள்ளுகிற பாடங்கள் அனைத்தும் நன்மைக்கே,..

டிஸ்கி
இது போன்ற முழுக்க முழுக்க சமுக கண்ணோட்டத்துடன் கூடிய தொழில்னுட்ப பதிவுகள் நம் நண்பர்களால் படிக்கப்படுவதில்லை என்பது எனக்கு அறிந்ததே,.. இருந்தாலும் எங்கோ, எப்போதோ ஒரு மாணவன் ஒரு வேளை தேடி இது அவனுக்கு பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி,.. அந்த வகையில் இந்த ஐம்பதாவது பதிவு எனக்கு முழு திருப்தி,.. (முழுக்க முழுக்க அறிவியல் தமிழில் ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாக ஆசை, அது இன்று ஓரளவிற்கு நிறைவேறியதில் மகிழ்ச்சி)

இந்த பதிவு எழுத பின்னுட்டம் வழி தூண்டுகோளாக உதவிய சகோதரி ஆனந்திக்கும், ராஜேஷுக்கும், மிக்க நன்றி,..

வழக்கம் போல் வாக்களித்து எழுத்துக்களை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே,.


.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மினி மீல்ஸ் (செப் 2010)

சல்யூட்
9 வயதில் பன்னிரெண்டாம் வகுப்பு,
10 வயதில் B.Sc (physics),
12 வயதில் M.Sc (physics),
21 வயதில் PhD (Quantum Computing) Indian Institute of Science (IISc) முடித்து இந்தியாவிலேயே மிக இளவயதில் முனைவர் பட்டம், 2003 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையால் "most gifted youngsters" எனப் புகழ்மாலை,
22 ஆம் வயதில் உலகப்புகழ் பெற்ற IIT BOMBAYல் Asst. Professor தேர்வாகி IITகளிலேயே மிக இளவயது பேராசியர் எனப் பெருமை.
மற்றும்
"most gifted Asian youngsters" - TIME magazine,
"Superteen" - SCIENCE,
"Physics Prodigy" -TIMES
"Master Mind" - The WEEK
"one of the smartest Indian யூன்க்ச்டேர்ஸ்" - OUTLOOK



பாட்னாவை சேர்ந்த "தாதாஹத் அவதார் துளசி"தான் இத்தனை பெருமைக்குரியவர்.

2001 ஆம் ஆண்டு நோபல்குழு வரை சென்ற இவரை ஒரு தகுதியும் அற்றவர் எனவும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் எனவும் தூற்றியது. அதே ஆள் பின்னர் உலக அளவிலான பல பட்டங்களை பெற்றார்.

உலக அளவிலான பல்கலைகழகத்தில் இவருக்கு மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் இந்திய அளவில் "க்வாண்டம் அடிப்படையில் அமைந்த அதிவேக கணிப்பொறியை உருவாக்குவதே தன வாழ்க்கையில் லட்சியம்" என்ற லட்சிய நோக்கோடு IIT பேராசியராக சேருகிறார்

IIT பக்கம் நுழைவதே பெரிதாக இருக்கையில், இவ்வளவு சின்ன வயதில் இத்தனை சிறப்புகளுடன் பேராசிரியராக அமரும் இவருக்கு நான் அடிக்கிற இந்த முதல் சல்யூட்டால் நான் பெருமை கொள்கிறேன்.

ஐடியா மாமு ஐடியா

டென்மார்க்கில் உள்ள க்ரௌன் ப்ளாஸா ஹோட்டல் தன் ஓட்டலில் 30 டாலர் மதிப்புள்ள மதிய உணவை இலவசமாக தருகிறது. அதற்கு நீங்கள் அங்கிருக்கும் சைக்கிளை 15 நிமிடம் ஓட்டினால் போதும். இதை ஓட்டும் போது இதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டர் 10Wh அளவிற்கு மின்சாரம் தயாரிக்கிறது. இதை அதன் உள் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுகிறது. எப்புடி ஐடியா? உடம்பும் குறைஞ்சது, சோறும் கிடைச்சது மின்சாரமும் கிடைச்சது, சுற்றுசூழலும் பாதுகாப்பாச்சு. யாருக்கும் நட்டமில்ல.


கொஞ்சம் பெர்சனல்

இங்கே நான் மட்டும் தனியாக பேச்சுலராக ஓட்டிக் கொண்டிருப்பதால் சாப்பாட்டிற்கு கஷ்டம். வீட்டில் சாப்பிட்டு பழகிவிட்டதால் வெளியில் போய் சாப்பிடவும் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாகவும் நம் இயல்பான சோம்பேரித்தனத்தின் காரணமாகவும் சமைக்க முடியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் தங்கமணியிடம் மட்டும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன் என பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு எடக்குமுடக்காண (அப்படின்னா என்னான்னு கேக்க கூடாது) ஒரு உரையாடல்,..

"சாப்பிட்டீங்களா??"
"இல்ல இனிதான் வீட்லபோய் சாப்பிடணும்"
"ஆமாங்க,.. நல்லா நியாபகம் வெச்சுக்குங்க,. வீட்டுலையே எதையாச்சும் சமைச்சு சாப்பிட்டுக்குங்க,.. உங்க உடம்புக்கு ஒத்துக்காது"
"ஆமா,. சரவணபவன்ல இருந்து பார்சல் வந்துருச்சு,..வீட்டுல போய்தான் சாப்பிடணும்,..(அய்யய்யோ,.. உளரிட்டேனே, ரவுண்டு கட்ட போறா,...)"
"ஆமாங்க,.. வீட்டுலேயே சாப்பிடுங்க,. கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க"

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் - என்ன ஒரு ரம்மியமான பாடல் இல்ல,...

சமூகம்
ஒவ்வொரு வருடமும் கல்வியில் பெண்கள்தான் முதல் இடத்தில் வருகிறார்கள். இது பள்ளியாகட்டும், கல்லூரி ஆகட்டும். மதிப்பெண் சிறப்பாக எடுக்கும் மாணவிகள் தங்கள் பணிகளிலோ இல்லை சிறப்பான கண்டுபிடிப்புகளிலோ ஏன் ஜொளிக்கவில்லை??? கல்வியின் பலன் அதை முறையான பயன்பாடாக (Application) கொண்டு வருவதில்தான் இருக்கிறது. வெறும் பேப்பரில் மதிப்பெண்ணாக பைல் பண்ணி வைப்பதில் என்ன பலன். எங்கே இடிக்கிறது??? மகளீரை முன்னேறி வரவிடாமல் தடுப்பது எது ?

பார்க்க ரசிக்க

இது மனிதனால் உருவக்கப்பட்ட பூக்கள். பிரமிப்பான வேலை இல்லை??





பிடித்திருந்தால் ஒரு ஓட்டு,..

. OO.

வியாழன், 23 செப்டம்பர், 2010

என்ன ஒரு ஒற்றுமை???

சிவகாசியில் ஆதி காலத்தில் போக்கிரியாய் ஒரு அழகிய தமிழ் மகன் சுத்திக் கொண்டிருந்தார். குருவி பிடிக்க வில்லு எடுத்துக்கொண்டு ஒரு நாள் வேட்டைகாரனாய் சதுப்புநில காட்டிற்கு சென்றார். காட்டில் இருந்த அனைத்தும் வில்லையும், வேட்டைக்காரனையும் பார்த்து பயந்து ஓடிவிட்டன.

இந்த முறை உஷாரான அவர் காட்டைவிட்டு கடலுக்கு படகில் சுறா பிடிக்க சென்றார். முடியுமா அவரிடம்? சிக்கியது ஒரு சுறா. நண்பகலில் "சன்" வெளிச்சத்தின் உதவியோடு இந்த சுறாவாவையாவது பிடித்துவிடலாம் என நப்பாசையோடு இழுத்துப்பார்த்தார் முடியவில்லை. கிழிந்ததுதான் மிச்சம் நைலான் வலை,.. ஒரு கட்டத்தில் உதவி தந்த தந்த சன்னும் ஓடிப்போக இருட்டில் தனியே படகுடன் நின்றார். இருக்கிற ஒரே ஒரு படகையும் விட்டுவிடக்கூடாதென அதற்கே இப்போது காவலனாய் இருக்கிறார் ஒரே ஒரு வேலாயுதத்தை வைத்துக்கொண்டு கடும் கோபமாய்,... "ஆடுங்கடா என்னை சுத்தி,.. நான் அய்யனாரு வெட்டுக்கத்தி",...

எப்போது விடியும்????,. (அவருக்கல்ல நமக்கு,..)

மேலேயுள்ள கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தில் உள்ளது சுறாவையல்ல,.. திமிங்கலத்தையே பிடித்த ரியல் ஹீரோஸ்,..






ஆக மொத்தம் சிவகாசியில தோட்டா வாங்கி, குருவிக்காரண்ட்ட துப்பாக்கியை புடுங்கி, காவலன் மூலமா நம்மை மறுபடியும் சுட்டுடாங்கப்பா,..

செத்து செத்து விளையாடுறதே நம்ம பொழப்பா போச்சு,..

.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ரிஸ்க் எடுக்கலாமா?

கதை 1

ஒரு ஊரில் ஒரு கண்டிப்பான மேனேஜர். இருந்தார். அவருக்கு எல்லாரும் மிக சரியாக வேலை செய்ய வேண்டும், ஓபி அடிக்கக்கூடாது என்பதில் மிக கண்டிப்பானவர். ஆனால் அவர் மிக நல்லவர் என எல்லோரும் புகழ வேண்டும் நினைப்பவர். (அவர் பெயர் ஜோதி இல்லை என்பது இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்குமே,..)

கம்பேனி நஷ்டமானாலும் CEOவும் அவரின்பால் மிக்க மரியாதை வைத்திருந்தார். உன்னுடைய கண்டிப்பே உன் பலம் பார்த்தசாரதி என அடிக்கடி புகழ்வார்.

அன்று பார்த்தசாரதி CEOவுடன் ரவுண்ட்ஸ் முடித்து திரும்பினார். அப்போது அவர் ஆபீஸ் வாசலில் பைலுடன் உட்கார்ந்தவாரே பெஞ்ச்சில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கண்டதும் அவருக்கு கோபம் தலைக்கேறியது. உள்ளே வரசொல்லிவிட்டு அறைக்குள் சென்று நேராக பீரோவை திறந்தார்.

"இந்தா பத்தாயிரம் உன் மூணு மாத சம்பளம், இனிமேல் இந்தபக்கம் தலை வைத்துபடுக்காதே, கிளம்பு"

"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

"கிளம்புரியா, இல்லை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளவா????,.. எல்லாரும் நல்லா கவனிச்சுகுங்க, ஒழுங்கா வேலை செய்யலைன்னா,. எல்லாம் வீட்டுக்கு போக வேண்டியதுதான்"

CEO முன் முகம் சிவப்பாகி கர்ஜித்தார். பயத்தில் தூங்கியவன் ஓடிவிட்டிருந்தான்.

" இந்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையா பார்த்தசாரதி??"

"வேற வழி இல்லை சார், இல்லைன்னா நமக்கு வர்ர நஷ்டம் ஜாஸ்தியாகிட்டே இருக்கும், என்னம்மா ரோசி பயந்துட்டியா" ஸ்டேனோவைப்பார்த்து கேட்டார்,.

"இல்லை சார், வந்தது என் சொந்தக்காரர்தான் resume கொடுக்க வந்திருந்தார். நீங்க கத்தியதில் பயந்து ஓடிட்டார்,.. நாளை அந்த பத்தாயிரத்தை வாங்கி கொடுத்திடுரேன், sorry sir"

இப்போ CEO பீரோவை திறந்து கொண்டிருந்தார்,.

நமக்கு ஆப்பு வர்ரணும்னா அது நம்மளாலதான் வரும்,..Assumptions are always dangerous.


----------------------------------------------------------------------------------------------
கதை 2

ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவன் மிக்க கடவுள் பக்தி கொண்டவன். அதுவும் அவனிற்கு விநாயகர் என்றால் மிக்க இஷ்டம். அவனிற்கு ஒரு காதலி இருந்தாள். அவளுடன் இணைய வேண்டும் என்று அவனிற்கு மிக்க ஆசை.




ஒரு நாள் கடவுளிடம் தான் ஒரு கணமாவது அவளுடன் இணைய வேண்டும் என்ற தன் அவாவை சொன்னான். முதல்முறை நம்மிடம் ஒன்று கேட்கிறானே என பிள்ளையாரும் ஒப்புக்கொண்டார்.

அவன் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தான். அவனுடன் இணைவது ஒரு "Fevicol bond" போல இருக்கவேண்டும் என விரும்பினான்.

அடுத்த நாள் அவள் காதலியிடம் பேசிப்பார்க்கலாம் என பிள்ளையார் அவளிடம் அவன் வேண்டுகோளை சொன்னார்.

"பிள்ளையாரே, நான் இன்னோருவரை காதலிக்கிறேனே,.." இது அவள்.

பிள்ளையாரும் "கவலைப்படாதே,.. நான் உன் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்,.. நீ என் வேண்டுகோளை நிறைவேற்று" என்றார்.

"சரி, அவனுடன் ஒரு கணம் இணைவது எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை. அதற்கு உன் மேற்பார்வார்வையில், ஆசியுடன், சாட்சியுடன் தான் நடக்க வேண்டும் என சொன்னாள். பிள்ளையாரும் என் ஆசி கண்டிப்பாக உனக்கு உண்டு என சொன்னார்.



அடுத்த நாள் காலையில் அவர்கள் இருவரும் இரண்டரக் கலந்தார்கள்,..

எப்படி,..???

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்படிதான்,.

again "Assumption always dangerous".

[ அய்யயோ,... இந்த பதிவு எனக்கு நானே வெச்சுக்கிர ஆப்பு மாதிரி இருக்கே, ஆப்புன்னாலும் சமாளிக்கிடலாம்,.. தோப்புன்னா என்ன பணறது?? ],....



.

சனி, 18 செப்டம்பர், 2010

அட்டகாசமான ஒரு பாலைவன பயணம்,..

கத்தாரில் அட்டகாசமான ஒரு பாலைவன பயணம்,..

கத்தாருக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்டாலும் இங்கு எங்கும் சுத்தவில்லை. அதற்கு அவசியம் ஏதும் இல்லை என்பதே என் அனுமானமாக இருந்தது. பச்சையான அழகான கிராமத்திலிருந்து வந்த எனக்கு இந்த ஊர் சுத்தமாக பிடிக்கவில்லை. (அப்படிதான் சொல்லுவேன்,.. காரணம், சென்னையில் ஆரம்பித்து திண்டிவனத்திற்குள் இந்த ஊர் முடிந்துவிடும்),.. இருந்தாலும் குடும்பம் இல்லாமல் பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்ததால் ரமதான் விடுமுறைக்கு வெளியே கிளம்பினோம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மறக்கமுடியாத நினைவாக பதிந்துவிட்டது.

நாங்கள் ஒரு 18 பேர் மூன்று வாகனத்தில் கிளம்பினோம். பாலைவனம் 70 கிமீ தூரம். அதை 45 நிமிடத்தில் அடைந்தாச்சு.

முதலில் ஒட்டக சவாரி,. நாங்க போய் உட்கார்ந்தவுடன் ஒட்டகம் கத்திய கதறல் மனசை என்னவோ செய்தது,.. போட்டோ மட்டுமே எடுக்கமுடிந்தது,.. (ச்சீ ச்சீ பயமெல்லாம் இல்லைங்க,..). நாம ஏறி உக்காந்து ஒட்டகம் செத்துப் போச்சுன்னா அப்புறம் வெள்ளைத் துணி போட்டு ஒட்டகம் மேய்க்க வேண்டியதுதான், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நண்பர்களை ஏற்றிவிட்டு ஒரு க்ளிக்,..







பிறகு பாலைவனத்தை சுற்றிப்பார்க்கும் சவாரி. என்னை சுத்திலும் மணலை இங்குதான் பார்க்கிறேன். மெதுவாக சீராக கொண்டிருந்த வண்டி ஒரு கணத்தில் 70 டிகிரீ கோணத்தில் மேலே ஏறி (செங்குத்தாக??) சராலென கீழே இறங்க ஆரம்பித்தது. வைரமுத்து எழுதிய வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாமல் ஓடுகிற உருண்டையின் அர்த்தம் அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அதன் படங்கள் வரிசையாக உங்களின் பார்வைக்கு,..






வெள்ளை நிறத்தில் ஒரு மண்ணை நான் இங்குதான் பார்க்கிறேன். அடுத்த படத்தில் செங்குத்தாக இறங்கும் வாகனம்





கரணம் புரண்டாலும் மரணம்,..(சீட்பெல்ட்டெல்லாம் இருக்கு,.. இருந்தாலும் நமக்கு நேரம் சரி இல்லைன்னா என்னவேணாலும் நடக்கும்),. கீழே உள்ள முதல் படத்தில் வண்டியின் பின்னால் பறக்கும் மணல், வண்டி செல்லும் வேகத்தை சொல்லும்,.




சில நேரங்களில் கீழேயிருந்து மேலே வருகிற வாகனங்கள் தெரியாது,..பின் என்ன?? கிஸ் கிஸ்தான்,. நாம் க்ரஸ் க்ரஸ்தான்,.



இந்த பாலை வனத்திலும் இப்படி ஒரு தெளிவான நீர் பரப்பா?? மிக்க ஆச்சர்யப்பட்டு போனேன்,.




பிறகுதான் கடல் உட்புகு நீர் (backwater) என்று தெரிந்தது. கீழே உள்ள படம் நான் தான்,..எனக்கு கிழே ஒரு 60 அடி இறக்கம்,.. அதனால்தான் வயிற்றில் ஒரு கலக்கம்,. ஹி ஹி,.


ஒரு வழியாக சவாரி செய்துவிட்டு எங்களுக்கென டிராவல்ஸ் ஒதுக்கி இருந்த அந்த கேம்ப்பை வந்தடைந்தோம்,.






உடை மாற்றிவிட்டு வாலிபால் ஆடினோம்,..(எவ்வளவு நாளாச்சு இப்படி வியர்க்க வியர்க்க வாலிபால் விளையாடி,..)





பின்னர் ஆசைதீர ஒரு ஜலக்கீரிடை,.. கடல் உப்புத் தண்ணீயானாலும் ஆழமில்லாத தெளிவான நீர்,..



பின் சாப்பிட்டுவிட்டு (சர்ர்ர்ர்ர்ரிரி) நிம்மதியான ஒரு உறக்கம்,..

அடுத்த நாள் சூரிய உதியத்தை பார்த்துவிட்டு கடற்கரை ஓரமாக மீண்டும் தோகாவை நோக்கி,..



நாங்கள் நிற்பது ஒரு உச்சி,..


ம்ம்ம்ம்,... அவ்வளவுதான் ரமதான் விடுமுறை முடிஞ்சு போச்சு,.. இனிமேல் என்ன செக்கிழுக்க வேண்டியதுதான்,.. என்ன கொடுமை இது??? ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம ECR ரோட்ல பைக்ல சுத்தறது மாதிரி வருமா?? கரெக்கிட்டா நான் சொல்றது???

.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பல்கலைகழகங்கள் எக்ஸ்போர்ட் நிறுவனங்களா??

இது இன்று படித்த தகவல்,..



"சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராஜசேகர் ஷாம், பல்கலைக்கு நன்கொடையாக வழங்கிய 18 கோடியே 60 லட்சம் ரூபாயில் மாணவர் விடுதி மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும்,''

இது இன்று நான் தினமலரில் படித்தது.

மிக பெருமையாக இருந்தது. ஒரு கணம் யோசித்தால் "பக்" என்று இருக்கிறது. ஆம் நாம் நம் ஆயுளின் பாதிக்கணக்கை முடித்துவிட்டோம். இது வரை நம் வாழ்ந்த நாட்களுக்கு என்ன செய்துவிட்டோம். இனி வாழப்போற நாட்களுக்கு என்ன செய்யப்போகிறோம். யாருக்கு? யாருக்கோ,.. அது சத்தியமாக நான் இல்லை,.. குடும்பம் இல்லை, நட்பு இல்லை. யாருக்கோ அவன் ஒரு சக மனிதன். கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. பதில் இல்லாமல் இல்லை. தேட வேண்டும் அவ்வளவுதான்.

இந்த ராஜசேகர் உண்மையிலேயே க்ரேட்,.. இந்தியப்பணத்தை கொள்ளையடித்து ஸ்வர்ட்ஜ்லாந்தில் கொண்டு சேர்க்கும் கூட்டம் பிறந்த அதே ஊரில் பிறந்து சென்னைப்பல்கலைகழத்தில் படித்து,.. வெளி நாடு சென்று உழைத்து சம்பாரித்து,.. தன் உழைப்பை தன் வருங்கால இளைய தலைமுறைக்கு விட்டு செல்லுகிற இந்த பெருங்குணம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.??? சொல்ல வார்த்தை இல்லை. திரு ராஜசேகர்,.. உங்கள் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்,.. உங்கள் உழைப்பு அடுத்த தலைமுறைக்கு செல்கிறதா என்பதை தயவு செய்து கவனிக்காதீர்கள்,..அரசிலும் பல்கலைகழகத்திலும் உள்ள மத்திய தலைமுறைகள் அதை சர்ர்ர்ர்ரிய பயன்படுத்திக் கொள்ளும்,.. நாங்கள அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் "அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, அரசு மருத்தவ கல்லூரி போண்றவைகள் என்னை பொறுத்தவரை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் நிறுவனங்கள்" என்று சாணியடித்துக் கொண்டிருப்போம்... கண்டுக்காதீங்க,.. ஆனால் அடுத்த தலைமுறை அதில்தான் படித்து முன்னேறும்,. அங்கே வகுப்பு எடுக்கிறார்களா என்பது யாருக்கும் தெரியாது,. அங்கே உள்ள செய்முறை வகுப்புகள் எந்த அளவிற்கு உலகத் தொழில் நுட்பத்தில் பின் தங்கி உள்ளன என்பது யாருக்கும் தெரியாது,..விடுதிகள் எந்த நிலையில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது,..ஆசிரியர்/சாதி அரசியல் எந்த அளவிற்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்ததலைமுறையும் அதில்தான் இரவு பகல் பாராது படிக்கும்,.. முன்னேறும்,..

நீங்கள்விட்டு சென்ற ஜோதி அணையாமல் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் அவசியம்.

நம் உழைப்பினை, அறிவை, அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவேண்டும் என்பது எத்தனை பேருக்கு இருக்கிறது (இதில் கூட உள் நாடு, வெளி நாடு இந்தியர்கள் என தயவு செய்து பிரிக்கவேண்டாம்,..),..சிறந்த அறிவு கொண்டபவர்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப பள்ளியிலோ, கல்லூரியிலோ வருடத்திற்கு ஏன் ஒரு நாள் வகுப்பெடுக்க கூடாது, சிறந்த அனுபவம் கொண்டபவர்கள் ஏன் வேலையில்லா நண்பர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டக் கூடாது,.. நல்ல ஊதியதினை உழைப்பின் மூலம் பெற்றவர்கள் ராஜசேகர் போல முயற்சி பண்ண கூடாது??,.. நம்மிடம் பதில்கள் இல்லாமல் இல்லை,. தேட வேண்டும் அவ்வளவுதான்,..



வியாழன், 16 செப்டம்பர், 2010

நமக்கு காதல் வந்து விட்டதை எப்படி தெரிந்து கொள்வது???

நம் காதலுக்கு நம் காதலி ஓகே சொல்றது இருக்கட்டும். நாம் காதலில் விழுந்துவிட்டோம் என்பதை நாமே எப்படி தெரிந்து கொள்வது???

  • மனசு ஒரே பக்கம் சுத்திக் கொண்டிருக்கும். அது ஒரு பிகரின் பக்கமாக இருக்கவேண்டும் என சொல்ல வேண்டியதில்லை. துரதிர்ஷ்டவசமாக மூன்றாம் நபரின் கண்களுக்கு அந்த பிகர் பேய் மாதிரி இருந்தாலும் அது பற்றி கவலையில்லை.
  • நண்பர்கள் தொடர்பு குறையும்.அதற்காக பிகருடன் தொடர்பு அதிகரித்துவிட்டது என அர்த்தமில்லை. பிகருடன் எப்படி பேசுவது என்ற யோசனையில் காலத்துடன் நாம் தனித்திருக்கும் நேரம் அதிகரிக்கும். மூளை முழுக்க அதுக்கு மட்டுமே செலவழிக்கப்படுவதால் படிப்பிற்கும் நமக்கும் தொடர்பு அத்துப்போகும். தேர்வில் முட்டை வாங்கி அதை வேக வைத்து சாப்பிட்டாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஆகையால் வகுப்பில் முதல் இடத்தில் வருவோம், கடைசியிலிருந்து!!!!!!!!!!!.

  • காதலியுடன் தொத்திக்கொண்டே செல்லும் அவள் தோழி பேயாக தெரியும். எப்போதோ தனியே வரும் நம் ஆளுடன் பேசலாமெனப் பார்க்கையில், நம் கூடவிருக்கும் நமது நண்பர்கள் நாயாக தெரியும்.

  • நண்பர்களுக்கு தொத்தலாக தெரிவது நமக்கு ஸ்லிம்மாக தெரியும். நண்பர்களுக்கு தொப்பையாக தெரிவது நமக்கு கட்டையாக தெரியும். நமக்கு அழகான மாதுளை தோரணாமாக தெரிகிற பற்கள் நண்பர்களுக்கு கூரான மாவிலை தோரணமாக தெரியும். நமக்கு மின்னலாக தெரிகிற பார்வை நண்பர்களுக்கு 1.5 பின்னமாக தெரியும். நமக்கு பொழிவான நிலவாக தெரிகிற முகம், நண்பர்களுக்கு மலிவான டாஸ்மார்க்காக தெரியும்,.. இப்படி நிறைய்ய இடம்மாறு தோற்றப்பிழைகள்.


  • மணிக்கணக்கில் காத்திருப்போம், நிறைய்ய்ய்ய பொய் சொல்வோம், அடிக்கடி முகம் கழுவி கண்ணாடி பார்ப்போம், தனியாக சிரிப்போம், பொய்யாக கோபப்படுவோம். மெய்யாக பைத்தியமாவோம். பசிக்கும் ஆனா சோறு இறங்காது, இரவு வரும் ஆனா தூக்கம் வராது,..தூக்கத்தில் முனங்குவோம், நேரத்திற்கு தூங்கமாட்டோம்,.. ஆனா நேரத்திற்கு விழிப்போம், பல் தேய்க்கப்போவோம் ஆனாலும் மறந்து குளித்துவிட்டு வருவோம். பரிட்சை எழுத போவோம் ஒண்ணும் தெரியாமல் முழித்துவிட்டு வருவோம்.


  • மனசு பட்டாம்பூச்சியாய் சிறகை விரிக்கும். பர்சு கொட்டாங்குச்சியாய் இழந்து நிற்கும்.


  • நேற்று இனிப்பான கனவாக இருக்கும், இன்று படபடக்கும் பட்டாம்பூச்சியாக இருக்கும், நாளை ,.???? அதைப்பற்றி என்ன கவலை,..




(பி.கு இந்த கவலை இல்லைன்னா கண்டிப்பா உங்க காதல் கைகூடும்,... ஏன்னா அந்த எதிர்கால கவலைல்லதான் நிறைய லவ்வு புட்டுக்குது,..)

ஆக மொத்தம்,..

மொபைலில் சார்ஜ் இருக்காது, airtel சிம்மில் பைசா இருக்காது,..வகுப்பில் வருகை இருக்காது, அதனால் பரிட்சையில் மார்க் இருக்காது, பேச்சில் உண்மையிருக்காது, நாக்கில் சத்தியம் இருக்காது, ஆனால் ஆச்சர்யம் வாயில் நாற்றமிருக்காது,. பர்சில் பணமிருக்காது, நெஞ்சில் பயமிருக்காது,..



இந்த இல்லை எல்லாம் ஆமாவா? அப்படின்னா சாரி,.. நீங்க லவ்வுதான் பண்றீங்க,..

உங்களுக்காக ஒரு பிகர் பண்ணிக்கிட்டு இருக்கு.கிளம்புங்க,.. நான் எப்ப yahoo mail வந்தாலும் என்னை டிஸ்டர்ப் பண்ர இந்த பொண்ணு கூட கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்துட்டு உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்றேன்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

பார்க்க சிரிக்க,..

உண்மையிலியே ரொம்ப நாளாச்சு. சமீப காலமாக பொருளாதாரத்தை காரணமாக காட்டி எங்களிடம் கம்பெடுத்து வேலை வாங்குவதால் பதிவைப்பற்றி நினைக்க கூட நேரமில்லை,.. இருந்தாலும் மாதம் ஒரு முறை நண்பர்களின் பதிவுகளை வந்து படிப்பதுண்டு. அங்கேயும் தூற்றல், கிண்டல், நையாண்டி, கோஷ்டி கானம், மிரட்டல், இப்படி நிறைய,.. அடச்சை என தோணும்,.. இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த பதிவு (முடியலைல.... ஆம்,.. இன்னும் முன்னுரை முடியல)

முன்னை மாதிரி இல்லை. சீரியசான பதிவு போட்டால் இப்போது எல்லாரும் வந்து கும்மு கும்முவதால் ஒரு காமெடி பதிவு (அதுவும் சொந்தமில்லை,...மெயிலில் வந்த படங்கள்தான்,.ஹி ஹி)